Published:Updated:

சென்னை அரவணைத்த செஸ் திருவிழா!

ஸ்வீடன் அம்மா-மகள்
பிரீமியம் ஸ்டோரி
ஸ்வீடன் அம்மா-மகள்

பெண்கள் பிரிவில் எப்படியும் தங்கம் நமக்குத்தான் என ஆரூடம் சொல்லும் அளவுக்குத்தான் களமிறங்கியது பெண்களின் முதல் அணி.

சென்னை அரவணைத்த செஸ் திருவிழா!

பெண்கள் பிரிவில் எப்படியும் தங்கம் நமக்குத்தான் என ஆரூடம் சொல்லும் அளவுக்குத்தான் களமிறங்கியது பெண்களின் முதல் அணி.

Published:Updated:
ஸ்வீடன் அம்மா-மகள்
பிரீமியம் ஸ்டோரி
ஸ்வீடன் அம்மா-மகள்

வெற்றிகரமாக செஸ் ஒலிம்பியாடை நடத்தி முடித்திருக்கிறது தமிழக அரசு. நம் விருந்தோம்பலையும், செஸ்ஸுக்கு நம் மக்களிடையே இருக்கும் ஆர்வத்தையும் கண்டு பல அயல்நாட்டு வீரர்கள் வியந்துபோய்ப் பேசினார்கள். வீரர்கள் எதிர்கொண்ட சின்னச் சின்ன பிரச்னைகளும் முடிந்தவரையில் தீர்த்துவைக்கப்பட்டன. வீரர்கள், செஸ் பார்ட்னர்கள் என பலரும் ஊருக்குச் சென்றுவிட, போட்டியில் நடந்த சுவாரஸ்யத்துளிகள் உங்களுக்காக...

* தான்சானிய அணியில் குஜராத்தைப் பூர்வீகமாகக் கொண்ட இரண்டு சிறுமிகள் விளையாடினர். மஹி ஷா, அனஹி ரிஷித் ஷா சகோதரிகளே அவர்கள். ‘‘தான்சான்யா நாட்டு மக்கள் இப்போதுதான் செஸ் விளையாட்டின் மீது கவனம் செலுத்தத் தொடங்கியிருக்கிறார்கள்’’ என்றார் அந்த அணியின் கேப்டன். ‘‘சென்னைல எது உங்களுக்கு ரொம்பப் பிடிச்சது’’ என அவரிடம் கேட்டால், ‘‘வேறென்ன... பிரியாணி தான்’’ என்றார்.

குடும்பத்துடன் முதல்வர் மு.க.ஸ்டாலின்
குடும்பத்துடன் முதல்வர் மு.க.ஸ்டாலின்

* இந்தத் தொடரின் மூலம் செஸ் உலகின் பேசுபொருளாக மாறியிருக்கிறார் சென்னை வீரர் குகேஷ். ஓப்பன் பிரிவில், முதல் போர்டில் முதல் எட்டுப் போட்டிகள் தொடர்ச்சியாக வென்று சம்பவம் செய்வதெல்லாம் லேசான காரியம் அல்ல. அதிலும், முன்னணி வீரர்கள் ஆடும் முதல் போர்டில் வெல்வது என்பது இன்னுமே சவாலானது. இந்த வெற்றிகளின் மூலம், FIDE ரேங்கிங் பட்டியலில், மளமளவென முன்னேறி, டாப் 25-க்குள் வந்துவிட்டார் குகேஷ். தற்போது இந்திய அளவில், ஆனந்துக்கு அடுத்தபடியாக இந்தப் பட்டியலில் இருப்பது குகேஷ்தான். பெண்கள் பிரிவில் முதல் 9 போட்டிகளை வென்று சாதனை படைத்தார் போலந்து நாட்டின் ஒலிவியா.

பங்களாதேஷ் அப்பா-மகன்
பங்களாதேஷ் அப்பா-மகன்
ஹாங்காங் அம்மா-மகன்
ஹாங்காங் அம்மா-மகன்

* எங்கிருந்தாலும் சிங்கம் தான் என்பதாகவே கார்ல்சனின் நிலைமை இந்தத் தொடரில் இருந்தது. அறிமுக விழாவுக்கு வராதது, முதல் நாள் ஓய்வு என்பதையெல்லாம் கடந்து இரண்டாம் நாளில் இருந்துதான் போட்டிகளில் விளையாட ஆரம்பித்தார் உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சன். ஆனால், அவர் அணியிலிருக்கும் பிற வீரர்கள் சிறப்பாக விளையாடாததால், ஒரு சுற்றை இரண்டாம் அறையில் விளையாட வேண்டியதிருந்தது. மீடியா, மக்கள் கூட்டம் மொய்க்க, கார்ல்சனின் அணிக்கென தனிக்கூண்டு போட்டு அந்தப் போட்டியை நடத்த வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டது FIDE.

* ஸ்வீடன் நாட்டிலிருந்து அம்மாவும் மகளும் ஒன்றாக செஸ் விளையாட வந்திருந்தார்கள். 20 வயதான அன்னா கிராம்லின் கூட சில போட்டிகள் தோற்றார். அறுபது வயதை நெருங்கும் அன்னாவின் தாயாரான பியா கிராம்லிங் இக்கால இளைஞிகளுடன் போட்டி போட்டு விளையாடினார். பெண்களுக்கென பிரத்யேகமான WGM பட்டம் இல்லாமல், ஓப்பன் பிரிவின் கிராண்ட் மாஸ்டர் வென்ற ஐந்தாவது பெண்மணி பியா என்பது குறிப்பிடத்தக்கது.

* பங்களாதேஷில் இருந்து தன் மகனுடன் விளையாட வந்திருந்தார் ஜியார் ரஹ்மான்.

சென்னை அரவணைத்த செஸ் திருவிழா!
விளையாடுகிறார் விக்னேஷ் சிவன்
விளையாடுகிறார் விக்னேஷ் சிவன்
ஸ்வீடன் அம்மா-மகள்
ஸ்வீடன் அம்மா-மகள்

* பெண்கள் பிரிவில் எப்படியும் தங்கம் நமக்குத்தான் என ஆரூடம் சொல்லும் அளவுக்குத்தான் களமிறங்கியது பெண்களின் முதல் அணி. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு கொனிரு ஹம்பி விளையாடுவது... 7 மாத கர்ப்பிணியாக ஹரிகா விளையாடுவது... என்பதெல்லாம் போட்டிக்கு வெளியே சொல்லப்படும் செய்தித் துளிகள்தான். ஆனால், டானியா, வைஷாலி, ஹரிகா, ஹம்பி, பக்தி என ஐவரும் ஒவ்வொரு போட்டியிலும் வெகு சிறப்பாக ஆடினார்கள். ஒருவர் டிரா செய்வதுவிட்டாலும், அடுத்தவர் வென்றுவிட வேண்டும் என்கிற வேட்கை அவர்கள் விளையாடிய ஒவ்வொரு போட்டியிலும் தெரிந்தது.

* ஹாங்காங்கின் சிகப்பி கண்ணப்பனை கொஞ்சம் ஃபாலோ செய்ததில், அவரின் மகன் கண்ணப்பன் தண்ணீர்மலை ஓப்பன் பிரிவில் விளையாடுவது தெரியவந்தது. ஹாங்காங் செஸ் ஃபெடரேஷனின் பொருளாளராக சிகப்பியின் கணவர் PR கண்ணப்பன் பணியாற்றிவருகிறார். மதுரையில் பிறந்த சிகப்பி கண்ணப்பன், காமராஜர் பல்கலைக்கழகம் சார்பாக இந்திய அளவில் விளையாடியிருக்கிறார்.

* இந்த செஸ் ஒலிம்பியாடில் தான் சந்திக்கும் ஒவ்வொரு சிறாருக்கும் ஆட்டோகிராப், புகைப்படம் என எந்தவித முகச்சுளிப்பும் இல்லாமல் நடந்துகொண்டு பலரையும் ஆச்சர்யப்படுத்தியவர் பெண்கள் C அணியில் விளையாடும் சேலத்துப் பெண்ணான நந்திதா. சென்னை சர்வதேச ஒலிம்பியாடுக்கு வந்த பார்வையாளர்கள், காவல்துறையினர் என எல்லோருடைய மொபைலிலும் நந்திதாவுடனான செல்ஃபி இருப்பது நிச்சயம்.

குகேஷ்
குகேஷ்
மார்த்தா
மார்த்தா

* ‘உங்கள் ஊரில் செஸ்ஸுக்கு எப்படி இவ்வளவு கூட்டம்’ என்னும் கேள்வியை நம்மிடம் உதிர்க்காத வீரர்களே இல்லை எனலாம். அதுவும் கடந்த ஞாயிற்றுக்கிழமை மெரினா பீச்சை மிஞ்சும் அளவுக்குக் கூட்டம் கூடியது. இவ்வளவு கூட்டத்தைத் தன் அனுபவத்தில் பார்த்ததில்லை என ஆனந்தே கூறினார். செல்போன் இல்லாமல் மூச்சுவிடக்கூட சிரமப்படக்கூடிய ஒரு காலத்தில், அலைபேசியை ஒப்படைத்துவிட்டு, 3 மணி நேரம் செஸ் பார்க்க மக்கள் கூடியது என்பது நிச்சயம் சரித்திர நிகழ்வு.

* இந்திய அணிக்குள் இடம்பிடிக்க முடியாத அளவு நாளுக்கு நாள் செஸ் வீரர்கள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறார்கள். அதே சமயம் சில தேசங்களிலிருந்து ‘விளையாடத் தெரிந்தால் போதும், வா’ என்கிற ரீதியிலும் வீரர்கள் வந்திருப்பதைக் காண முடிந்தது. தப்பான காய்களை நகர்த்தி அதனால் போட்டியில் தோற்ற சம்பவங்கள் இரண்டாம் ஹாலில் அரங்கேறின. ஆனால் அமெரிக்காவின் முன்னணி கிராண்ட் மாஸ்டரான சாம் ஷக்லாண்டு டிரா பொசிஷனில் ஏதோ நினைவில் தன் ‘கிங்’கைத் தொட்டுவிட, வேறுவழியின்றி தோற்றதாகச் சொல்லிவிட்டு வெளியேறினார்.

* வித்தியாச ஆடைகள் அணிந்து பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தவர்களுக்கு மத்தியில் ‘I am Black Excellance’ என்னும் காதணியை அணிந்து வந்து ஆச்சர்யப்படுத்தினார் மலாவி நாட்டின் மார்த்தா. அதே போல், ராணுவத்தில் பணியாற்றிக்கொண்டிருப்பதால், ராணுவ உடையிலேயே சில போட்டிகளுக்கு வந்தார் கொலம்பியா நாட்டின் பௌலா ரோட்ரிக்ஸ்.

* FIDE-யின் புதிய துணைத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார் விஸ்வநாதன் ஆனந்த். இந்தியாவுக்கு இன்னும் பல சர்வதேசப் போட்டிகளைக் கொண்டுவருவதே தன் நோக்கம் என்றார்.

 பௌலா ரோட்ரிக்ஸ்
பௌலா ரோட்ரிக்ஸ்
மேக்னஸ் கார்ல்சன்
மேக்னஸ் கார்ல்சன்
சென்னை அரவணைத்த செஸ் திருவிழா!

* செஸ் விளையாட்டில் அதிகரித்துவரும் சிறுவர்களுக்கு மத்தியில், பத்திரிகையாளர் அறையில் ஒரு அமெரிக்க டீன் ஏஜ் பையன் துறுதுறுவெனச் சுற்றிக்கொண்டிருந்தார். பெர்க்லியிலிருந்து, கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருக்கும் Brigham Aldrich தான் டீன் சிறுவன். சென்னை முழுக்க சுற்றிச்சுழன்று பல புகைப்படங்களையும், விளையாட்டு அரங்கிலும் வீரர்களின் பல க்யூட் ரியாக்‌ஷன்களையும் படம் பிடித்திருந்தார். 18 வயதான ப்ரிகாம், ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா தவிர எல்லாக் கண்டங்களுக்கும் ஏற்கெனவே சுற்றுப்பயணம் செய்திருக்கிறார். அடுத்து என்ன செய்யப்போகிறீர்கள் என்றால், ‘‘இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக புகைப்படம் எடுக்கக் கற்றுக்கொண்டிருக்கிறேன். மீண்டும் எல்லா தேசங்களுக்கும் செல்ல வேண்டும்’’ என்கிறார். கட்டுரையிலிருக்கும் கார்ல்சனின் புகைப்படம் ப்ரிகாமின் கைவண்ணம்தான்.

* கடந்த வாரம், பிரான்ஸில் வென்ற தமிழகச் சிறுவன் குறித்து எழுதியிருந்தோம். இந்தியா தன் 75வது சுதந்திர விழாவைக் கொண்டாடவிருக்கும் வேளையில், இந்தியாவின் 75வது கிராண்ட் மாஸ்டராகத் தகுதி பெற்றிருக்கிறார், சென்னையைச் சேர்ந்த 16 வயதான பிரனவ்.

* அடுத்த செஸ் ஒலிம்பியாட் புடபெஸ்ட்டிலும், அதற்கடுத்த ஒலிம்பியாட் உஸ்பெகிஸ்தானிலும் நடக்கவிருக்கின்றன. அப்போதும் இந்திய அணி முன்னிலை வகிக்கும் என்கிற நம்பிக்கையுடன்.