Published:Updated:

`மரியாதை வேணும்னா, மதிக்க தெரியணும்!’- தகுதிச்சுற்று விவகாரத்தில் கொதித்த மேரி கோம்

நிகத் ஜரீன் - மேரி கோம்
நிகத் ஜரீன் - மேரி கோம்

மேரி கோம் அல்லது எந்த வீராங்கனையாக இருந்தாலும் சரி, ட்ரைல் வைக்க வேண்டும். அனைத்துப் போட்டியாளர்களுக்கும் சமமான வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதுதான் எனது கோரிக்கையாக உள்ளது.

அடுத்த ஆண்டு, டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடக்க உள்ளது. இதற்கான தகுதிச்சுற்றுப் போட்டிகள் பிப்ரவரியில் நடக்க உள்ளது. குத்துச்சண்டை போட்டியில், மேரி கோம் 51 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்று விளையாடிவருகிறார். இதேபிரிவில் நிகத் ஜரீனும் பங்கேற்றுவருகிறார். டோக்கியோ ஒலிம்பிக் தகுதிச்சுற்றுக்கு மேரிகோமை அனுப்புவதற்கு குத்துச்சண்டை சம்மேளனம் முடிவுசெய்திருந்தது. சம்மளேனத்தின் இந்த முடிவு, நிகத் ஜரீனுக்கு ஏமாற்றத்தை அளித்தது. இருவரும் ஒரே பிரிவில் விளையாடிவருகிறோம். ஆனால், மேரி கோமுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது எனத் தனது கோபத்தை வெளிப்படுத்தினார்.

மேரிகோம்
மேரிகோம்
ANI

இதைத் தொடர்ந்து நிகத் ஜரீன், ``ஒலிம்பிக் போட்டியில் 23 தங்கம் வென்ற மைக்கேல் பெல்ப்ஸ் ட்ரைல் போட்டிகளில் பங்கேற்கிறார். நான் எந்த உதவியையும் எதிர்பார்க்கவில்லை. மேரி கோம் அல்லது எந்த வீராங்கனையாக இருந்தாலும் சரி, ட்ரைல் வைக்க வேண்டும். அனைத்துப் போட்டியாளர்களுக்கும் சமமான வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதுதான் எனது கோரிக்கையாக உள்ளது. ஒலிம்பிக்கில் இந்தியாவுக்குப் பெருமை சேர்க்க வேண்டும் என்பதே விருப்பம். விளையாட்டை கெளரவப்படுத்துவதற்கு உதவ வேண்டும்” என்று ட்விட்டர் மூலம் கேட்டுக்கொண்டார்.

இந்தச் சம்பவங்களைத் தொடர்ந்துதான் இன்று ஒலிம்பிக் தகுதிச்சுற்றுகளுக்கான போட்டி டெல்லியில் நடைபெற்றது. சர்ச்சைகளுக்குப் பின்னர் நடைபெறும் போட்டி என்பதால், இந்தப் போட்டிக்கு அதிக எதிர்பார்ப்பு இருந்தது. இந்நிலையில், போட்டியில் மேரி கோம் முழுமையாக ஆதிக்கம் செலுத்தினார். முடிவில், மேரி கோம் 9-1 என்ற கணக்கில் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதன்மூலம், ஒலிம்பிக் போட்டிக்கான தகுதிச் சுற்றில் விளையாட மேரி கோம் தகுதிபெற்றார்.

`மரியாதை வேணும்னா, மதிக்க தெரியணும்!’- தகுதிச்சுற்று விவகாரத்தில் கொதித்த மேரி கோம்

போட்டி முடிந்த பின்னர், மேரி கோம் நிகத் ஜரீனுடன் கைகுலுக்க மறுத்தார். இதுதொடர்பான வீடியோக்கள் சமூக வலை தளங்களில் பரவின. இதைத் தொடர்ந்து, தான் களத்தில் நடந்து கொண்ட விதம் தொடர்பாக விளக்கம் அளித்துள்ளார், மேரி கோம். இதுதொடர்பாகப் பேசிய மேரி கோம், ``நான் ஏன் அவருடன் கைகுலுக்க வேண்டும்? அவரை ஒருவர் மதிக்க வேண்டும் என்றால், முதலில் அவர் மற்றவர்களை மதிக்க வேண்டும். இதுபோன்ற மனநிலை கொண்டவர்களை நான் விரும்புவதில்லை.

உங்களின் கருத்துகளை நீங்கள், களத்தில் வந்து நிரூபிக்க வேண்டும். களத்துக்கு வெளியே இருந்து கருத்து சொல்லத் தேவையில்லை” என்றார் காட்டமாக. இந்நிலையில், இதற்குப் பதிலளித்துள்ள ஜரீன், ``மூத்தவர்கள் இளையவர்களை மதிக்க வேண்டும். போட்டி முடிந்த பின்னர் அவருடன் கைகுலுக்கச் சென்றபோது, அவர் அவ்வாறு நடந்துகொண்டது எனக்கு வேதனை அளித்தது” என்றார்.

சமூக வலை தளங்களில் மேரி கோமுக்கு ஆதரவாகவும் எதிராகவும் கருத்துகள் பதியப்பட்டுவருகிறது. ''மூத்த வீரரான மேரி கோம், இளம் வீராங்கனையிடம் இத்தனை கடினமாக நடந்துகொள்ளவேண்டியதில்லை என்ற கருத்தும் கூறப்படுகிறது. அதேநேரம், புதிதாக வரும் வீரர் வீராங்கனைகள், மூத்த வீரர்களை மதிக்கத் தெரிய வேண்டும். தனக்குத்தான் எல்லாம் தெரியும் என நடந்துக்கொள்ளக்கூடாது'' போன்ற தகவல்களும் மேரி கோமுக்கு ஆதரவாகப் பதியப்படுகிறது.

அடுத்த கட்டுரைக்கு