Published:Updated:

''காளைகளைக் கத்துக்கிட்ட மாதிரி இனி கார்களைப் பற்றியும் கத்துக்கணும்!"

Jallikkattu
பிரீமியம் ஸ்டோரி
Jallikkattu

“நான் இப்ப மாட்டுக்காரன் மட்டுமல்ல, காருக்கும் சொந்தக்காரன்...”

''காளைகளைக் கத்துக்கிட்ட மாதிரி இனி கார்களைப் பற்றியும் கத்துக்கணும்!"

“நான் இப்ப மாட்டுக்காரன் மட்டுமல்ல, காருக்கும் சொந்தக்காரன்...”

Published:Updated:
Jallikkattu
பிரீமியம் ஸ்டோரி
Jallikkattu

“நான் இப்ப மாட்டுக்காரன் மட்டுமல்ல, காருக்கும் சொந்தக்காரன்...” என்று புஜத்தைத் தட்டி மகிழ்கிறார்கள் ஜல்லிக்கட்டில் முதல் பரிசு பெற்றவர்கள்.

மதுரை மாவட்டத்தில் பொங்கலை முன்னிட்டு நடந்த ஜல்லிக்கட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற மாடுபிடி வீரர்கள், சிறந்த மாட்டு உரிமையாளர்கள் தற்போது புதிய கார்/பைக்குகளின் உரிமையாளர்களாகவும் மாறியிருக்கிறார்கள்.

ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் ஆரம்ப காலத்தில் வெற்றி பெறுகிறவர்களுக்கு அண்டா, கட்டில், பீரோ, தங்கக் காசுகள் கிடைத்தன. அப்புறம் சைக்கிள், டிவி, வாஷிங் மெஷின், ப்ரிட்ஜ் என நவீனமடைந்து, சமீபகாலமாக பைக், கார் என மோட்டார் வாகனங்களைப் பரிசுகளாகப் பெறுகிறார்கள்.

கடந்த 14, 15, 17 தேதிகளில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் நடந்த ஜல்லிக்கட்டுகளில் கார், பைக் என பரிசுகள் பறந்தன. இதில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 24 காளைகளை அடக்கிய அவனியாபுரம் கார்த்திக் முதலிடம் வந்து டட்ஸன் ரெடி கோ காரைப் பரிசாகப் பெற்றார். 19 காளைகளை அடக்கி இரண்டாமிடம் வந்த வலையங்குளம் முருகனுக்கு ஹோண்டா பைக் பரிசாகக் கிடைத்தது. இதேபோல் சிறந்த காளைக்காக மணப்பாறை தேவசகாயகத்துக்கு முதல் பரிசாக ஹோண்டா பைக் வழங்கப்பட்டது.

பாலமேடு ஜல்லிக்கட்டில் 21 காளைகளை அடக்கி முதலிடம் வந்த மதுரை பொதும்பைச் சேர்ந்த பிரபாகரனுக்கு டிவிஎஸ் பைக் பரிசாக வழங்கப்பட்டது. சிவகங்கை புலியூர் சூறாவளியின் காளைக்கு முதல் பரிசாக டட்ஸன் ரெடி கோ கார் அளிக்கப்பட்டது.

அலங்காநல்லூரில் 21 காளைகள் பிடித்த கருப்பாயூரணி கார்த்திக், ரெனோ ட்ரைபர் கார் பரிசு பெற்றார். 18 காளைகளைப் பிடித்து அலங்காநல்லூர் ராம்குமார் 2-வது பரிசாக டிவிஎஸ் பைக் பெற்றார். சிறந்த காளையாக புதுக்கோட்டை கைக்குறிச்சி தமிழ்ச்செல்வனுக்கு முதல் பரிசாக ரெனோ ட்ரைபர் கார் வழக்கப்பட்டது.

கார் / பைக் பரிசுகள் அறிவிக்கப்பட்டாலும், இவர்களைச் சென்னைக்கு அழைத்துச் சென்று முதலைமைச்சர் கையால் இந்த வாகனங்களின் சாவிகளை முறைப்படி வழங்க உள்ளார்கள்.

பரிசு பெற்ற அவனியாபுரம் கார்த்திக்கிடம் பேசினேன். “காலேஜுல தேர்டு இயர் படிச்சுட்டு இருக்கிறேன். சின்ன வயசுலருந்து ஜல்லிக்கட்டு மீது ஆசை. பல போட்டிகளைப் பார்த்துப் பார்த்து இதைக் கத்துக்கிட்டேன். அது இப்ப எனக்கு கார் பரிசா கிடைக்கக் காரணமாயிடுச்சு. ரொம்ப சந்தோஷமா இருக்கு. காரைப் பத்தி எனக்கு எதுவும் தெரியாது. காளைகளைக் கத்துக்கிட்ட மாதிரி, இனி காரையும் நுணுக்கமா கத்துப்போம்!” என்றார்.

பாலமேட்டில் ஹோண்டா பைக் பரிசு பெற்ற பொதும்பு பிரபாகரன், ஒரு கார் டிரைவர். தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக முதல், இரண்டாமிடம் எனப் பரிசு பெற்று வந்தவர், தற்போது முதலிடம் வந்தார். ஆனால், இங்கு சிறந்த காளைக்குத்தான் கார் பரிசு வழங்கினார்கள். சிறந்த மாடுபிடி வீரருக்கு பைக்.

கார்த்திக்
கார்த்திக்
''காளைகளைக் கத்துக்கிட்ட மாதிரி இனி கார்களைப் பற்றியும் கத்துக்கணும்!"

அலங்காநல்லூரில் அதிக மாடுகள் பிடித்து ட்ரைபர் கார் பரிசு பெற்ற கருப்பாயூரணி கார்த்திக், “ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ள ஆன்லைனில் விண்ணப்பித்ததில் டோக்கன் கிடைக்கவில்லை. ஜல்லிக்கட்டில் கலந்துகொள்ள முடியாதோ என்ற கவலை ஏற்பட்டது. கடைசி நேரத்தில்தான் விழாக் கமிட்டியிடம் முறையிட்டு வாய்ப்பு பெற்றேன். அந்த உற்சாகத்தில் இத்தனை மாடுகள் பிடித்து கார் பரிசு பெற்றிருக்கிறேன். மகிழ்ச்சியாக உள்ளது. நான் காளையும் வளர்க்கிறேன். இனிமே காரையும் காளையைப்போல பார்த்துப்பேன்!” என்றார்.

சிறந்த காளைக்குக் கார் பரிசு பெற்ற புதுக்கோட்டை தமிழ்ச்செல்வன், “ஜல்லிக்கட்டில் எனக்கு அதிக விருப்பம். இருபதுக்கும் மேற்பட்ட காளைகளை வளர்த்து வருகிறேன். தமிழகம் முழுக்க நடைபெறும் ஜல்லிக்கட்டில் என் காளைகள் கலந்துகொள்ளும். அலங்காநல்லூரில் இந்த ‘புல்லட்’ காளை கார் பரிசு பெற்றது மகிழ்ச்சியாக உள்ளது. இது ஏற்கனவே விராலிமலையில் நடந்த ஜல்லிக்கட்டில் புல்லட் பரிசு பெற்றுத் தந்தது. அதனால் புல்லட் காளை என்று அழைத்து வந்தோம். இப்ப கார் பரிசு பெற்றுத் தந்துள்ளது ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது’’ என்றார் உற்சாகமாக! இனி ‘ட்ரைபர்’ காளை என்று அழைக்கலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism