Published:Updated:

``சர்ப்ரைஸ் பிறந்தநாள் பரிசு, அதிகாலை பயிற்சி, குறையாத உற்சாகம்!" - ரேவதி குறித்து நெகிழும் தோழி

ரேவதி
ரேவதி

``2017-ம் ஆண்டு கோவையில் தேசிய அளவில் பல்கலைக்கழகங்களுக்கு இடையில் நடைபெற்ற தடகளப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றபோது ரேவதி என்னிடம், `இந்தா... உனக்கு என் பிறந்தநாள் பரிசு' என்று தன் வெற்றியை என்னுடன் பகிர்ந்துகொண்டது, மிகவும் நெகிழ்ச்சியான தருணம்'' என்கிறார் தோழி காவ்யா.

ஒலிம்பிக் போட்டிக்குத் தேர்வாகியிருக்கும் மதுரை பெண் ரேவதிக்கு, பாராட்டுகள் தொடர்ந்தபடி இருக்கின்றன.

மதுரை மாவட்டம், சக்கிமங்கலம் கிராமத்தில் பிறந்த ரேவதி வீரமணி, தந்தையை இழந்து, ஒன்றாம் வகுப்புப் பயின்றபோது தாயையும் மூளைக் காய்ச்சலுக்கு பலி கொடுத்தவர். ரேவதியும், அவரின் தங்கை ரேகாவும் அவர்களின் பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்தனர். கல்வியின் முக்கியத்துவத்தை அறிந்து, பாட்டி தன் பேத்திகளை பள்ளி, கல்லூரி என்று முன்னேற்றினார். மதுரை, கே.புதூர் எல்.பி.என்.ஐ (LPNI) பள்ளியில் பயின்ற காலகட்டத்தில் ரேவதி, கால்பந்து அணியில் ஒருவராக இருந்துள்ளார்.

ரேவதி
ரேவதி
பாட்டியின் அரவணைப்பு, கைகூடிய ஒலிம்பிக் கனவு; யார் இந்த மதுரை ரேவதி?

இந்நிலையில் 2014-ம் ஆண்டு மாநில அளவில் பள்ளிகளுக்கு இடையே நடந்த போட்டியில், வெறும் காலுடன் தடத்தில் ஓடிய ரேவதி, மதுரை தமிழ்நாட்டு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் பயிற்சியாளரான K.கண்ணன் மற்றும் லேடி டோக் கல்லூரியின் உடற்கல்வி இயக்குநரான டாக்டர். சாந்த மீனாவின் கவனத்தை ஈர்த்தார். கல்வி மற்றும் தடகள விளையாட்டுகளைப் பற்றிய திசையில் தெளிவில்லாமல் இருந்த ரேவதியின் திறமையை வெளிக்கொண்டு வரும் நோக்கத்தோடு, பயிற்சியாளர் கண்ணனும் டாக்டர் சாந்த மீனாவும் அவருக்கு லேடி டோக் கல்லூரியில் நிதியுதவியோடு பயிலும் வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்துள்ளனர்.

ரேவதி குறித்து பெருமையுடன் நம்மிடம் பகிர்ந்துகொண்டார், டாக்டர் சாந்த மீனா.

``2015 - 2019 வரை லேடி டோக் கல்லூரியில் பயின்றார் ரேவதி. அந்தக் காலகட்டத்தில், மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தால் நடத்தப்பட்ட கல்லூரிகளுக்கு இடையிலான தடகளப் போட்டியிலும் (Intercollegiate Athletic Meet), இந்திய அளவில் நடைபெற்ற பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான தடகளப் போட்டியிலும் (All India Inter University Athletic Meet) மற்றும் தேசிய அளவில் நடைபெற்ற தடகளப் போட்டிகளிலும் (National Level Athletic Meet) கலந்துகொண்டு பல பதக்கங்களை வென்றுள்ளார்.

ரேவதி - சாந்த மீனா
ரேவதி - சாந்த மீனா

கல்வியிலும் சரி, விளையாட்டிலும் சரி மிகுந்த ஆர்வத்துடனும் அர்ப்பணிப்புடனும் தனது பணியை செய்து முடிப்பவர் ரேவதி. இவரது விடா முயற்சியும் கடுமையான உழைப்புமே, தெற்கு ரயில்வேயில் அவருக்குக் கடந்த ஆண்டு வேலை கிடைக்கக் காரணம். எங்கள் லேடி டோக் கல்லூரியில் பல்வேறு விளையாட்டுகளில் சாதனை புரியும் 200-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு ஸ்போர்ட்ஸ் ஸ்காலர்ஷிப் வழங்கப்படுகிறது. ரேவதி போல இன்னும் பல மாணவிகளை உருவாக்க வேண்டும். அதற்கான நம்பிக்கையை, கல்லூரி நிர்வாகத்துக்கும் மாணவிகளுக்கும் இந்தத் தருணத்தில் தந்திருக்கிறார் ரேவதி'' என்கிறார் மகிழ்ச்சியுடன்.

ரேவதியின் கல்லூரிக் கால தோழி காவ்யா, ``கல்லூரி நாள்களில் அதிகாலை 4 மணிக்கு விடுதியில் இருந்து கிளம்பி ரேஸ் கோர்ஸ் மைதானத்துக்குச் செல்வோம். 8 மணி வரை பயிற்சிகளை மேற்கொள்வோம். பின்பு, கல்லூரி வகுப்புகளை முடித்துவிட்டு மாலை 5 மணி முதல் 8 மணி வரை மீண்டும் பயிற்சிகளை முடித்துவிட்டு விடுதி திரும்புவோம்.

பயிற்சியின்போது ரேவதியிடம் சோர்வே இருக்காது. ஆர்வமும் உற்சாகமுமே மிகுந்திருக்கும். பெற்றோர் இல்லாமல், வறுமையில், பாட்டியின் அரவணைப்பில் வாழும் ரேவதி, தன்னுடைய அந்தச் சூழல் பற்றி வருத்தமோ, குறையோ எதுவும் சொல்வதில்லை. மாறாக, துறுதுறுவென அனைவரையும் சிரிக்க வைத்துக்கொண்டே இருப்பார். `உன் அப்பா, அம்மா எனக்கும்தான் அப்பா, அம்மா' என்பார். ரேவதி, பிறப்பிலேயே விளையாட்டுத் திறமைகள் அமையப் பெற்றவர் என்பது என் கருத்து. தன் பெரும் உழைப்பு, முயற்சி மூலமாக அதை வளர்த்தெடுத்து, இன்று ஒலிம்பிக் வரை சென்றிருக்கிறார். மிகவும் பெருமையாக இருக்கிறது'' என்ற காவ்யா,

ரேவதியுடன் தோழி காவ்யா
ரேவதியுடன் தோழி காவ்யா
“அடுத்த இலக்கு ஒலிம்பிக்தான்!” - தனலட்சுமி என்னும் தைரியலட்சுமி

``2017-ம் ஆண்டு கோவையில் தேசிய அளவில் பல்கலைக்கழகங்களுக்கு இடையில் நடைபெற்ற தடகளப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றபோது ரேவதி என்னிடம், `இந்தா... உனக்கு என் பிறந்தநாள் பரிசு' என்று தன் வெற்றியை என்னுடன் பகிர்ந்துகொண்டது, மிகவும் நெகிழ்ச்சியான தருணம்'' என்கிறார்.

மதுரையின் தடகள வீராங்கனை ரேவதி, 4 × 400 கலப்புத் தொடர் ஓட்டப் பிரிவில் ஒலிம்பிக்கில் இந்தியா சார்பாகப் பங்கேற்கத் தேர்வாகியுள்ளார். வெற்றிபெற்று தமிழகத்துக்குப் பெருமை தேடித் தர வாழ்த்துகள்!

- ஹரிணி ஆனந்தராஜன்

அடுத்த கட்டுரைக்கு