Published:Updated:

தேசியக் கொடியில் நிலவு... நிலவில் தேசியக் கொடி! - ஹர்பஜன் ட்வீட் #Chandrayaan2

எம்.குமரேசன்

ஹர்பஜன் சிங் சற்றே வித்தியாசமாகத் தன் வாழ்த்தை தெரிவித்துள்ளார்.

ஹர்பஜன் சிங்
ஹர்பஜன் சிங்

640 டன் எடையுடன் 43.3 மீட்டர் உயரம் கொண்ட பாகுபலி ராக்கெட்டான ஜி.எஸ்.எல்.வி மார்க் 3 ராக்கெட்டை இந்தியா நேற்று விண்ணில் ஏவியது. இந்த ராக்கெட் 3.8 டன் எடை கொண்ட சந்திரயான்-2 விண்கலத்தை விண்ணில் கொண்டுசென்று, புவி வட்டப் பாதையில் நிலைநிறுத்தியது. சிறிது காலம் புவி வட்டப் பாதையைச் சுற்றி வரும் சந்திரயான்-2, பின்னர் நிலவின் புவி வட்டப் பாதைக்கு மாறிப் பயணித்து சந்திரனில் ரோவர் ஆய்வு கலத்தை தரையிறக்கும்.

சந்திரயானை சுமந்து செல்லும் ராக்கெட்
சந்திரயானை சுமந்து செல்லும் ராக்கெட்

சந்திரயான் வெற்றியடைந்ததையடுத்து, விளையாட்டு வீரர்களும் இஸ்ரோவுக்கு வாழ்த்து தெரிவித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, ``இந்தியாவின் மற்றொரு வரலாற்றுத் தருணம்... ஜெய்ஹிந்த்'' என்று ட்விட்டர் வழியாக இஸ்ரோவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். ``வருங்காலத்தில் சந்திரயான் போலவே பல சாதனைகளை இஸ்ரோ படைக்க வேண்டும்'' என சச்சின் தன் வாழ்த்தில் கூறியுள்ளார்.

அதேவேளையில், ஹர்பஜன் சிங் சற்றே வித்தியாசமாகத் தன் வாழ்த்தை தெரிவித்துள்ளார். தன் ட்வீட்டில், தேசியக் கொடியில் நிலவின் புகைப்படத்தைக் கொண்ட நாடுகளின் தேசியக் கொடிகளைப் பதிவிட்டுள்ளார். அதில், பாகிஸ்தான் தேசியக் கொடி முதலிடத்தில் உள்ளது. தொடர்ந்து, அல்ஜீரியா, துருக்கி, மாலத்தீவு, துனிஷியா, லிபியா, மலேசியா, அசர்பைஜான் போன்ற நாடுகளின் தேசியக் கொடிகள் இடம் பெற்றுள்ளன.

ஹர்பஜன் ட்வீட்
ஹர்பஜன் ட்வீட்

முதல் வரியில், `பல நாடுகள் தேசியக் கொடியில் நிலவை கொண்டிருக்கின்றன' என்றும் இரண்டாவது வரியில் `சில நாடுகள் நிலவில் தேசியக் கொடியைப் பதிக்கின்றன' என்றும் ஹர்பஜன் ட்வீட் செய்துள்ளார். இரண்டாவது வரியில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இந்திய நாடுகளின் தேசியக் கொடிகள் அவரின் பதிவில் இடம் பெற்றுள்ளன. இந்த நாடுகள் சந்திரன் குறித்த ஆராய்ச்சியில் வெற்றி பெற்றவை என்பது குறிப்பிடத்தக்கது.