Published:Updated:

இரட்டை வாள்வீச்சு; சிலம்பம்! - சர்வதேசப் போட்டியில் சாதித்த ஈரோடு கீர்த்தனா

இன்றைக்குப் பெண்களுக்குத் தற்காப்பு தேவைப்படுகிறது. என்னுடைய ஊரில் எதிர்காலத்தில் சிறிய அளவிலான ஒரு சிலம்பப் பள்ளியை ஆரம்பித்து, பெண்களுக்குச் சிலம்பம் கற்றுக்கொடுக்க வேண்டுமென்ற ஆசையும் இருக்கிறது.

கீர்த்தனாவை வரவேற்கும் ஊர்மக்கள்
கீர்த்தனாவை வரவேற்கும் ஊர்மக்கள்

சுற்றும் சிலம்பத்தின் உயரம்தான் இருப்பார் கீர்த்தனா. ஆனால், அந்தச் சிலம்பத்தை வைத்து சர்வதேச அளவில் அவர் சுழன்றடித்துக் குவித்துவரும் பரிசுகள் ஏராளம்.

ஈரோடு மாவட்டத்தின் கடைக்கோடி எல்லையான தாளவாடி மலையில் இருக்கும் ராமபுரம்தான் கீர்த்தனாவின் சொந்த ஊர். சிறுவயதிலிருந்தே விளையாட்டில் பேர் வாங்க வேண்டுமென நினைத்த கீர்த்தனாவின் கண்ணில் தென்பட்டது சிலம்பம். கன்னடத்தைத் தாய்மொழியாக எடுத்துப் படித்தவர், தமிழரின் பாரம்பர்ய விளையாட்டான சிலம்பத்தைக் கையிலெடுத்து அசத்தி வருகிறார்.

கீர்த்தனாவை வரவேற்கும் ஊர்மக்கள்
கீர்த்தனாவை வரவேற்கும் ஊர்மக்கள்

கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டு மாவட்ட, மாநில அளவிலான போட்டிகளில் கலந்து பரிசுகளை வாரிக் குவித்தவர், சமீபத்தில் மலேசியாவில் நடந்த சிலம்பப் போட்டியில் இந்தியா சார்பில் கலந்துகொண்டு இரண்டு தங்கப் பதக்கங்கள் மற்றும் ஒரு வெண்கலப் பதக்கத்தைப் பெற்றிருக்கிறார். போட்டியை முடித்துவிட்டு நேற்று சொந்த ஊருக்குத் திரும்பி கீர்த்தனாவிற்கு மேள தாளத்துடன் ஊர்மக்கள் பெரும் வரவேற்பு கொடுத்தனர்.

கீர்த்தனாவிடம் பேசினோம். ``அக்டோபர் 2-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை மலேசியாவில் உள்ள கேடாக் நகரில் ‘உலக சிலம்ப சாம்பியன்ஷிப் போட்டி’ நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்தியா, இலங்கை, பங்களாதேஷ், மலேசியா உட்பட 7 நாடுகளைச் சேர்ந்த சுமார் 500-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். அதில், இரட்டை வாள்வீச்சு மற்றும் குழு கம்பம் வீச்சுப் போட்டியில் தங்கப் பதக்கத்தைப் பெற்றிருக்கிறேன். மேலும், தொடுமுனைப் போட்டியில் வெண்கலப் பதக்கத்தைப் பெற்றிருக்கிறேன்” என்றார்.

குடும்பத்தினருடன் கீர்த்தனா
குடும்பத்தினருடன் கீர்த்தனா

தொடர்ந்து நம்மிடம் பேசியவர், ``ஸ்பான்சர்களின் உதவியால்தான் இந்தப் போட்டியில் என்னால் கலந்துகொள்ள முடிந்தது. எனவே, எங்களைப் போன்ற சாதிக்கத் துடிக்கும் வீரர்களுக்கு அரசு உதவிகளைச் செய்ய வேண்டும். இப்படியான உலகளவிலான போட்டிகளில் விளையாடுவதன் மூலமாக, நம்முடைய வீரர்களுக்குச் சாதிப்பதற்கான ஊக்கம் கிடைப்பதோடு, பல நுணுக்கங்களையும் கற்க வசதியாக இருக்கும். எதிர்காலத்தில் இன்னும் நிறைய பதக்கங்களை வெல்வேன் என்ற நம்பிக்கையிருக்கிறது. இன்றைக்குப் பெண்களுக்கு தற்காப்பு தேவைப்படுகிறது. என்னுடைய ஊரில் எதிர்காலத்தில் சிறிய அளவிலான ஒரு சிலம்பப் பள்ளியை ஆரம்பித்து, பெண்களுக்குச் சிலம்பம் கற்றுக்கொடுக்க வேண்டுமென்ற ஆசையும் இருக்கிறது” என்றார் உற்சாகத்துடன்.

வாழ்த்துகள் கீர்த்தனா!