Published:Updated:

`உங்க வேலையை மட்டும் பாருங்க அபினவ்'- தகித்த மேரி கோம்; திகைக்கும் குத்துச்சண்டை சம்மேளனம்!

பிந்த்ரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்றவர் என்றால் நானும் உலக சாம்பியன் போட்டியில் நிறைய தங்கங்களை வென்றுள்ளேன் என மேரி கோம் பேசியுள்ளார்.

மேரி கோம்
மேரி கோம்

குத்துச்சண்டை விதிகள் குறித்து உங்களுக்கு என்ன தெரியும். உங்கள் விளையாட்டில் நான் தலையிட்டதில்லை. அதேபோல், நீங்களும் இருந்தால் நன்றாக இருக்கும் என அபினவ் பிந்தராவை கடுமையாக சாடியுள்ளார் மேரி கோம். அபினவ் பிந்த்ரா, மேரி கோம் இருவரும் உலக அரங்கில் இந்தியாவுக்குப் பெருமையைத் தேடித்தந்தவர்கள். மேரி கோம் இந்தியாவில் பல பெண்களுக்கு ரோல் மாடலாக இருக்கிறார். மேரி கோம் இவ்வளவு காட்டமாக பேசும் அளவுக்கு இருவருக்கும் இடையே என்னதான் பிரச்னை எனக் கேட்கிறீர்களா. அபினவ், மேரி கோம் இருவருக்கும் இடையே நேரடியாக எந்தப் பிரச்னையும் இல்லை. குத்துச்சண்டை வீராங்கனை நிகத் ஜரினுக்கு ஆதரவாக அபினவ் பேசியதே மேரி கோம் கோபத்துக்குக் காரணம்.

Abhinav Bindra
Abhinav Bindra

அடுத்தாண்டு ஜூலை மாதம் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடக்கவுள்ளது. இதற்கான தகுதிச்சுற்று போட்டிகள் பிப்ரவரியில் நடக்கிறது. குத்துச்சண்டை போட்டியில் மேரி கோம் 51 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்று விளையாடி வருகிறார். இதேபிரிவில் நிகத் ஜரீனும் பங்கேற்று வருகிறார். டோக்கியோ ஒலிம்பிக் தகுதிச்சுற்றுக்கு மேரிகோமை அனுப்புவதற்கு குத்துச்சண்டை சம்மேளனம் முடிவு செய்துள்ளது. இது நிகத் ஜரீன்னுக்கு ஏமாற்றத்தை அளித்தது. இருவரும் ஒரே பிரிவில் விளையாடி வருகிறோம். ஆனால், மேரி கோம்-க்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என்பது நிகத் ஜரினின் வாதமாக இருக்கிறது.

இதுதொடர்பாக நிகத், மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் கிரன் ரிஜிஜூவுக்குக் கடிதம் எழுதினார். அந்தக் கடிதத்தில், “இந்தியாவை உலக அரங்கில் தலைநிமிரச் செய்ய வேண்டும் என்ற ஆவலுடன் இருக்கும் விளையாட்டு வீராங்கனையாக இந்த கடிதத்தை எழுதுகிறேன். 2011-ல் துருக்கியில் நடந்த பெண்கள் ஜூனியர் போட்டி மூலம் எனது கேரியரை தொடங்கினேன். அந்தப்போட்டியில் தங்கம் வென்றேன். 2013-ல் பல்கேரியாவில் நடந்த யூத் சாம்பியன் ஷிப் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளேன். சமீபத்தில் நடந்த தாய்லாந்து ஓபன் சாம்பியன் ஷிப் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளேன். தற்போது உலகசாம்பியனாக இருக்கும் வீராங்கனையைக் கடந்த ஆண்டு வீழ்த்தியுள்ளேன்.

Nikhat Zareens
Nikhat Zareens

வேர்ல்டு சாம்பியன் ஷிப் தொடருக்கான ட்ரைல் போட்டி ஆகஸ்ட் 6 மற்றும் 7-ம் தேதி நடப்பதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் ட்ரைல் போட்டி ஒத்திவைக்கப்பட்டதாகவும் மேரி கோம் ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்பிவைக்கப்படுவதாகக் கூறப்பட்டது. இது எனக்கு திகைப்பாக உள்ளது. மேரி கோம்தான் எனக்கு இன்ஸ்பிரேஷன். விளையாட்டில் நேர்மை இருக்க வேண்டும் எனக் கருதுகிறேன். மேரி கோம் மிகப்பெரிய லெஜண்ட் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.

ஒலிம்பிக் போட்டியில் 23 தங்கம் வென்ற மைக்கேல் பெல்ப்ஸ் ட்ரைல் போட்டிகளில் பங்கேற்கிறார். நான் எந்த உதவியையும் எதிர்பார்க்கவில்லை. மேரி கோம் அல்லது எந்த வீராங்கனையாக இருந்தாலும் சரி ட்ரைல் வைக்க வேண்டும். அனைத்துப் போட்டியாளர்களுக்கும் சமமான வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதுதான் எனது கோரிக்கையாக உள்ளது. ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்பதே விருப்பம். விளையாட்டை கெளரவப்படுத்துவதற்கு உதவவேண்டும்” என ட்விட்டர் மூலம் கேட்டுக்கொண்டார்.

Kiren rijiju
Kiren rijiju

இதற்கு ட்விட்டரில் பதிலளித்த அமைச்சர், “வீரர்கள் தேர்வில் விளையாட்டு அமைச்சர்கள் தலையிடக்கூடாது. ஒலிம்பிக் சங்கத்துக்குக் கீழே பெடரேசன்கள் செயல்பட்டு வருகின்றன. இந்தியாவுக்கு பெருமை சேர்ப்பதை மனதில் வைத்து நல்ல முடிவை எடுக்க இந்திய குத்துச்சண்டை கூட்டமைப்பை வலியுறுத்துவேன்” என்றார்.

நிகத் ஜரீனின் கடிதம் தொடர்பாக ட்விட்டரில் கருத்து பதிவிட்ட அப்னவ் பிந்த்ரா, “ மேரிகோம் மீது எனக்கு நல்ல மரியாதை இருக்கிறது. நேற்று நாம் சிறந்தவராக இருக்கலாம். ஆனால் விளையாட்டில் நேற்று என்பது எப்போதும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுவதில்லை” என நிகத் ஜரீனுக்கு ஆதரவாகப் பேசியிருந்தார். இதுதான் மேரி கோம் சீற்றத்துக்குக் காரணம்.

Mary kom
Mary kom

இதுகுறித்து பேசியுள்ள மேரிகோம், ``நிகத் ஜரீன் என்பவர் யார். நான் அவரைப்பற்றிக் கேள்விப்பட்டதே இல்லை. என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. இது எனக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. நான் வேர்ல்டு சாம்பியன் ஷிப் போட்டிகளில் 8 பதக்கங்களை வாங்கியுள்ளேன். அவற்றில் 6 தங்கப்பதக்கம். இந்திய குத்துச்சண்டை சம்மேளனம் யாரை அனுப்ப வேண்டும் என முடிவு செய்வார்கள். இவரால் இந்திய அணியில் தேர்வாக முடியவில்லை என்பதற்காக அழுதுகொண்டிருக்கிறார்.

பிந்த்ரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்றவர். நானும் உலக சாம்பியன் போட்டியில் நிறைய தங்கங்களை வென்றுள்ளேன். குத்துச்சண்டை விவகாரத்தில் உள்நுழைவது கருத்து தெரிவிப்பது என்பது அவருக்கு வேண்டாத வேலை. நான் துப்பாக்கிச் சுடுதல் குறித்து பேசவில்லை. அவருடைய விளையாட்டில் நான் தலையிடுவது இல்லை. குத்துச்சண்டை விவகாரத்தில் அவர் அமைதியாக இருக்க வேண்டும்.

`உங்க வேலையை மட்டும் பாருங்க அபினவ்'- தகித்த மேரி கோம்; திகைக்கும் குத்துச்சண்டை சம்மேளனம்!

அவருக்கு குத்துச்சண்டையின் விதிகள் குறித்து என்ன தெரியும். குத்துச்சண்டை குறித்து அவருக்கு எதுவும் தெரியாது. அபினவ் என்ன ஒவ்வொரு துப்பாக்கிசுடுதல் போட்டிக்கு முன்பாக ட்ரயல் போகிறாரா ” எனக் கேள்வி எழுப்பியுள்ளார். கடந்த சில நாள்களாக புகைத்துக் கொண்டிருருந்த இந்த விவகாரத்தில் மேரி கோம் அமைதியாக இருந்தார். அபினவ் கருத்து தெரிவித்ததையடுத்து இப்போது வெடித்துள்ளார்.