Published:Updated:

`இரண்டு வருடம்; 15 கின்னஸ் சாதனைகள்!' - அசத்தும் மதுரை `டேக்வாண்டோ’ தம்பதி

மனைவியுடன் நாராயணன்
மனைவியுடன் நாராயணன்

டேக்வாண்டோ தற்காப்பு பயிற்சியாளர் 2 வருடத்தில் 14 கின்னஸ் உலக சாதனை நிகழ்த்தி தமிழகத்தின் நம்பர் ஒன் கின்னஸ் நாயகனாகத் திகழ்கிறார்.

மதுரை சின்னசொக்கி குளம் பகுதியில் 'டேக்வாண்டோ' என்று சொல்லக்கூடிய கொரியன் தற்காப்புக் கலையை மாணவர்களுக்குப் பயிற்சியளித்து வருகிறார் டேக்வாண்டோ பயிற்சியாளர் நாராயணன்.

கின்னஸ் பயிற்சியின் போது நாராயணன்
கின்னஸ் பயிற்சியின் போது நாராயணன்

இவர் இந்தக் கலையை வளர்க்க வேண்டும் என முற்பட்டு கடந்த 2 வருடங்களில் 14 கின்னஸ் சாதனை படைத்து டேக்வாண்டோ கலைக்குப் பெருமையைத் தேடித்தந்துள்ளார்.

இதுகுறித்து டேக்வாண்டோ பயிற்சியாளர் நாராயணன்...," டேக்வாண்டோ என்பது 80% கால்களை மட்டும் பயன்படுத்திச் செயல்படுத்தும் தற்காப்புக் கலையாகும். இந்தக் கலையை சென்னையில் நான் பொறியியல் படிக்கும் போது கற்றுக்கொண்டேன். என்னுடைய துறை வேறு என்றாலும் ஆர்வம் டேக்வாண்டோவின் மீது அதிகமாக இருந்தது.

கின்னஸ் விருது பெற்றபோது
கின்னஸ் விருது பெற்றபோது

சென்னையில் மென்பொறியாளராக இருக்கும் போதே பயிற்சியாளராக உருவெடுத்தேன். பின்பு, என்னுடைய ஆர்வத்தை முழுமையாக தற்காப்புக் கலையில் காட்ட வேண்டும் என சாஃப்ட்வேர் துறையை விட்டுவிட்டு மதுரைக்கு வந்தேன்.

வீட்டின் மாடியில் டேக்வாண்டோ தற்காப்பு பயிற்சி கூடத்தைத் தொடங்கி மாணவர்களுக்குப் பயிற்சியளித்து வருகிறேன். ஆரம்பத்தில் குறைந்த எண்ணிக்கையில் இருந்த டேக்வாண்டோ மாணவர்களின் வருகைப் பதிவு உயர்ந்துள்ளது. மதுரையில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கும் இந்தக் கலையைக் கொண்டு சேர்க்கிறேன்.

கின்னஸ் சாதனை பயிற்சியின் போது
கின்னஸ் சாதனை பயிற்சியின் போது

இந்தக் கலையை வெளிக்கொண்டுவர வேண்டும் எனக் கடந்த 2018 முதல் பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளேன். அதுவே கின்னஸ் உலக சாதனையாகவும் உருவெடுத்துள்ளது. 30 நொடியில் 4 கிலோ எடைகொண்ட தற்பூசணியை உடைத்துள்ளேன். அதே போல் கையில் 2 கிலோ எடையைக் கட்டிக்கொண்டு 3 நிமிடங்களில் 1,510 பஞ்ச்சுகள் செய்துள்ளேன்.

இப்படி 14 முறையில் டேக்வாண்டோ கின்னஸ் உலக சாதனையை 2 வருடங்களில் செய்துள்ளேன். என் மனைவிக்கும் டேக்வாண்டோ மீது ஆர்வம் ஏற்பட்டதால் அவரும் 1 கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார். தற்போது இருவரும் சேர்ந்து ஒரு கின்னஸ் உலக சாதனை முயற்சி செய்துள்ளோம். அதனுடைய முடிவுகளும் வர உள்ளது. இப்படி டேக்வாண்டோ பட்டியலில் கின்னஸ் உலக சாதனை படைத்ததால் பல இடங்களில் டேக்வாண்டோ கலை வெளியே தெரிய ஆரம்பித்துள்ளது.

கின்னஸ் பதக்கத்துடன் நாராயணன்
கின்னஸ் பதக்கத்துடன் நாராயணன்
ஈ.ஜெ.நந்தகுமார்

இந்தத் தற்காப்பு கலையால் எனது மாணவர்கள் வெளிநாடுகள் வரை சென்று திறமையை வெளிப்படுத்தும் வாய்ப்பு கிடைத்துள்ளது. என்னுடைய மனைவி ஸ்ருதி பெண்கள் மத்தியில் இந்தத் தற்காப்புக் கலையைக் கொண்டு செல்ல வேண்டும் என முனைப்போடு உள்ளார். இன்னும் பல சாதனைகளை டேக்வாண்டோவில் பதிப்போம்" என உற்சாகமாகத் தெரிவித்தார்.

அடுத்த கட்டுரைக்கு