கட்டுரைகள்
Published:Updated:

ஜென்டில்மேன் ஜிம்மி!

ஜேம்ஸ் ஆண்டர்சன்
பிரீமியம் ஸ்டோரி
News
ஜேம்ஸ் ஆண்டர்சன்

தொடக்கக் காலத்தில் அவரின் பவுலிங் ஆக்‌ஷனைப் பார்த்த இங்கிலாந்து ஜாம்பவான் பாப் வில்லிஸ், ‘இந்தப் பையன் அஞ்சாறு வருஷம் தாங்குனாலே பெருசு’ என ஜோசியம் சொன்னார்.

‘பிட்ச்சில் நின்று முறைக்கும், வசைபாடும் பவுலர்கள் என்னை எப்போதுமே பயமுறுத்தியதில்லை. அதீத திறமையும் கச்சிதமான பிட்னஸும் தோல்வியின் விளிம்பிலும் வெல்லப் போராடும் ஆக்ரோஷமும் உடைய பவுலர்கள் மட்டுமே என்னை பயம்கொள்ளச் செய்வார்கள். அப்படியானவர் களைத்தான் நான் மதிக்கிறேன்’ என்பார் டெஸ்ட் கிரிக்கெட்டின் தலைசிறந்த பேட்ஸ் மேன்களுள் ஒருவரான ராகுல் டிராவிட். இது அப்படியே கடந்த வாரம் தன் 600-வது டெஸ்ட் விக்கெட்டை வீழ்த்திய ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கும் பொருந்தும்.

ஜென்டில்மேன் ஜிம்மி!

கிரிக்கெட்டைப் பொறுத்தவரை கடந்த முப்பதாண்டுகளில் ஆசிய, ஆஸ்திரேலிய வீரர்களின் தாக்கமே அதிகம். இந்த வட்டத்தின் வெளியிலிருக்கும் வீரர் இத்தனையையும் தாண்டி தனக்கான இடத்தை அடைவது, கற்சுவரின் விரிசல்களுக்கிடையே முளைத்தெழும் ஆலமரம் போலத்தான். இதனால்தான் ஜிம்மி என்கிற ஜேம்ஸ் ஆண்டர்சன் ஜென்டில்மேன் கேமின் மிகச்சிறந்த பவுலராகக் கொண்டாடப்படுகிறார்.

2002-ல் இங்கிலாந்து அணியின் ஒருநாள் தொடருக்கான அணியில் இடம்பெற்றபோது ஆண்டர்சனுக்கு வயது 20 தான். அதற்கு முன்னால் வெறும் ஐந்தே ஐந்து முதல்தரப் போட்டிகளில்தான் ஆடியிருந்தார். தொடக்கக் காலத்தில் அவரின் பவுலிங் ஆக்‌ஷனைப் பார்த்த இங்கிலாந்து ஜாம்பவான் பாப் வில்லிஸ், ‘இந்தப் பையன் அஞ்சாறு வருஷம் தாங்குனாலே பெருசு’ என ஜோசியம் சொன்னார். சொன்னதுபோலவே காயங்கள் ஜிம்மியைப் படுத்தியெடுத்தன. போதாக்குறைக்கு அன்றைய இங்கிலாந்து அணியில் ஹார்மிசன், ஹோகார்ட், சைமன் ஜோன்ஸ், ஃப்ளின்டாப் எனப் பெயர்போன பவுலர்கள், ஆல்ரவுண்டர்கள் இருந்தார்கள். இவர்களுக்கு மத்தியில் தனக்கான வெளிச்சம் தேடித் தேடி ஓய்ந்துபோனார் ஆண்டர்சன்.

ஜென்டில்மேன் ஜிம்மி!

பேட்ஸ்மேன்கள் வலைப்பயிற்சியில் ஈடுபடும்போது இரண்டாம்நிலை பவுலர்கள் அவர்களுக்குப் பந்துவீசுவது வழக்கம். ஒருகட்டத்தில் ஆண்டர்சன் இதைத்தான் செய்துகொண்டிருந்தார். 2008-ல் இங்கிலாந்துப் பயிற்சியாளராக இருந்த பீட்டர் மூர்ஸ் நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் ஹார்மிசனையும் ஹோகார்டையும் தவிர்த்துவிட்டு ஆண்டர்சனிடம் பந்தைக் கொடுத்தார். தொடர் காயங்கள், அதிக ஆவரேஜ் என சுமாரான பவுலராகத்தான் அவரை அதுநாள்வரை உலகம் பார்த்துவந்தது. இதனால் மூர்ஸின் இந்த முடிவும் மிகக்கடுமையாக விமர்சிக்கப்பட்டது. ஆனால் அந்த டெஸ்ட்டில் 7 விக்கெட்கள் வீழ்த்தி வெற்றிக்குக் காரணமாக மாறினார் ஆண்டர்சன்; அதன்பின் இங்கிலாந்து பெற்ற பல வெற்றிகளுக்கும்!

கிரிக்கெட், வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமானது என்கிற பிம்பம் எப்போதும் உண்டு. ஆனால் உண்மையில் கிரிக்கெட் எப்போதும் சுழற்பந்து வீச்சாளர்கள்வசம்தான். ரன் அப், பவுலிங் ஆக்‌ஷன், பீல்டிங் எனப் பல காரணங்களால் வேகப்பந்துவீச்சாளர்கள் தொடர்காயங்களுக்கு உள்ளாவார்கள். ஒரு சின்னக் காயம் அவர்களை மாதக்கணக்கில் உட்காரவைத்துவிடும். அந்தநேரத்தில் அவர் இடத்திற்கு இன்னொரு பவுலர் வந்துவிடுவார். இதைக் கணக்கில்கொண்டு பார்த்தால் 600 விக்கெட்கள் எடுத்த முதல் வேகப்பந்துவீச்சாளர் என்கிற ஜிம்மியின் சாதனை அவ்வளவு எளிதில்லை என்பது புரியும்.

இந்த 17 ஆண்டுகளில் வலி, தோல்விகள் ஆகியவற்றைத் தாண்டி ஆண்டர்சன் தியாகம் செய்தவையும் அதிகம். நினைத்திருந்தால் பணம், புகழ் என இப்போதிருப்பதைவிட இருமடங்கு சம்பாதித்திருக்கமுடியும். ஆனால், கிரிக்கெட் வீரராக ஃபார்மின் உச்சத்தில் இருந்த நேரத்தில், டி20 உள்ளிட்ட பிற லீக்குகளில் பங்குபெறப் போவதில்லை என முடிவெடுத்தார் ஆண்டர்சன். உலகின் கடைக்கோடி சாமானியன் முதல் முதல்நிலை வீரர்கள்வரை ஆசையை விதைக்கும் ஐ.பி.எல் பக்கம் இதுவரை அவர் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. இங்கிலாந்து அணிக்காக ஒருநாள் போட்டிகள், அதைவிட முக்கியமாக டெஸ்ட் போட்டிகள் எனத் தன் பாதையைப் பத்தாண்டுகளுக்கு முன்பாகவே தெளிவாக வரைந்துகொண்டார்.

ஜென்டில்மேன் ஜிம்மி!

எப்படி நிகழ்ந்தது இந்த 600 விக்கெட் மேஜிக்? இரண்டு முக்கிய காரணங்கள். முதலாவது அவரின் விரல்வித்தை. ‘ஆண்டர்சனின் மணிக்கட்டும் விரல்களும் செய்யும் மேஜிக்கை எந்த பேட்ஸ்மேனாலும் கணிக்கவே முடியாது. நான் எப்போதும் பவுலர்களின் மணிக்கட்டை கவனித்து ஆடுவேன். ஆனால் ஆண்டர்சனிடம் பெரும்பாலும் அது பலிக்காது’ எனச் சொன்னது ஆல்டைம் டாப் பேட்ஸ்மேனான சச்சின். இரண்டாவது காரணம் பிட்னெஸ். 38 வயதிலும் ரன் அப் தூரத்தைக் குறைக்காமல் வேகத்தைக் குறைக்காமல் நேற்று அறிமுகமான வீரரைப் போல அர்ப்பணிப்போடு விளையாடும் அந்த முனைப்பு.

இப்போது அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்கள் பட்டியலில் முறையே முரளிதரன், வார்னே, கும்ளே ஆகியோருக்கு அடுத்து நான்காவது இடத்திலிருக்கிறார் ஜிம்மி. முதல் மூவரும் ஸ்பின்னர்கள். முன்பே சொன்னதுபோல ஸ்பின்னர்களுக்கு இணையான வாய்ப்பு வேகப்பந்துவீச்சாளர்களுக்குக் கிடைக்காது. ஒரே நேரத்தில் அறிமுகமான வார்னே, மெக்ராத் இருவரின் புள்ளிவிவரங்கள் இதற்கு சாட்சி. ஆனாலும் கிட்டத்தட்ட அந்த மூவருக்கு சமமான எகானமியில், ஹோம்/அவே சராசரியில் மிளிர்கிறார் ஆண்டர்சன். அனில் கும்ளேவின் இடத்தைப் பிடிக்க இவருக்கு இன்னும் சில இன்னிங்ஸ்களே தேவை.

ஜென்டில்மேன் ஜிம்மி!

ஜிம்மியின் இந்த சாதனையை முறியடிக்க ஒரே ஒருவரைத்தவிர வேறு யாராலும் இனி முடியாது என்பதே நிதர்சனம். ஸ்டூவர்ட் ப்ராட். 514 விக்கெட்களோடு ஏழாவது இடத்திலிருப்பவர் ஆண்டர்சனை நெருங்க இன்னும் இரண்டு ஆண்டுகளாவது ஆகும். ஆனால் ஆண்டர்சனோ, ‘அதற்குள் நான் 700-ஐத் தொட்டுவிடுவேன்’ எனக் கூறியிருக்கிறார். அதில் பாதி நடந்தால்கூட அநேகமாய் ப்ராடுக்கும் வாய்ப்பிருக்காது.

ஆக, எதிரணியை மிரட்டும் அக்ரம், மெக்ராத் போன்ற பாஸ்ட் பவுலர்களுக்கு நிகரான, சுழலில் விழச்செய்யும் மாயாஜால முரளி, வார்னேவுக்குச் சமமான, யாருக்கும் அசராமல் தங்கள் பேட்டால் பேசும் சச்சின், பாண்டிங்கிற்கு இணையான இடம் வரலாற்றில் ஆண்டர்சனுக்கும் இருக்கிறதா?

இதற்கு ஆண்டர்சன் மொழியிலேயே பதில் சொல்லவேண்டுமென்றால்...

‘ஒய் நாட்?’