Published:Updated:

`ஏழே விநாடிகள்; 49 அடி உயர சுவர்!' - இந்தோனேசிய `சிலந்திப் பெண்' உலக சாதனை

இந்தோனேசியாவின் `சிலந்திப்பெண்' ஏரிஸ் சுஷாந்தி ரஹாயு தனது அசாத்திய திறமையால் சுவர் ஏறும் போட்டியில் அதிவேகத்தில் சுவர் ஏறி உலக சாதனை படைத்திருக்கிறார்.

 Susanti Rahayu
Susanti Rahayu

சீனாவில் நடைபெற்ற 2019 IFSC Xiamen உலகக்கோப்பை `Speed Climbing' போட்டியில் 24 வயதான வீராங்கனை சுஷாந்தி ரஹாயு இந்தோனேசியா சார்பில் கலந்துகொண்டார். அந்தப் போட்டியில், 15 மீட்டர் உயரம் கொண்ட சுவரை 6.995 நொடிகளில் ஏறி புதிய உலக சாதனையை அவர் படைத்திருக்கிறார். Speed Climbing போட்டி என்பது சுமார் 49 அடி கொண்ட சுவரில் போட்டியாளர்கள் நிர்ணயிக்கப்பட்ட பாதையில் விரைவாக ஏறி இலக்கை அடைவதே. இதற்கு முன்பாகக் கடந்த ஏப்ரலில், சீனாவைச் சேர்ந்த யிலிங் சாங் என்பவர் 7.101 விநாடிகளில் போட்டி தூரத்தைக் கடந்ததே உலக சாதனையாக இருந்துவந்தது. அந்த சாதனையை சுஷாந்தி இப்போது முறியடித்திருக்கிறார். 7 விநாடிகளுக்குள் அவர் விறுவிறுவென சுவரில் ஏறும் வீடியோதான் இணைய உலகின் இப்போதைய வைரல்.

`அது எப்போதும் எனது ஸ்பெஷல் விக்கெட்தான்!' - `உலகச் சாதனை' அஷ்வின்

`சிலந்திப் பெண்' என்ற புனைப் பெயருடன் அழைக்கப்படும் சுஷாந்தி ரஹாயு, அடுத்து டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ள இலக்கு வைத்துள்ளார். 2020-ம் ஆண்டு டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் Speed Climbing உள்ளிட்ட போட்டி, உயரம் ஏறும் போட்டிகள் முதல்முறையாக இடம்பெற இருக்கின்றன. `ஒலிம்பிக்கில் நிச்சயம் பதக்கம் வெல்வேன்' என்று கண்கள்பூரிக்க நம்பிக்கையுடன் பேசுகிறார் இந்த இந்தோனேசிய சிலந்திப் பெண்!