Published:Updated:

`ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வதே எனது கனவு!’- தேசிய தடகளத்தில் சாதித்த ஊட்டி மாணவி

தேசிய அளவிளான 16 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் நீலகிரி மாவட்டம் ஊட்டியைச் சேர்ந்த மாணவி மூன்றாவது இடம் பெற்று வெண்கலம் வென்று சாதனை படைத்துள்ளார்.

Sharon Mariya
Sharon Mariya

ஆந்திர மாநிலம், குண்டூரில் தேசிய அளவிலான தடகள போட்டிகள் கடந்த 2-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை நடைபெற்றது. மாநில அளவிலான போட்டிகளில் தகுதிபெற்ற விளையாட்டு வீரர்கள் நாடு முழுவதிலும் இருந்து பங்கேற்றனர். தமிழகத்திலிருந்து 200-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர். வயது பிரிவுகளின் அடிப்படையில் போட்டிகள் நடைபெற்றன.

Sharon Mariya
Sharon Mariya

இதில் 16 வயதுக்கு உட்பட்ட பெண்கள் பிரிவில் நீலகிரி மாவட்டம், ஊட்டியைச் சேர்ந்த ஷேரன் மரியா என்ற 11-ம் வகுப்பு பள்ளி மாணவி மூன்றாவது இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

இந்த வெற்றி குறித்து மாணவி ஷேரன் மரியா, ``என் அம்மா உடற்கல்வி ஆசிரியர் என்பதால், சிறு வயது முதல் மைதானத்திலேயே எனது பொழுதுகள் கழிந்தன. விளையாட்டு மீது ஏற்பட்ட ஆர்வம் காரணமாக கடுமையான பயிற்சியை மேற்கொண்டேன். தற்போது முதன்முறையாக தேசிய போட்டியில் பங்கேற்று மூன்றாம் இடம் கிடைத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கக் கூடியதாக உள்ளது. ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்று நாட்டுக்குப் பெருமை சேர்க்க வேண்டும் என்பது கனவாக உள்ளது" என நம்பிக்கை தெரிவித்தார்.

Sharon Mariya With parents
Sharon Mariya With parents

பதக்கம் வென்ற மாணவியின் தாய் ஜூலியட் பேசுகையில், ``உடல் ஆரோக்கியத்தை கருத்தில்கொண்டு விளையாட்டுத்துறையில் அனைவரும் சிறப்பாக செயல்பட வேண்டும் என்பதே எனது விருப்பம். அதேபோல் என் மகளையும் விளையாட்டில் உள்ள ஆர்வத்தைக் கண்டறிந்து பயிற்சி அளித்தோம். தற்போது தேசிய அளவில் பதக்கம் வென்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது" என்றார்.