சினிமா
கட்டுரைகள்
Published:Updated:

எளிதில் வென்றவரில்லை இவர்!

ரஃபேல் நடால்
பிரீமியம் ஸ்டோரி
News
ரஃபேல் நடால்

டென்னிஸ் பற்றி ஒன்றுமே தெரியாத போது, ஆண்ட்ரே அகாஸியை அதிகம் பிடித்தது. அதற்குப் பிறகு பிடித்த வீரர் என்றால் நடால் மட்டும்தான்.

பிரெஞ்சு ஓப்பன் டென்னிஸின் இறுதி ஆட்டம் என்றால், நடாலுக்கு எதிராக விளையாடுபவர் யார் எனப் பார்க்கத் தேவையில்லை. காரணம், அது நடாலின் மண். கடந்த வாரம் நடால் உள்ளே நுழையும்போதே, `His Court’ என்றார் வர்ணனையாளர். ஆனால், நடால் என்றுமே எளிதாக ஒரு போட்டியில் வென்றதில்லை. அத்தனை குட்டிக் கரணங்கள் அடிக்க வேண்டியதிருக்கும். வியர்வையில் குளித்து முடித்த பின்னர்தான் நடால் ஒரு போட்டியில் வெல்வார்.

கிரிக்கெட்டைத் தவிர பிற போட்டிகளில் நமக்கு எப்போதுமே வெற்றியாளர்களின் பெயர்கள்தான் நினைவுக்கு வரும். பிடித்த வீரர் என்றால்கூட பலர் உச்சரிக்கும் பெயர் டென்னிஸில் ரோஜர் பெடரர்தான். டென்னிஸ் பற்றி ஒன்றுமே தெரியாத போது, ஆண்ட்ரே அகாஸியை அதிகம் பிடித்தது. அதற்குப் பிறகு பிடித்த வீரர் என்றால் நடால் மட்டும்தான். நடால் எந்தவொரு போட்டியையும் எளிதாக வென்றதில்லை. அவரைப்பிடிக்க அதுகூட ஒரு காரணம். 2003-ல் ஆரம்பித்த பெடரரின் கிராண்ட் ஸ்லாம் கனவுகள் இன்றுவரையில் தொடர்ந்துகொண்டிருக்கிறது. இந்த நூற்றாண்டில் பெடரரைத் தாண்டிய வீரர் ஒருவர் உருவாக வாய்ப்பில்லை என்பதுதான் எல்லோரும் கணித்தது. கிட்டத்தட்ட சச்சினைப்போல. ஆஸ்திரேலிய ஓப்பன், விம்பிள்டன், US ஓப்பன் என எல்லாவற்றிலும் வெற்றிக்கொடி நாட்டி வந்த பெடரர், முதல் முறையாக 2006-ல் களிமண் கோர்ட்டில் வெற்றி வாகைசூட நடாலை மிஞ்ச வேண்டும். நடால் அப்போது ஒருமுறை மட்டும் பிரெஞ்சு ஓப்பன் வென்றிருக்கும் 20 வயதுச் சிறுவன். அதிலும் முதல் செட்டில் 1-6 எனத் தோற்றார் நடால். ஆனால், அதன்பின் நடால் ஆடியது அசுர ஆட்டம். 6-1, 6-4, 7-6(4) என அடுத்தடுத்த செட்களில் நவீன டென்னிஸின் கடவுள் பெடரரையே நிலைகுலையச் செய்தார். தன் ஆரம்பக் காலத்தில் விளையாடிய இறுதிப்போட்டிகளில் எல்லாம் தொடர்ச்சியாக ஏழு முறை பட்டம் வென்ற பெடரரை, டென்னிஸின் அத்துணை நுணுக்கங்கள் தெரிந்த பெடரரை மூன்று செட்கள் தொடர்ச்சியாக காலி செய்தார் நடால். அதே ஆண்டு விம்பிள்டன்னில் நடாலை வெல்வார் பெடரர். 2007-ம் ஆண்டு சொல்லிவைத்ததுபோல், பிரெஞ்சு ஓப்பன் நடால் வசம். விம்பிள்டன் பெடரர் வசம். ‘களிமண் தரையில மட்டும் ஜெய்ச்சுடறானப்பா’ என்றார்கள் விமர்சகர்கள். 2008-ம் ஆண்டு அதற்கும் முற்றுப்புள்ளி வைத்தார் நடால். 2008-ல் விம்பிள்டன், 2009-ல் ஆஸ்திரேலியன் ஓப்பன், 2010-ல் அமெரிக்க ஓப்பன் (ஜோக்கோவிச்சை எதிர்த்து) என அடுத்தடுத்து எல்லா கோர்ட்களிலும் நடால் பெயர்தான். அதிலும் கடந்த இருபதாண்டுகளின் ஆகச்சிறந்த பைனல் எனில், அது 2008 விம்பிள்டன்தான். முதலிரண்டு செட்களை பெடரருக்கு எதிராக வென்றுவிட்டு (6-4, 6-4,) அடுத்த இரண்டையும் தோற்று (6-7(5), 6-7(8) ), பைனல் செட்டில் 9-7 என்கிற கணக்கில் வெல்வார் நடால். 4 மணி நேரம் 48 நிமிடங்கள் நடந்த அந்த பைனல்.

எளிதில் வென்றவரில்லை இவர்!

2005-ல் ஆரம்பித்த நடாலின் பிரெஞ்சுப் புரட்சியில் தோல்விகள் மிகவும் குறைவு. 2009-ல் சோடர்லிங்கிடம் நான்காவது சுற்றில் தோற்றது; 2015-ல் காலிறுதியில் ஜோக்கோவிச்சிடம் தோற்றது; 2016-ல் காயம் காரணமாகப் பாதியில் வெளியேறியது போன்ற சறுக்கல்களைத் தவிர, 12 முறை கோப்பையை வென்றிருக்கிறார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை எப்படியும் நடால் தான் வெல்வார் என்றாலும், யாரும் இப்படியானதொரு ஆட்டத்தை நடாலிடம் எதிர்பார்க்கவில்லை. பிரான்ஸின் ரோலாண்டு கேரோஸில் நடாலை வென்ற இரு வீரர்களில் ஜோக்கோவிச்சும் ஒருவர். கிராண்ட் ஸ்லாம்களில் நடாலுடன் விளையாடிய கடைசி மூன்று போட்டிகளிலும் ஜோக்கோவிச்தான் வின்னர். அதிலும், 2019 ஆஸ்திரேலிய ஓப்பனில் 6-3, 6-2, 6-3 என்ற நேர் செட் கணக்கில் நடாலை மிகவும் எளிதாக வென்றார் ஜோக்கோவிச்.

எளிதில் வென்றவரில்லை இவர்!

2020-ம் ஆண்டு பிரெஞ்சு ஓப்பனில் முழு ஈடுபாட்டுடன் விளையாடுவதற்காக US ஓப்பனி லிருந்து விலகி இருந்தார் நடால். ஜோக் கோவிச்சோ அமெரிக்க ஓப்பனில் லைன் அம்பயரைப் பந்தால் தாக்கிப் பாதியில் வெளியேற்றப்பட்டதைத் தவிர, எல்லாப் போட்டிகளிலும் வெற்றி பெற்றிருந்தார். அதிலும் தன் கரியரிலேயே, கிராண்ட் ஸ்லாம் இறுதி ஆட்டத்தில், ஒருமுறைகூட முழு செட்டையும் தோற்றதில்லை ஜோக்கோவிச். ஆனால், நடால் அதை மாற்றினார். இது கிட்டத்தட்ட ஆஸ்திரேலிய ஓப்பனில் நடால் தோற்றதற்கான `ஸ்வீட் ரிவெஞ்ச்’ என்கிறார்கள் விமர்சகர்கள். நடால் வழக்கம் போல மறுக்கிறார்.

“ஐந்தாவது செட் வரை சென்று வெல்வதில் இருக்கும் மகிழ்ச்சி, நேர் செட்களில் வெல்வதில் இருப்பதில்லை” என்றார் நடால் நக்கலாக. காரணம், நடால் இந்தப் போட்டியில் ஜோக்கோவிச்சை நேர் செட்களில் (6-0, 6-2,7-5) எளிதாக வென்றார். ‘நடாலின் ஆட்ட நுணுக்கங்களை நன்கு கணித்திருந்தேன். எப்படியும் தவறு செய்ய வைக்க முடியும் என நினைத்தேன். ஆனால், நடால் எல்லாவற்றுக்கும் தயாராக இருந்தார். ஒரு தவறான ஷாட்டைக்கூட என்னால் நடாலின் ஆட்டத்தில் கண்டுபிடிக்க முடியவில்லை” என போட்டி முடிந்தபின் புகழாராம் சூட்டினார் ஜோக்கோவிச்.

39 வயதான பெடரர் 20-11 (20 வின்னர், 11 ரன்னர்) என கிராண்ட் ஸ்லாம் இறுதிப் போட்டிகளில் முன்னிலையில் இருக்கிறார். பெடரர் அவ்வளவு சீக்கிரம் தனக்கான மகுடத்தை விட்டுவிட மாட்டார் என்பதற்கு 2019 விம்பிள்டன் பைனலே சாட்சி (7-6(5), 1-6, 7-6(4), 4-6, 13-12 ). எப்படியும் அடுத்த ஆண்டு பிரெஞ்சு ஓப்பனில், 35 வயதான நடால் மீண்டுமொருமுறை தன் மண்ணில் வென்று 20-8 என்கிற தன் கணக்கை 21 ஆக மாற்றிவிடுவார். ஆனால், இருவருக்குப் பின்னால், இந்த ரேஸில் உலகின் நம்பர் ஒன் வீரரான ஜோக்கோவிச் 17-10 என்கிற கணக்கில் பதக்கங்களைக் குவித்து வருகிறார். ஜோக்கோவிச் இருவரின் சாதனையையும் மீறிவிடுவார் என்பதுதான் யதார்த்தம் என்றாலும், பெடரரும் நடாலும் டென்னிஸ் அரங்கை இருபதாண்டுகள் கட்டிப் போட்டதைப் போன்று இனி யாரும் செய்யவியலாது.

இனியும் ஒரு வீரர் இந்தக் களிமண் தரையில் 13 கோப்பைகளை வெல்லவியலாது. ஏனெனில், எந்த கோர்ட்டிலும் எந்தவொரு வீரரும் பத்து முறைகூட வென்றதில்லை. அப்படியே அவர்கள் இனி, பிரெஞ்சு மண்ணில் அதை நிகழ்த்த வேண்டும் என்றால் நடாலைத் தாண்டித்தான் அதைச் செய்ய முடியும்.