Published:Updated:

` இதுவரை இந்த வீடியோவை நான் பார்த்ததில்லை!' - தந்தை குறித்த பேட்டியால் கண்கலங்கிய ரொனால்டோ

ரொனால்டோ தன் தந்தை குறித்துப் பேசியுள்ள வீடியோ அவரின் ரசிகர்களைக் கண்கலங்க வைத்துள்ளது.

Cristiano Ronaldo
Cristiano Ronaldo

போர்ச்சுகல் கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ, சமீபத்திய நேர்காணலில் உணர்ச்சிவசப்பட்டு அழுத வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது. ரொனால்டோவின் தந்தை jose Dinis Aveiro மதுபோதைக்கு அடிமையானதால், கல்லீரல் செயலிழப்புக்கு ஆளாகி 2005-ம் வருடம் உயிரிழந்தார். அப்போது ரொனால்டோவுக்கு வயது 20 தான். இவரின் தந்தை மிகவும் கண்டிப்பானவராம். ரோனால்டோவின் இந்தப் புகழை எல்லாம் அவர் பார்த்திருக்கவில்லை. தந்தை, தன்னைப்பற்றி என்ன நினைத்திருப்பார் என்பதுகூட ரொனால்டோவுக்குத் தெரிந்திருக்கவில்லை.

Cristiano Ronaldo
Cristiano Ronaldo

இந்தநிலையில், பிரிட்டன் ஊடகம் ஒன்றின் நேர்காணலில் ரொனால்டோ பங்கேற்றார். அப்போது அவரின் தந்தை jose dinid averio மற்றும் ரொனால்டோ என இருவரும் இருக்கும் புகைப்படத் தொகுப்பைத் ஒளிபரப்பியுள்ளனர். ரொனால்டோ குறித்து அவரின் தந்தை பெருமையாக பேசும் வீடியோவும் அதில் இடம்பெற்றிருந்தது. இதைக் கண்டதும் ரொனால்டோ கண்கலங்கிவிட்டார். அவரால் தனது அழுகையைக் கட்டுப்படுத்த முடியவில்லை. ரொனால்டோ கண்களில் இருந்து கண்ணீர் வடிந்தது. ஒரு நிமிடம் அப்படியே அமைதியாகிவிட்டார். சூழலைப்புரிந்துகொண்ட நெறியாளரும் சற்று மவுனம் காத்தார்.

`இந்த வீடியோ உங்களுக்கு மிகவும் உணர்ச்சிவசமானது' என நெறியாளர் கூற, `நான் இதுவரை இந்த வீடியோவை பார்த்ததில்லை; மன்னித்துவிடுங்கள்' என ரொனால்டோ பதிலளித்தார்.

`உங்களுக்கு என்ன கவலை இருக்கிறது?' எனக் கேட்க, ` நான் உலகின் நம்பர் ஒன் வீரர் என்ற நிலையை அடைந்தபோதும் ஏராளமான விருதுகளைக் குவித்தபோதும் அதைப் பார்ப்பதற்கு அவர் இல்லை' எனக் கலங்கியவாறு பதிலளித்தார் ரொனால்டோ. தொடர்ந்து, ` நீங்கள் சிறந்தநிலையில் இருந்தபோது அவர் உங்களைப் பார்க்கவே இல்லையா?' என நெறியாளர் கேள்வி எழுப்பினார். ` இல்லை... என் குடும்பத்தினர் பார்த்துள்ளனர். என் அம்மா, சகோதரர்கள் ஏன்.. என் குழந்தைகள்கூட பார்த்துள்ளனர்.

என் தந்தை எதையுமே பார்த்ததில்லை. எனக்கு அவரைப் பற்றி நூறு சதவிகிதம் தெரியாது. அவர் எப்போதும் குடிபோதையிலே இருப்பார். அவருடன் நான் சாதாரணமாகப் பேசியதில்லை. இந்த நேர்காணல் மகிழ்ச்சியாகக் கடந்துவிடும் என நினைத்திருந்தேன். அழுதுவிடுவேன் என நினைக்கவில்லை. இந்தப் புகைப்படங்களை எல்லாம் இதுவரை பார்த்ததில்லை. இதனை எனது குடும்பத்தினரிடம் காட்ட வேண்டும்” என மிகவும் உணர்ச்சிவசப்பட்டுப் பேசியுள்ளார் ரொனால்டா.