சினிமா
Published:Updated:

நார்த் மெட்ராஸ் நாக்-அவுட் பாய்ஸ்

நார்த் மெட்ராஸ் நாக்-அவுட் பாய்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
நார்த் மெட்ராஸ் நாக்-அவுட் பாய்ஸ்

தங்கமும் வெள்ளியுமாக நூலாம்படை படிந்த பதக்கங்கள் ஒருபக்கம் தொங்கிக்கொண்டிருக்கின்றன. மாணவர்கள் வென்றுவந்த கோப்பைகள் ஒரு பக்கம் அடுக்கிவைக்கப்பட்டுள்ளன.

சென்னை, மூலக்கொத்தளம் இடுகாட்டை ஒட்டியிருக்கிறது அந்தப் பூங்கா. முகப்பில் தகரத்தால் பிரிக்கப்பட்ட அகலமான அறை... அதுதான் ராஜேஷின் குத்துச்சண்டைப் பயிற்சி மையம்.

உள்ளே விதவித வடிவங்களில் பஞ்சிங் பேக்குகளும் உடற்பயிற்சி உபகரணங்களும் நிரம்பியிருக்கின்றன. ஐம்பதுக்கும் மேற்பட்ட சிறுவர்கள் ஆக்ரோஷமாகக் குத்திப்பழகுகிறார்கள். உதட்டை மடித்துக்கொண்டு நெஞ்சு புடைக்க நின்று, ஒரு சிறுவனுக்கு லாகவம் கற்றுக்கொடுத்துக்கொண்டிருக்கிறார் ராஜேஷ்.

தங்கமும் வெள்ளியுமாக நூலாம்படை படிந்த பதக்கங்கள் ஒருபக்கம் தொங்கிக்கொண்டிருக்கின்றன. மாணவர்கள் வென்றுவந்த கோப்பைகள் ஒரு பக்கம் அடுக்கிவைக்கப்பட்டுள்ளன. யுத்தக்களம்போல இயங்கிக்கொண்டிருக்கிறது அந்த மையம்.

ராஜேஷ், தேசியக் குத்துச்சண்டை வீரர். ஜூனியர், சப் சீனியர், சீனியர் பிரிவுகளில் விளையாடியவர். இப்போது, ரயில்வே பார்சல் சர்வீஸில் மூட்டை தூக்கிக்கொண்டிருக்கிறார். தன் குத்துச்சண்டைக் கனவை அடுத்த தலைமுறைமீது விதைத்துப் பயிற்றுவித்துக் கொண்டிருக்கிறார்.

மாணவர்களுடன் ராஜேஷ்
மாணவர்களுடன் ராஜேஷ்

‘‘குத்துச்சண்டைங்கிறது, இந்த மண்ணோட கலை. எங்க ரத்தத்துல இருக்கு. இரவு பகல் பாக்காம உழைச்சு உடம்பை இரும்பு மாதிரி வச்சிருந்தாங்க, எங்க தாத்தாக்கள். இவங்க பலத்தைப் பார்த்து வெள்ளைக்காரன், சாதி வாரியா பிரிச்சு சண்டைபோட விட்டு ரசிச்சான். பெரிய பெரிய வீரர்கள் இங்கே இருந்திருக்காங்க. எம்.ஜி.ஆர், சிவாஜி மாதிரி அவங்களுக்கும் ஏகப்பட்ட ரசிகர்கள் இருந்திருக்காங்க. இப்போகூட ஆறுமுகம்ங்கிற வீரர் இங்கே இருக்கார். அவர் பேரே 'நாக் அவுட்' ஆறுமுகம். இப்பவும் வடசென்னைக்காரன் ஒவ்வொருத்தனும் மனசளவுல ஒரு குத்துச்சண்டை வீரனாத்தான் இருக்கான். இதோ இந்த மூலக்கொத்தளத்துல ஏதாவது ஒரு தெருவுல போயி இறங்கி, `இங்கே யாராவது பாக்ஸர் இருக்காரா'ன்னு கேளுங்க... ரெண்டு பேரோட வீட்டைக் காமிப்பாங்க. அது ஒரு பெருமை சார்..." வழியும் வியர்வையைத் துடைத்தபடி பெருமிதம் ததும்பச் சொல்கிறார் ராஜேஷ்.

ராஜேஷின் அப்பா ஆட்டோ டிரைவர். அம்மா, பூ விற்கிறார். அண்ணன் டிரைவர். தம்பிக்கு மட்டும் படிப்பு வாய்த்திருக்கிறது. ராஜேஷ் படித்தது பத்தாம் வகுப்பு.

``பெரிய வறுமையைக் கடந்து இப்போதான் கொஞ்சம் மீண்டெழுந்து வர்றோம்... பத்தாம் வகுப்போட என் படிப்பு முடிஞ்சிருச்சு. சின்னச்சின்னதா சில வேலைகள் பாத்துக்கிட்டிருந்தேன். ஒருநாள் சைக்கிள்ல வேலை முடிச்சுட்டு வீட்டுக்குப் போய்க்கிட்டிருந்தேன். பைக்ல ராங்கா வந்த ஒருத்தர் இடிச்சுட்டார். கீழே விழுந்து எனக்குக் கால்ல அடிபட்டிருச்சு. ஆனாலும், அந்த ஆள் இறங்கிவந்து என்னை அடிச்சுட்டார். அப்போதான் நினைச்சேன், நாமளும் குத்துச்சண்டை கத்துக்கணும்னு. பாக்ஸர்களைத் தேடியலைஞ்சேன். நேரு ஸ்டேடியத்துல சக்திவேல்னு ஒரு மாஸ்டர் கத்துக்கொடுக்கிறார்னு கேள்விப்பட்டு, போய்ச் சேர்ந்தேன். அடிப்படையான பல விஷயங்களை அவர் கத்துக்கொடுத்தார்.

அப்பாவுக்கு முருகன்னு ஒரு நண்பர் உண்டு. பெரிய குத்துச்சண்டை ஜாம்பவான். ஒலிம்பிக் போயிருக்க வேண்டிய வீரர். ஆனா அவருக்கும் சரியான வழிகாட்டுதல் இல்லே. அவர் ஒரு கிளப் நடத்தினார். ஒருநாள் என்னை அழைச்சு, `உடம்பை நல்லா வச்சிருக்கேடா... ரெகுலரா வா... கத்துத்தாறேன்’னு கூப்பிட்டார். அவர்தான் என்னை முழுமைப்படுத்தினார். இருபது பேருக்கு மேல அவர்கிடட பயிற்சி எடுத்தோம். தேசியப் போட்டிகள் வரைக்கும் போனோம். ஆனா, அதோட பயணம் அதோடு முடிஞ்சது. குத்துச்சண்டைதான் வாழ்க்கைன்னு நினைச்சு உழைச்ச எனக்கு கடைசியா வாய்ச்சது, மூட்டை தூக்குற வேலை. எனக்கு மட்டுமில்லே... என்னை மாதிரி பலபேரை உருவாக்கிய முருகனும் இன்னைக்கு லாரி ஷெட்ல மூட்டைதான் தூக்கிக்கிட்டு இருக்கார். நிறைய பாக்ஸர்கள், சாதிச்சும்கூட அங்கீகாரம் இல்லாம கிடைக்கிற வேலையைப் பாத்து வாழ்க்கையை ஓட்டிக்கிட்டிருக்காங்க...’’ வருத்தமாகப் பேசுகிறார் ராஜேஷ்.

காமன்வெல்த், ஒலிம்பிக் எனக் கனவுகளோடு இருந்த ராஜேஷுக்கு அவையெல்லாம் சாத்தியப்படவில்லை; பரிந்துரை, ஆதரவு, உதவி எனப் பல தடைகள்... ஒரு கட்டத்தில் போட்டிக் களத்திலிருந்து வெளியேறிவிட்டார்.

நார்த் மெட்ராஸ் நாக்-அவுட் பாய்ஸ்

``ஒரு ஆட்டோ டிரைவர் மகனுக்கு இதுவே பெரிய தூரம்... அவ்வளவுதான். அதுக்கு மேல செலவு பண்ண திராணியில்லை. இதுவே ஹரியானாவிலயோ, மணிப்பூர்லயோ இருந்திருந்தா அரசே அவங்களைத் தத்தெடுத்திருக்கும். மேரிகோம் ஜெயிச்சுட்டு வந்தவுடனே அரசு வேலை தரப்படுது. இங்கே அப்படி எதுவுமே நடக்கிறதில்லை. கடந்த அஞ்சு வருஷத்தில விளையாட்டுத்துறை அமைச்சர் யாருன்னே எங்களுக்குத் தெரியாது. வடசென்னையில இன்னைக்கு ஐந்நூறுக்கும் மேல பாக்ஸிங் கிளப்கள் இருக்கு. ஆனா, இங்கிருந்து தேசிய அளவுலயோ, சர்வதேச அளவுலயோ போய் ஜெயிச்சுட்டு வர முடியலே. ஆர்வமும் திறமையும் இங்கே கொட்டிக்கிடக்கு. அதை வளர்த்து எடுத்துட்டுப்போக யாருமில்லை. வீரர்களைத் தேர்வு பண்ணிப் பரிந்துரைக்க வேண்டிய குத்துச்சண்டை அசோசியேஷனே இங்கே இரண்டா இருக்கு. உலகத்துலயே வலுவான, சக்திமிக்க குத்துச்சண்டை வீரர்கள் வடசென்னையில இருக்காங்க. அவங்களை வளர்த்தெடுத்தா அவங்க தேசத்தோட கௌரவமா வளர்ந்து நிப்பாங்க. ஆனா, இங்கே ஏறெடுத்துப் பார்க்கக்கூட ஆளில்லை. குத்துச்சண்டையை நேசிச்சுக் கத்துக்க வர்றவங்க ஒரு கட்டத்துல பெரிய விரக்தியில விழுந்திடுறாங்க. ஈடுபாட்டோட இருக்கிறவங்களுக்கு அதுக்கான வழியைக் காட்டணும். எனக்கு முருகன் கிடைச்சமாதிரி, பத்துப் பேருக்கு நாம வழிகாட்டணும்னுதான் ஊர் ஊரா அலைஞ்சு பிள்ளைகளைக் கண்டுபிடிச்சு, பயிற்சி கொடுத்துக்கிட்டிருக்கேன்...’’ என்கிறார் ராஜேஷ்.

ராஜேஷின் முகாமில் பயிற்சி பெறுபவர்கள் அனைவருமே எளிய குடும்பத்துப் பிள்ளைகள். பெண்களும் இருக்கிறார்கள். தினமும் காலை ஆறு மணி முதல் ஏழரை வரை பயிற்சி. பத்து மணிக்கு ராஜேஷ் வேலைக்குக் கிளம்பிவிடுவார். மீண்டும் மாலை ஒன்றரை மணி நேரம் பயிற்சி. போட்டிகள் இருந்தால் வேலையை விட்டுவிட்டு முழு நேரப் பயிற்சி. ராஜேஷின் மாணவர்கள் மாநிலப் போட்டிகள் வரை எட்டியிருக்கிறார்கள்.

``இந்தப் பிள்ளைகளால நல்ல கிளவுஸ் வாங்க முடியாது. நல்ல ஷூ போட முடியாது. சத்துணவுகள் கிடைக்காது. ஆனாலும் போட்டிகள்ல இவங்க காட்டுற தீவிரத்தைப் பாக்கும்போது ஆச்சர்யமா இருக்கு. அரசாங்கம் இவங்கமேல கொஞ்சம் கருணை காட்டினா போதும். இங்கிருந்து பல குத்துச்சண்டை வீரர்களை உருவாக்க முடியும். முகமது அலி மாதிரி பெரிய பெரிய வீரர்கள் தேடிவந்து சண்டை போட்ட மண் இது. இன்னும் பத்து வருஷத்துல இங்கிருந்து யாராவது ரெண்டு பேரை ஒலிம்பிக் மைதானத்துல இறக்கணும். வடசென்னையோட பெருமையை அவங்க ஒலிம்பிக் களத்துல இருந்து பேசணும். அதுதான் சார் என் கனவு...’’ உறுதிபடச் சொல்லும் ராஜேஷின் கண்களில் அவ்வளவு வெளிச்சம்!