கட்டுரைகள்
Published:Updated:

போட்டிக்கெல்லாம் பொது விடுமுறை!

ஒலிம்பிக் போட்டிகள்
பிரீமியம் ஸ்டோரி
News
ஒலிம்பிக் போட்டிகள்

ஒலிம்பிக் போட்டிகள் ரத்து செய்யப்படுவதோ, தள்ளிவைக்கப்படுவதோ இது நான்காவது முறை.

உலகின் மிகப்பெரிய விளையாட்டுத் தொடரான ஒலிம்பிக்ஸ் கொரோனாவின் தாக்கத்தால் தள்ளிப்போயிருக்கிறது.

கனடா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற நாடுகள் தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்த நிலையில், ஒரு வருடம் போட்டியைத் தள்ளிவைக்க சம்மதம் தெரிவித்திருக்கிறது டோக்கியோ ஒலிம்பிக்கின் ஒருங்கிணைப்புக் குழு. கடந்த ஆறாண்டுகளாக இந்தத் தொடருக்காகத் தயாராகிவந்த டோக்கியோ இப்போது ஸ்தம்பித்துக்கிடக்கிறது.

ஒலிம்பிக் போட்டிகள்
ஒலிம்பிக் போட்டிகள்

`40 ஆண்டுக்கு ஒருமுறை ஒலிம்பிக்குக்கு ஏதாவது தடங்கல் வந்துவிடுகிறது’ என்று புலம்பிக்கொண்டிருக்கிறார்கள் ரசிகர்களும் அமைப்பாளர்களும். ஆம், 1940-ம் ஆண்டு இதே டோக்கியோவில் ஒலிம்பிக் தொடர் நடப்பதாக இருந்தது. ஆனால், இரண்டாம் உலகப் போரின் காரணமாக அந்த ஒலிம்பிக்கே ரத்து செய்யப்பட்டது. அடுத்து 1980! ரஷ்யாவின் ஆப்கான் படையெடுப்பைக் காரணம் காட்டி அமெரிக்கா போர்க்கொடி தூக்க, மொத்தம் 65 நாடுகள் மாஸ்கோ ஒலிம்பிக்கைப் புறக்கணித்தன. இப்போது மீண்டும் 40 ஆண்டுகள் கழித்து இன்னொரு தடங்கல்!

ஒலிம்பிக் போட்டிகள் ரத்து செய்யப்படுவதோ, தள்ளிவைக்கப்படுவதோ இது நான்காவது முறை. 1916 பெர்லின் ஒலிம்பிக் முதல் உலகப் போரால் கைவிடப்பட்டது. இரண்டாம் உலகப் போரின் காரணமாக டோக்கியோ (1940), லண்டன் (1944) ஒலிம்பிக்தொடர்கள் கைவிடப்பட்டன. அதன்பிறகு இப்போதுதான் குறிப்பிட்ட நேரத்தில் ஒலிம்பிக் நடப்பது தடைப்பட்டிருக்கிறது. இந்த ஜூலை 24-ல் தொடங்குவதாக இருந்த தொடரை, அடுத்த ஆண்டு ஜூலை 23-ம் தேதி தொடங்கத் திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது.

ஒலிம்பிக் போட்டிகள்
ஒலிம்பிக் போட்டிகள்

ஆனால், இந்தச் சிக்கல் ஒலிம்பிக்குக்கு மட்டுமல்ல, யூரோ கோப்பைக் கால்பந்துத் தொடரும் ஒரு வருடம் தள்ளிவைக்கப் பட்டிருக்கிறது. இத்தாலி, ஜெர்மனி, ஸ்பெய்ன் போன்ற ஐரோப்பிய நாடுகளில் கொரோனா பாதிப்பு அதிகரித்தபோதே, இந்தத் தொடரைத் தள்ளிவைத்துவிட்டது ஐரோப்பியக் கால்பந்துக் கூட்டமைப்பு.

வழக்கமாக ஒரு நாட்டிலோ அல்லது ஓரிரு நாடுகளிலோ நடத்தப்படும் இந்தத் தொடரை, இம்முறை புதுமையாக நடத்த நினைத்தனர். இந்தத் தொடரின் 60-வது ஆண்டையொட்டி ஐரோப்பா முழுவதும் பல நகரங்களில் இத்தொடரை நடத்தத் திட்டமிட்டனர். லண்டன், மூனிச், ஆம்ஸ்டர்டாம், ரோம் உட்பட மொத்தம் 12 நகரங்கள் இதற்காகத் தேர்வு செய்யப்பட்டன. ஒலிம்பிக்கைப் போல் யூரோவும் சரியாக ஒரு வருடம் தள்ளிவைக்கப்பட்டிருக்கிறது. வரும் ஜூன் 12 தொடங்கவிருந்த தொடர், அடுத்த ஜூன் 11 தொடங்கும். ஆண்களுக்கான தொடர் ஒரு வருடம் தள்ளிப்போயிருப்பதால், அடுத்த ஆண்டு நடக்கவிருந்த பெண்களுக்கான யூரோ இன்னும் ஓராண்டு தள்ளிவைக்கப்படலாம் என்று தெரிகிறது.

ஐரோப்பாவின் கால்பந்து லீக் தொடர்கள் முழுமையாக முடிவுறாத நிலையில், எப்போது லீகைத் தொடங்குவது எப்போது முடிப்பது என்று குழம்பிக்கிடக்கிறார்கள். காரணம், மொத்த ஐரோப்பாவும் கடும் அவதிக்குள்ளாகி யிருக்கிறது. அதிலும் குறிப்பாக இத்தாலி, ஜெர்மனி, ஸ்பெய்ன், இங்கிலாந்து என கால்பந்து ஜாம்பவான்களெல்லாம் பெரிய அடி வாங்கியிருப்பதால், இப்போதைக்கு எந்த லீகையும் தொடங்குவது சாத்தியமில்லை.

ஒலிம்பிக் போட்டிகள்
ஒலிம்பிக் போட்டிகள்

எல்லாம் சரியானபின் தொடரலாம் என்றால், அதிலும் பெரிய சிக்கல் இருக்கிறது. பொதுவாக, ஓர் அணியுடனான வீரர்களின் ஒப்பந்தம் ஜூன் 30-ம் தேதி முடிந்துவிடும். ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் டிரான்ஸ்ஃபர் விண்டோ தொடங்கிவிடும். ஒருவேளை ஜூன் முடிவுக்குள் சீசனை முடிக்க முடியவில்லையென்றால், அந்த வீரர்கள் ஒப்பந்தத்துக்குப் பிறகும் அணியில் தொடர்வார்களா என்பது கேள்விக்குறிதான். அதனால், தாமதம் ஆக ஆக கால்பந்து சீசனை நடத்துவது மிகவும் சிரமமாகிவிடும்.

கிரிக்கெட்டிலும் பல மாற்றங்கள் நடக்கக்கூடும். டி-20 உலகக் கோப்பை திட்டமிட்ட தேதியில் தொடங்குமா என்று தெரியவில்லை. இதுவரை ஐ.சி.சி இதுபற்றி வாய்திறக்கவே இல்லை. ஒருவேளை அந்தத் தொடர் தள்ளிப்போனால், சர்வதேசத் தொடர்கள் நடப்பதிலும் பல மாற்றங்கள் ஏற்படலாம். டெஸ்ட் சாம்பியன்ஷிப், ஒருநாள் சாம்பியன்ஷிப் போன்றவற்றுக்கான அட்டவணைகளில் மாற்றங்கள் கட்டாயம் இருக்கும். அதேபோல், ஐ.பி.எல்!

டி-20 உலகக் கோப்பை நடக்குமென்றால், அதற்கு முன் இப்போதைய சூழ்நிலையில் ஐ.பி.எல் நடத்த முடியாது. அப்படி உலகக் கோப்பை தள்ளிப்போனாலும், திட்டமிட்ட சர்வதேசத் தொடர்கள் நடக்கும். அதனால், வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்பது தடைப்படும். அதனால், இந்த விஷயங்களையெல்லாம் பரிசீலித்துத்தான் பி.சி.சி.ஐ முடிவெடுக்க முடியும். கங்குலி என்ன முடிவெடுப்பார் பார்ப்போம்!

விகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம் 2020-2021

ன்பான மாணவர்கள் கவனத்துக்கு...விகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்துக்கான விண்ணப்பங்கள் வந்து சேரவேண்டிய கடைசி தேதி 31.03.2020 என்று முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கொரானோ நோய்த்தொற்றினால் நிலவும் அசாதாரண சூழல் காரணமாக, அந்தத் தேதி மேலும் நீட்டிக்கப்படுகிறது. ஆன்லைனில் விண்ணப்பிப்பவர்கள்விண்ணப்பிக்கலாம். கடைசி தேதி குறித்து பின்னர் அறிவிக்கப்படும்.

-ஆசிரியர்