Published:Updated:

FIFA World Cup 2022: கத்தாருக்குச் சென்ற ஒன்றரைக் கோடி நாமக்கல் முட்டைகள் - சுவாரஸ்ய பின்னணி!

நாமக்கல் முட்டை ( நா.ராஜமுருகன் )

"எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு உலகக்கோப்பைக் கால்பந்துப் போட்டியால், முட்டைக்கு நல்ல ரேட் கிடைக்கிறது. சுவாரஸ்யமா சொல்றதுன்னா, சபரிமலை சீசனால் குறையும் முட்டை ரேட்டை மெஸ்ஸி உயர்த்தியிருக்கிறார்."

FIFA World Cup 2022: கத்தாருக்குச் சென்ற ஒன்றரைக் கோடி நாமக்கல் முட்டைகள் - சுவாரஸ்ய பின்னணி!

"எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு உலகக்கோப்பைக் கால்பந்துப் போட்டியால், முட்டைக்கு நல்ல ரேட் கிடைக்கிறது. சுவாரஸ்யமா சொல்றதுன்னா, சபரிமலை சீசனால் குறையும் முட்டை ரேட்டை மெஸ்ஸி உயர்த்தியிருக்கிறார்."

Published:Updated:
நாமக்கல் முட்டை ( நா.ராஜமுருகன் )
உலகக் கால்பந்து ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த உலகக் கால்பந்துப் போட்டி கத்தார் நாட்டில் கோலாகலமாகத் தொடங்கிவிட்டது. இந்நிலையில், அங்குக் குவியும் லட்சக்கணக்கான ரசிகர்கள் மற்றும் வீரர்களின் உணவுத்தேவைக்காக நாமக்கல் மாவட்டத்திலிருந்து ஒன்றரைக் கோடி முட்டைகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.
நாமக்கல் முட்டை
நாமக்கல் முட்டை
நா.ராஜமுருகன்

உலகம் முழுக்க அதிக ரசிகர்களைக் கொண்டதும், அதிகம் ரசிகப்படுவதுமான விளையாட்டு என்றால் அது நிச்சயமாகக் கால்பந்துதான். மைதானத்தில் 'தீ'பிடிக்க நடக்கும் இந்த விளையாட்டை, வெறித்தனமாகக் கண்ணீர்விட்டபடி கண்டுரசிக்கும் ரசிகர்கள்தான் அதிகம். அதுவும், கால்பந்தில் அதிகம் சோபிக்காத இந்தியாவிலேயே அந்த விளையாட்டுக்கு 'அதிதீவிர' ரசிகர்கள் இருக்கிறார்கள். கேரளாவைச் சேர்ந்த சில இளைஞர்கள், உலகக் கால்பந்துப் போட்டியை நண்பர்களுடன் சேர்ந்து குதூகலமாகக் கண்டுகளிக்க ஏதுவாக, ரூ. 21 லட்சம் கொடுத்து ஒரு வீட்டையே வாங்கியிருப்பதாகச் சொல்கிறார்கள். அந்த வீட்டில், கால்பந்து விளையாட்டின் சூப்பர்ஸ்டார் வீரர்களின் உருவங்களை வரைந்து அசத்தியிருக்கிறார்கள்.

முட்டை ஏற்றுமதி
முட்டை ஏற்றுமதி
நா.ராஜமுருகன்

இதற்கிடையில், ஐக்கிய அரபு நாடுகளில் ஒன்றான கத்தாரில் கால்பந்துப்போட்டி நடப்பதால், கடந்த 20 வருடங்களுக்குப் பிறகு ஆசியக்கண்டத்தில் உள்ள ஒரு நாட்டில் கால்பந்துப் போட்டி நடக்கிறது என்பது ஒரு முக்கியமான வரலாற்றுத் தகவல். இதனால், அங்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் குவிவார்கள். இந்த நிலையில்தான், முட்டைக்குப் பிரசித்திபெற்ற மாவட்டமான நாமக்கல் மாவட்டத்திலிருந்து ஒன்றரைக் கோடி எண்ணிக்கையிலான முட்டைகள் கப்பல் மூலம் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து, நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த முட்டை ஏற்றுமதியாளர்களில் ஒருவரான அப்துல் ரஹ்மானிடம் பேசினோம்.

"நாமக்கல் மண்டலத்தில் 1,100 முட்டைக் கோழிப்பண்ணைகள் உள்ளன. அதோடு 15 ஏற்றுமதியாளர்கள் இருக்கிறோம். இங்கிருந்து வழக்கமாக முட்டைகள் தமிழ்நாடு மட்டுமன்றி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா என இந்திய மாநிலங்கள் முழுக்கப் போகும். அதேபோல், உலக அளவில் துபாய், கத்தார், பக்ரைன், ஓமன், மாலத்தீவு எனப் பத்துக்கும் மேற்பட்ட நாடுகளுக்கு முட்டைகள் ஏற்றுமதி ஆகும்.

அப்துல் ரஹ்மான் (முட்டை ஏற்றுமதியாளர்)
அப்துல் ரஹ்மான் (முட்டை ஏற்றுமதியாளர்)
நா.ராஜமுருகன்

ஐக்கிய அரபு நாடுகள், துருக்கி இல்லைன்னா நாமக்கல்லில் முட்டைகள் வாங்குவாங்க. அவங்களுக்கு முட்டைகள் தேவைப்படும் நேரத்தில் எங்கு முட்டை விலை, போக்குவரத்துச் செலவு உள்ளிட்டவை குறைவாக இருக்கிறதோ அங்கு வாங்குவார்கள். பொதுவாக, அரபு நாடுகளுக்கு மாதத்துக்கு 2 கோடி எண்ணிக்கையிலான முட்டைகள் ஏற்றுமதி செய்யப்படும். கத்தாருக்கு மட்டும் 50 லட்சம் முட்டைகள் செல்லும். ஆனால், கத்தாரில் உலககோப்பை நடப்பதால் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ஒன்றரைக் கோடி முட்டைகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

அங்கு வரும் லட்சக்கணக்கான ரசிகர்கள், வீரர்களுக்கு உணவுத்தேவை அதிகரிக்கும் என்பதால் கூடுதலாக அங்கு முட்டைகள் வாங்கப்படுகின்றன. கத்தாரில் எல்லா உணவுகளிலும் முட்டை சேர்க்கப்படுகிறது. அதோடு, வீரர்களுக்கு உடல் வலிமையாக இருக்க முட்டை வழங்கப்படுகிறது. அந்த வகையில், அந்த நாட்டுக்கு எப்போதையும்விட மூன்று மடங்கு முட்டைகள் அதிகமாகச் சென்றுள்ளன. அதேபோல் தமிழகம், கேரளாவில் இது ஐயப்பன் கோயிலுக்கு பக்தர்கள் மாலை போடும் மாதம். பொதுவாக, இந்த மாதத்தில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகாவில் முட்டையின் விலை ரூ.1 வரை என வழக்கமான விலையைவிட குறையும். ஆனால், முட்டை ஒன்று ரூ. 4.60 என்றிருந்த விலை, கத்தாருக்கு முட்டைகள் தொடர்ந்து ஏற்றுமதியாவதால், ரூ.5.35 ஆக உயர்ந்திருக்கிறது. தொடர்ந்து, விலை உயர்ந்தே காணப்படுகிறது.

நாமக்கல் முட்டை
நாமக்கல் முட்டை
நா.ராஜமுருகன்

தினமும் நாலரைக் கோடி அளவிலான முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு உலகக்கோப்பைக் கால்பந்துப் போட்டியால், முட்டைக்கு நல்ல ரேட் கிடைக்கிறது. சுவாரஸ்யமா சொல்லனும்ன்னா, சபரிமலை சீசனால் குறையும் முட்டை ரேட்டை மெஸ்ஸி உயர்த்தியிருக்கிறார். இதனால், நாமக்கல் மண்டல முட்டை உற்பத்தியாளர்களும், ஏற்றுமதியாளர்களும் மகிழ்ச்சியில் உள்ளோம்" என்றார்.