கிரிக்கெட்டில் ஜாம்பவனாக இருந்தாலும் கால்பந்து விளையாட்டு மீது தீரா காதலைக் கொண்டவர் தோனி. சிறு வயதில் கால்பந்து விளையாட்டு வீரராக வேண்டும் என்று ஆசைப்பட்டிருக்கிறார். அதிலும் குறிப்பாக கோல் கீப்பராக ஆக வேண்டும் என்ற கனவு தோனிக்கு இருந்திருக்கிறது. ஆனால் காலம் அவரை கிரிக்கெட் பக்கம் கொண்டு சென்றுள்ளது.
இருப்பினும், அவ்வப்போது கால்பந்து விளையாடுவது, போட்டிகளை நேரில் காணச் செல்வது போன்ற சில விஷயங்களை செய்து வருகிறார். சென்னையின் FC கால்பந்து அணியின் உரிமையாளர்களுள் ஒருவராகவும் தோனி இருக்கிறார். கால்பந்து விளையாட்டு வீரர்களில் தோனிக்கு பிடித்த வீரர் மெஸ்ஸி. அதேபோல் தோனியின் மகள் ஷிவா சிங் தோனியும் மெஸ்ஸியின் தீவிர ரசிகை ஆவார்.
இந்நிலையில் தோனியின் மகள் ஷிவாவுக்கு நட்ஷத்திர வீரரான மெஸ்ஸி தன்னுடைய அர்ஜெண்டினா ஜெர்ஸியில் PARA ZIVA (ஷிவாவிற்காக) என எழுதி கையொப்பமிட்டு அனுப்பியுள்ளார். இந்த ஜெர்ஸியை அணிந்த ஷிவாவின் புகைப்படங்கள் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது.
அப்பதிவில், மெஸ்ஸியின் ஜெர்ஸியை கண்டு மகிழ்ச்சியுடன் காணப்படும் ஷிவாவின் புகைப்படங்களுடன்,"தந்தையை போல மகளும்" என குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன