Published:Updated:

`தோனி ஊரில் காலி இருக்கைகள்..'- ராஞ்சி டெஸ்ட்டுக்கு வந்த சோதனை!

'காலி மைதானங்களைப் பார்ப்பதற்கு வேதனையாக இருக்கிறது'என ஜார்கண்ட் மாநில கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Ranji Stadium
Ranji Stadium

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள்தான் ஒரு வீரனின் முழுமையான திறமையை உலகுக்கு அடையாளம் காட்டும். அசுர பலம் கொண்ட ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளில் டெய்ல் எண்ட் பேட்ஸ்மேன்களை வைத்தே தண்ணிகாட்டினார் வி.வி.எஸ்.லட்சுமணன். டிராவிட், சச்சின், வி.வி.எஸ்.லட்சுமண், சேவாக், கம்பீர் போன்ற வீரர்களின் பேட்டிங்கைக் காணவே மைதானத்தில் ரசிகர்கள் குவிந்தது ஒரு காலம். டி-20 வருகைக்குப் பிறகு, உலக அரங்கில் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு இருக்கும் மவுசு குறைந்ததாகப் பார்க்கப்படுகிறது. அதுவும் இந்தியாவில் டி-20, ஒரு நாள் போட்டிகள் என்றால் மைதானங்களில் ரசிகர்கள் குவிகின்றனர். ஆனால்,டெஸ்ட் போட்டிகளுக்கு ஆள் பிடித்து வரவேண்டிய சூழல்தான் நிலவுகிறது.

Indian Cricket team
Indian Cricket team

இங்கிலாந்து-ஆஸ்திரேலியா மோதும் ஆஷஸ் டெஸ்ட் தொடருக்கு இருக்கும் மவுசு மற்ற நாடுகள் விளையாடும் டெஸ்ட் போட்டிகளுக்கு இல்லை. இதை கருத்தில் கொண்டு, டெஸ்ட் சாம்பியன் ஷிப் தொடரை ஐசிசி கொண்டுவந்தது. இருந்தும் அரங்குகள் நிறைந்தபாடில்லை. இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, ராஞ்சியில் நாளை நடைபெறுகிறது. 39,000 பேர் அமரக்கூடிய ராஞ்சி மைதானத்தில் 1,500 டிக்கெட்டுகள் மற்றுமே விற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. ரூபாய் 200 முதல் 2000 வரை டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுகின்றன.

இதுகுறித்து பேசியுள்ள ஜார்கண்ட் மாநில கிரிக்கெட் சங்கத் தலைவர் நாஃபிஸ் கான், “ அடுத்த முறை ராஞ்சியில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் நடத்துவதுகுறித்து பலமுறை சிந்திக்க வேண்டும். அதே நேரத்தில், நாங்கள் மறுப்பு தெரிவிக்க மாட்டோம். டெஸ்ட் கிரிக்கெட்டை மாநில சங்கங்கள் மறுக்கத் தொடங்கினால் விளையாட்டின் தூய்மையான வடிவம் மறைந்துவிடும். காலி மைதானங்களைப் பார்ப்பதற்கு வேதனையாக இருக்கிறது. டெஸ்ட் கிரிக்கெட்டில் சில மாற்றங்களைக் கொண்டு வரவேண்டியது அவசியம்” என்று வருத்தத்துடன் கூறியுள்ளார்.

indian cricket team
indian cricket team

காலி மைதானங்களில் கிரிக்கெட் போட்டிகளை நடத்த விரும்பாத ஜார்கண்ட் கிரிக்கெட் சங்கம், சிஆர்பிஎஃப் வீரர்களுக்கு 5000 டிக்கெட்டுகளை இலவசமாக வழங்கியுள்ளது. 10,000 டிக்கெட்டுகளைப் பள்ளி, கல்லூரி மற்றும் க்ளப்புகளுக்கு இலவசமாக வழங்கியுள்ளது. ஆனாலும் மைதானத்தில் உள்ள இருக்கைகளை நிரப்புவதற்கு இது போதாது. இன்றைய இளைஞர்களுக்கு டெஸ்ட் கிரிக்கெட்டின்மீது ஆர்வம் குறைந்ததே இதற்குக் காரணம் என்கிறார்கள், கிரிக்கெட் விமர்சகர்கள். ராஞ்சி, தோனியின் சொந்த ஊர் என்பது குறிப்பிடத்தக்கது. தோனி விளையாடாததும் டிக்கெட் விற்பனை சரிவுக்குக் காரணம் என்கிறார்கள். அதேநேரத்தில், மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா 2-0 என்ற நிலையில் கைப்பற்றிவிட்டது. இரண்டு போட்டிகளிலும் தென்னாப்பிரிக்கா அணி பெரிதாக டஃப் கொடுக்கவில்லை. இதுவும் ஒரு காரணமாகப் பார்க்கப்படுகிறது.