Published:Updated:

`பிரதமர் மோடியால் ஈர்க்கப்பட்டேன்!’- தங்கையுடன் பா.ஜ.க-வில் இணைந்த சாய்னா நேவால்

சாய்னா நேவால்
சாய்னா நேவால் ( ANI )

இந்தியாவின் பிரபல பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவால் தன் சகோதரியுடன் இன்று பா.ஜ.க-வில் இணைந்துள்ளார்.

ஹரியானாவைச் சேர்ந்த சாய்னா நேவால் பேட்மின்டன் போட்டியில் பல சர்வதேச தொடர்களை வென்று இந்தியாவுக்குப் பெருமைகளைச் சேர்த்துள்ளார். உலக இளநிலை பேட்மின்டன் போட்டியில் வென்ற முதல் பெண், ஒலிம்பிக் பேட்மின்டனில் வெண்கலம் வென்ற முதல் இந்தியர், உலக தரவரிசைப் பட்டியலில் முதன்முதலாக முதலிடம் பிடித்த இந்தியப் பெண் எனப் பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ளார்.

ஜே.பி.நட்டாவுடன் சாய்னா நேவால்
ஜே.பி.நட்டாவுடன் சாய்னா நேவால்
ANI

அர்ஜுனா விருது, பத்மஸ்ரீ மற்றும் ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருது ஆகியவற்றைப் பெற்றுள்ள சாய்னா இன்று முதன்முதலாக அரசியலிலும் அடியெடுத்து வைத்துள்ளார்.

இன்று காலை தன் சகோதரியுடன் டெல்லி பா.ஜ.க தலைமை அலுவலகம் வந்து தேசியச் செயலாளர் அர்ஜுன் சிங் முன்னிலையில் தன்னை அதிகாரபூர்வமாகக் கட்சியில் இணைத்துக்கொண்டார். கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர், மல்யுத்த வீராங்கனை பபிதா குமாரி போகத் ஆகியோரின் வரிசையில் சாய்னாவும் பா.ஜ.க-வில் இணைந்துள்ளார்.

Vikatan

முன்னதாக பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆதரவாகப் பல கருத்துகளைத் தெரிவித்துவந்தார். குடியுரிமை சட்டத்திருத்தம், தேசிய குடிமக்கள் பதிவேடு போன்ற மத்திய அரசின் பல திட்டங்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்துள்ளார் சாய்னா.

சாய்னா நேவால்
சாய்னா நேவால்
ANI

இணைப்புக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த சாய்னா, ``நான் நாட்டுக்காக நிறைய பதக்கங்களை வென்றுள்ளேன். நான் கடின உழைப்பாளி. என்னைப்போல கடினமாக உழைப்பவர்களை எனக்கு மிகவும் பிடிக்கும். பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்காகப் பல நல்ல விஷயங்களைச் செய்துவருகிறார். அவருடன் இணைந்து நானும் நாட்டுக்காக ஏதேனும் செய்ய வேண்டும் என நினைக்கிறேன்.

பிரதமர் மோடியால் ஈர்க்கப்பட்டு கட்சியில் இணைந்துள்ளேன். அரசியலையும் விளையாட்டையும் சமமாக செய்யவுள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.

விரைவில் நடக்கவுள்ள டெல்லி சட்டமன்றத் தேர்தலில் சாய்னா நேவால் பா.ஜ.க-வுக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்யவுள்ளதாக கூறப்படுகிறது.

அடுத்த கட்டுரைக்கு