90 ஸ் கிட்ஸ்'களின் பேவரைட் கிரிகெட் ப்ளேயர் என்றால் இவர்கள் இருவரது பெயர் தவறாமல் இருக்கும். ஒருவர் சச்சின், இன்னொருவர் கங்குலி. அக்காலக்கட்டத்தில் இவர்கள் இருவர் ரசிகர்களுக்கும் இடையே பல்வேறு போட்டிகளும், பலவித கருத்து வேறுபாடுகளும் தொடர்ந்து நிகழ்ந்துக்கொண்டே இருந்தது. ஆனால் இவர்கள் இருவருக்குமான நட்பு என்பது எப்போதுமே நிலையானதாகவே இருந்தது
கங்குலியை பலவித கோணங்களில் பார்த்த, அவருக்கு முந்தைய மற்றும் சமகால கிரிக்கெட் ப்ளேயராக இருந்தவர் சச்சின் டெண்டுல்கர். துடிதுடிப்பான இளம் விளையாட்டாளராக, சிறந்த பேட்ஸ்மேனாக, பரபரப்பான கேப்டனாக, தகுதியான ஆல்ரவுண்டராக, தற்போது கிரிக்கெட் வாரிய தலைவராக கங்குலியின் பல்வேறு அவதாரங்களை சச்சின் நேரடியாகவே கண்டுகளித்தவர். அவர்களிருவருக்குமான நட்பு என்பது போட்டியிலிருக்கும் போதும் சரி, போட்டியிலிருந்து ஓய்வு பெற்ற போதும் சரி, தொடர்ந்து தடையின்றி தொடர்கிறது.

இன்று இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக பொறுப்பு வகிக்கும் கங்குலி தற்போது 50 வயதைக் கடந்துள்ள நிலையில், கங்குலியினுடனான தன்னுடைய பல அனுபவங்களை சச்சின் பகிர்ந்துள்ளார்.
"சௌரவ் ஒரு சிறந்த கேப்டன். எந்த நேரத்தில் எப்படி செயல்பட வேண்டும் என்பது அவருக்கு தெரியும். அதே சமயம் அணியின் வீரர்களை எப்படி நடத்த வேண்டும். அவர்களுக்கு எந்த இடத்தில் சுதந்திரம் கொடுக்க வேண்டும். எந்த பொறுப்பை யாருக்கு கொடுக்க வேண்டும் என்பதும் அவருக்கு தெரியும். அவர் இந்திய அணியின் கேப்டனாக பொறுப்பேற்ற போது, இந்திய அணியை அடுத்தக்கட்டத்தை நோக்கி நகர்த்தி சென்றார். அணியின் போக்கையே மாற்றியமைத்தார். இளம் ப்ளேயர்களை வைத்து இந்திய அணியை தயார்படுத்தினார்.
மேலும் கூறிய அவர், "1999 இல் நான் இந்திய அணியின் கேப்டனாக இருந்தபோது, அப்போது துணை கேப்டனாக கங்குலி இருக்க வேண்டும் என்று கிரிக்கெட் வாரியத்திடம் பரிந்துரைத்தேன். இந்திய அணியினை வழிநடத்தி செல்லக்கூடிய அனைத்து திறமைகளும் அன்று கங்குலியிடம் இருந்தது. இவ்வளவு ஆண்டுகள் கடந்த பின்பும், அவர் ஒருபோதும் தாம் அணிக்கு என்ன செய்தேன் என்று சொல்லிக்காட்டியதில்லை. அவர் இந்திய அணியின் சிறந்த ப்ளேயர் என்பதை தாண்டி ஒரு சிறந்த தலைவராக இருந்தார் என்று தான் நான் சொல்வேன்." இவ்வாறு சச்சின் டெண்டுல்கர் தெரிவித்திருந்தார்
