Published:Updated:

``பெருந்தன்மை சிறந்த தலைவனின் அடையாளம்!'' - தோனி குறித்து வியக்கும் `இன்ஃபோசிஸ்' நாராயணமூர்த்தி

Dhoni
Dhoni ( AP Photo / Bikas Das )

பிரபல ஐ.டி நிறுவனமான இன்ஃபோசிஸின் துணை நிறுவனரான என்.ஆர்.நாராயணமூர்த்தி தோனியைப் பற்றி அவருடைய கருத்துகளையும் தோனியிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் குறித்தும் சொல்லியிருக்கிறார்.

சர்வதேச போட்டிகளில் இருந்து இந்திய அணியின் முன்னாள் தலைவர் தோனி ஓய்வு பெறுவதாக அறிவித்ததிலிருந்து, அதைப் பல பிரபலங்களும் பேசி வருகின்றனர். பிரபல ஐ.டி நிறுவனமான இன்ஃபோசிஸின் துணை நிறுவனரான என்.ஆர்.நாராயணமூர்த்தி தோனியைப் பற்றி அவருடைய கருத்துகளையும் தோனியிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் குறித்தும் சொல்லியிருக்கிறார்.

``சிறப்பான செயல்பாடு அங்கீகாரத்தைத் தரும். அங்கீகாரம் மரியாதையைத் தரும். மரியாதை பதவியைத் தேடி தரும் என்பதை நம்புகிறவன் நான். இதைச் சிறப்பாகச் செயல்படுத்தி உலக அளவில் இந்திய கிரிக்கெட் அணியைக் கண்டு வியக்கச் செய்தவர் மகேந்திரசிங் தோனி. மிகச் சிறந்த இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் தோனி, தன் சிறந்த தலைமைப் பண்பால் 2007-ல், T20 உலக கோப்பை, 2011-ல் ஐ.சி.சி உலக சாம்பியன்ஷிப், 2013-ல் சாம்பியன்ஸ் கோப்பை என்று பல கோப்பைகளை இந்தியாவின் வசம் ஆக்கினார்.

இந்தியாவில் உள்ள அனைத்து தரப்பு மக்களின் மனதைக் கொள்ளைகொண்டவர் தோனி; ஒவ்வோர் இந்தியனும் தோனியை ரசிக்காமல் இருந்ததில்லை. என் தங்கை, நண்பர்கள், ஓட்டுநர், பாதுகாவலர் என அனைவரும், தோனி கிரிக்கெட் விளையாடும்போது அவர் ஜெயிக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்வதைக் கண்டுள்ளேன். ஒவ்வோர் இந்தியனும் கண்டு வியக்கும் நண்பராக விளங்கியவர் தோனி'' என்று தோனியைப் புகழ்ந்திருக்கிறார் நாராயண மூர்த்தி.

தோனி-அமித் ஷா சந்திப்பு...  ஜெய் ஷா தலையீடு... - தோனி ஓய்வில் அரசியல் இருக்கிறதா?

வாழ்வில் சாதிக்க, நாம் பெரிய பின்புலம் கொண்டவராக இருக்க வேண்டும் என்று இல்லை. சாதாரண மனிதனும் தன் திறமைகளால் அளப்பரிய சாதனைகளைச் செய்ய முடியும் என்று நிகழ்த்திக் காட்டிய தோனியின் பிறந்த நாளும், இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் தொடக்க நாளும் ஜூலை 7, 1981.

தலைமைப் பண்பின் இலக்கணமாக விளங்கிய தோனியிடம் இருந்து, இந்திய பெருநிறுவனங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை ஏராளம். இதை அவர் விளையாடிய கிரிக்கெட் போட்டிகளை வைத்து அறியலாம்.

ஒரு சிறந்த தலைவன், பெரிய லட்சியத்தைத் தன்னை சார்ந்தவர்கள் மனதில் விதைக்க வேண்டும், அந்த லட்சியத்தை அவர்கள் அடைவதற்கான உத்வேகத்தை அளிக்க வேண்டும், இவற்றை நேர்த்தியாகச் செய்த தலைவன் தோனி.

இந்த ஈடு இணையில்லாத சிறந்த தலைமைப் பண்பால்தான், பாகிஸ்தானுக்கு எதிரான T20 கோப்பை இறுதிப் போட்டியில் செப்டம்பர் 24, 2007 அன்று வெற்றிக் கோப்பை இந்தியா வசமானது.

எங்கள் நிறுவனத்தில் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் முதல் எங்கள் பகுதியில் காய்கறி விற்பவர்கள் வரை அனைத்துத் தரப்பு மக்களும் தோனி குறித்துப் பேசுகையில், மிகுந்த சந்தோஷமும் பெருமிதம் கொள்கின்றனர். ஒரு சிறந்த தலைவன், அவன் செயல்களால் முன்னுதாரணமாகத் திகழ்வான் என்று மகாத்மா காந்தி கூறியதற்கேற்ப திகழ்ந்தவர் தோனி.

இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி
இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி

யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா போன்ற போட்டியாளர்கள் தங்களின் முழுத் திறமையை வெளிக்கொணர வழிகாட்டியாக இருந்தவர் தோனி. 2011-ல் இந்தியாவுக்கும், இலங்கைக்கான உலக கோப்பை இறுதிப் போட்டியில், தோனி அடித்த சிக்ஸரால் உலகக் கோப்பை நம் வசமானதை மறக்க முடியுமா? 50 ஓவர் போட்டிகளின் வெற்றியும் தோனியின் கையிலேயே இருந்தது. நம் நாட்டு மக்களை ஏமாற்றவில்லை தோனி. சிறந்த பேட்டிங், விக்கெட் கீப்பிங் என்று பன்முகத்தன்மை கொண்டவராக இருந்தார். தேவைப்படும் இடத்தில் கோபப்படுவதும் ,ஒரு சிறந்த தலைவன் குணமே. வெற்றிக்கு காரணம் தான் மட்டுமே என்று இருக்காமல் வெற்றியை அனைவரோடும் பகிர்ந்துகொள்ளும் தன்மை படைத்தவர் தோனி. பெருந்தன்மை சிறந்த தலைவனின் அடையாளம்.

கஷ்ட காலத்தில் அமைதியாக இருந்து, தன் அடுத்தகட்ட நகர்வை சிறப்பாகத் தீர்மானிப்பது தலைவனின் கடமை. தோனி அதற்கு சிறந்த எடுத்துக்காட்டு. 2011-ல் T20 இறுதி ஆட்டத்தில் கடைசி ஓவரில் ஜோகிந்தர் சர்மாவை களம் இறக்கினார் தோனி. இந்த முடிவு குறித்து பலர் விமர்சித்தனர். தோனியின் தீவிர ரசிகரான என் மகன் ரோகன் தோனியின் முடிவுக்குப் பின்னால் காரணம் இருக்கும் என்று தீர்க்கமாகக் கூறினான். அவர் கூறியது சரியே இந்தியா வெற்றி கோப்பையைத் தட்டியது.

மகேந்திர சிங் தோனி
மகேந்திர சிங் தோனி
முடியாததைச் செய்பவனே ஹீரோ... தோனி ஹீரோ மட்டுமல்ல, சூப்பர் ஹீரோ... ஏன்? #DhoniRetires

வெற்றி தோல்வியை சமமான மனநிலையுடன் பார்க்கக் கூடியவர் தோனி. இந்த மனப்பான்மை நிறுவனத்தின் தலைவர்களுக்கும் இருக்க வேண்டும். வருங்காலங்களிலும், இந்திய கிரிக்கெட் அணிக்கு சிறந்த சேவையை வழங்குவார் என்பதில் ஐயமில்லை. தோனிக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்" என்று உள்ளம் மகிழ்ந்து பாராட்டியுள்ளார் இன்போசிஸ் நாராயணமூர்த்தி.

தோனியிடமிருந்து ஒவ்வொருவரும் கற்றுக்கொள்வதற்கு நிறைய பாடங்கள் இருப்பது உண்மைதான்!

அடுத்த கட்டுரைக்கு