Published:Updated:

ஐ.சி.சி... தீர்ப்பை மாத்தி சொல்லேய்!

உலகக்கோப்பை
பிரீமியம் ஸ்டோரி
உலகக்கோப்பை

கிரிக்கெட்டின் பிறப்பிடத்திற்கு முதல் முறையாக உரிமையோடு சென்றிருக்கிறது உலகக்கோப்பை.

ஐ.சி.சி... தீர்ப்பை மாத்தி சொல்லேய்!

கிரிக்கெட்டின் பிறப்பிடத்திற்கு முதல் முறையாக உரிமையோடு சென்றிருக்கிறது உலகக்கோப்பை.

Published:Updated:
உலகக்கோப்பை
பிரீமியம் ஸ்டோரி
உலகக்கோப்பை

ங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் மோதிய இந்த உலகக்கோப்பையின் ஃபைனல் சூப்பர் ஓவர் வரை சென்று, அதிலும் டை ஆகி, கடைசியில் பவுண்டரி கணக்கில் முடிவாகியுள்ளது. சொல்லப்போனால், ஒரு மிகப்பெரிய தொடரின் கடைசி நாள், சில சர்ச்சைகளையும் பல கேள்விகளையும் எழுப்பியுள்ளது.

இறுதிப்போட்டியில் மட்டும் மூன்று முறை நடுவர்களின் தீர்ப்பு, ரிவ்யூ முறையால் மாற்றப்பட்டது. நியூசிலாந்து அணிக்கு ரிவ்யூ இல்லாதபோது, ஒரு தவறான முடிவால் ராஸ் டெய்லரின் விக்கெட்டை இழக்கவும் நேரிட்டது. அப்படிப்பட்ட நிலையில், ரிவ்யூவை முன்பே பயன்படுத்திய குப்திலைத்தான் பெரும்பாலானவர்கள் சாடினார்கள். ஆனால், நடுவர்களின் தவறான முடிவுகள் எப்படியான பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்பதைப் பற்றிக் கேள்விகள் கேட்கப்படவில்லை. இந்த முழுத்தொடரிலும், குமார தர்மசேனாவின் முடிவுகள் 4 முறை ரிவ்யூவால் மாற்றப்பட்டுள்ளன. ரிச்சர்ட் கெட்டில்பரோவின் முடிவுகள் 5 முறை மாற்றப்பட்டுள்ளன. இப்படி ஒவ்வொரு முன்னணி நடுவரின் பல முடிவுகளும் ரிவ்யூவுக்குப் பிறகு மாறியுள்ளன. இப்படி இருக்கையில், நடுவர்கள்மீது ஐ.சி.சி எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சில வாரங்களுக்கு முன்பு, ‘இதுவே கால்பந்து நடுவர்கள் தவறு செய்திருந்தால், ஃபிஃபா அவர்களைத் தூக்கி வீசியிருக்கும்’ என்று சொல்லியிருந்தார் வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் மைக்கேல் ஹோல்டிங். வர்ணனையில் இருந்தவர் நடுவர்களைக் குறைசொல்ல, அவரைத்தான் எச்சரித்தது ஐ.சி.சி. ஆனால், அம்பயர்களை அப்படியே விட்டுவிட்டது. ஐ.பி.எல் தொடருக்குப் பிறகு, உலகக்கோப்பை என்ற மிகப்பெரிய தொடரிலும் தொடர்வது கிரிக்கெட்டுக்கு நல்லதல்ல.

ஐ.சி.சி... தீர்ப்பை மாத்தி சொல்லேய்!

அடுத்து, பவுண்டரிகளின் அடிப்படையில் எப்படி வெற்றியாளரை முடிவு செய்யலாம் என்கிறார்கள் பலர். அதனால், இங்கிலாந்து உலகக்கோப்பையை வென்றது சரியில்லை என்கிறார்கள். விதி தவறுதான். ஆனால், அதன் அடிப்படையில்தான் அந்தப் போட்டி ஆடப்பட்டிருக்கிறது எனும்போது அதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

உண்மையில், பவுண்டரி விதி என்பதைவிட, சூப்பர் ஓவர் விதியே பிரச்னையாகத்தான் தெரிகிறது. ஒருநாள் போட்டிகளும், டி-20 போட்டிகளும் ஒன்று கிடையாது. ஒரே அணுகுமுறையில் இரண்டையும் விளையாடிவிட முடியாது. அப்படியிருக்கையில், டி-20 போட்டிகளுக்காக வகுக்கப்பட்ட ஒரு விதியை ஒருநாள் போட்டியில் பயன்படுத்துவது சரியாகுமா, 100 ஓவர்கள் நடந்த ஒரு போட்டியின் முடிவை, 2 ஓவர்கள் தீர்மானிப்பது சரியாகுமா?!

பெரிதாக சர்ச்சையாகாத, ஆனால் விவாதிக்கப்பட வேண்டிய ஒரு முக்கியமான விஷயம் - வில்லியம்சனுக்குக் கொடுக்கப்பட்ட தொடர் நாயகன் விருது. ‘578 ரன்கள் அடித்தார், ஜென்டில்மேனாக நடந்துகொண்டார், அணியைச் சிறப்பாக வழிநடத்தினார்’ என்று சொல்லி அவருக்கு அந்த விருது கொடுக்கப்பட்டுள்ளது. பேட்ஸ்மேனாக வில்லியம்சனின் செயல்பாட்டையும், அவரது கேப்டன்ஷிப்பையும் ஏற்றுக்கொள்வோம். ஏன் அதில் ஜென்டில்மேன் என்ற விஷயத்தைச் சேர்க்க வேண்டும். கிரிக்கெட்டை அமைதியான வீரர்கள் விளையாடுவதுதான் சரி என்ற ஒரு தவறான புரிதலை இது ஏற்படுத்தும்.

606 ரன்கள் அடித்ததோடு, 11 விக்கெட்டுகள் வீழ்த்தி, வங்கதேச அணியின் ஒட்டுமொத்தச் செயல்பாட்டையும் தாங்கிய ஷகிப் அல் ஹசன் இந்த விருதுக்குத் தகுதியானவர் இல்லையா? வில்லியம்சன் நியூசிலாந்தை வழிநடத்தினார் என்றால், ஷகிப் ஒரு கத்துக்குட்டி அணியைப் பறக்கவிட்டிருக்கிறார். அதுவும் பெரிய விஷயம்தான். சொல்லப்போனால், அதுதான் மிகப்பெரிய விஷயம். ஒரு சிறிய அணியின் அடுத்த தலைமுறையை, அந்த விருது எந்த அளவிற்கு ஊக்குவித்திருக்கும்?!

கிரிக்கெட் விதிகளைப் பற்றிய கேள்விகள் சமீபமாக அதிகமாகியிருக்கின்றன. அதற்கான பதில்களை ஐ.சி.சி சரியான முறையில் சொல்ல வேண்டும். அந்த அவசியத்தை ஏற்படுத்திய விதத்திலும் இந்த உலகக்கோப்பை சக்சஸ்தான்!