Published:Updated:

`கொரோனா வைரஸ்; 6 மாத ஊதியத்தை அளித்த குத்துச்சண்டை வீரர்’-பஜ்ரங் பூனியாவுக்கு குவியும் பாராட்டுகள்

பஜ்ரங் பூனியா
பஜ்ரங் பூனியா

இப்போது நடக்கும் விஷயங்களைப் பார்க்கும்போது ஒலிம்பிக் போட்டிகளைத் தள்ளிவைத்தது நல்ல விஷயம்தான் என பஜ்ரங் பூனியா கூறியுள்ளார்.

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக டோக்கியாவில் இந்தாண்டு நடைபெறவிருந்த ஒலிம்பிக் போட்டிகள் 2021-ம் ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இந்தியாவில் பல மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவுகள் அமலில் உள்ளது. இந்தியாவில் பலர் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

இந்த நிலையில், `ஒலிம்பிக் போட்டிகளைத் தள்ளிவைத்தது நல்ல விஷயம்தான் என டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள இந்திய மல்யுத்த வீரரான 25 வயது பஜ்ரங் பூனியா ஆங்கில செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார். அதில், ``வைரஸ் தாக்கத்திலிருந்து நம்மை தற்காத்துக்கொள்வது மிகவும் அவசியம். இதனால் நான் என்னுடைய பயிற்சியை நிறுத்திவிட்டேன் என எண்ண வேண்டாம். நான் தினமும் கடுமையாகப் பயிற்சி செய்துகொண்டிருக்கிறேன். அதேநேரத்தில் நம்முடைய உடல் நலனையும் பாதுகாப்பாக வைத்திருப்பது மிகவும் அவசியம்.

இப்போது நடக்கும் விஷயங்களைப் பார்க்கும்போது ஒலிம்பிக் போட்டிகளைத் தள்ளிவைத்தது நல்ல விஷயம்தான். இது எனக்கு மட்டுமல்ல எல்லா விளையாட்டு வீரர்களுக்கும் பயனளிக்கும். எல்லா வீரர்களுக்கும் இது ஒரு கடினமான தருணம்தான்” என்றார். முன்னதாக நேற்று ஒலிம்பிக் போட்டிகள் இந்தாண்டு நடைபெறுமா என்பது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த பூனியா, ``நாங்கள் உயிருடன் இருந்தால் மட்டுமே ஒலிம்பிக்கில் விளையாட முடியும். உங்கள் வாழ்க்கையை இழந்த பின் ஒலிம்பிக்கால் என்ன பயன்?” எனக் கூறியிருந்தார்.

பஜ்ரங் பூனியா
பஜ்ரங் பூனியா

குத்துச்சண்டை வீரரான பஜ்ரங் பூனியா இந்தியன் ரயில்வேயில் அதிகாரியாகப் பணியாற்றி வருகிறார். கொரோனா வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் என்னுடைய 6 மாத சம்பளத்தை நிவாரண நிதிக்கு வழங்க முடிவு செய்துள்ளேன் எனப் பதிவிட்டார். பஜ்ரங் பூனியாவின் இந்தச் செயலை அனைவரும் பாராட்டியிருந்தனர்.

அடுத்த கட்டுரைக்கு