Published:Updated:

ஒரு பயிற்சியாளர் மரணம், பல தொடர்கள் ஒத்திவைப்பு... கொரோனாவால் தடுமாறும் விளையாட்டு உலகம்!

Corona
Corona ( Eduardo Verdugo )

கொரோனாவின் பாதிப்பில் மொத்த உலகமும் முடங்கிக் கிடக்கிறது. அன்றாட வாழ்வியல் பாதிக்கப்பட்டிருக்கும் இந்தச் சூழலில், விளையாட்டு உலகமும் பல சிக்கல்களைச் சந்தித்துக்கொண்டிருக்கிறது. பல விளையாட்டுப் போட்டிகள் தள்ளிவைக்கப்பட்டிருக்கின்றன, பல தொடர்கள் ரத்துசெய்யப்பட்டுவிட்டன.

கொரோனாவின் பாதிப்பில் மொத்த உலகமும் முடங்கிக் கிடக்கிறது. அன்றாட வாழ்வியல் பாதிக்கப்பட்டிருக்கும் இந்தச் சூழலில், விளையாட்டு உலகமும் பல சிக்கல்களைச் சந்தித்துக்கொண்டிருக்கிறது. பல விளையாட்டுப் போட்டிகள் தள்ளிவைக்கப்பட்டிருக்கின்றன, பல தொடர்கள் ரத்துசெய்யப்பட்டுவிட்டன. வீரர்கள், பயிற்சியாளர்கள் சிலரும் பாதிக்கப்பட்டிருப்பதால், இன்னும் பல முக்கியத் தொடர்கள் தள்ளிவைக்கப்படுவதற்கோ, ரத்துசெய்யப்படவோ வாய்ப்பிருக்கின்றன. இதுவரை விளையாட்டு உலகில் நடந்திருக்கும், நடக்கப்போகும் மாற்றங்கள் என்னென்ன…

கொரோனா பாதிப்பால் அதிகம் குழம்பியிருப்பது கால்பந்து உலகம்தான். கால்பந்து சீசன் முடிவதற்கு 3 மாதங்கள் இருந்த நிலையில் இந்த நிலை ஏற்பட்டிருப்பதால், சீசனை முடிக்க முடியுமா என்று ஒவ்வொரு கால்பந்து கூட்டமைப்பும் குழம்பிக்கொண்டிருக்கிறது. செல்சீ வீரர் கேலம் ஹட்சன் ஒடோய், அர்செனல் மேனேஜர் மைக்கேல் அர்டேடா, யுவன்டஸ் வீரர்கள் டேனியல் ருகானி, பிளாய்ஸ் மடுய்டி, வெயன்சியாவின் லெசிகுவல் கேரி ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அதனால், மீண்டும் சீசனைத் தொடர்வதற்கு ஒவ்வொரு அமைப்பும் இன்னும் தயங்குகின்றன.

Euro 2020
Euro 2020
AP

இத்தாலியைத் தொடர்ந்து இங்கிலாந்தில் கொரோனா பாதிப்பு அதிகமாகியிருப்பதால், மார்ச் 31-ம் தேதி வரை நிறுத்திவைக்கப்பட்டிருந்த பிரீமியர் லீக், இப்போது ஏப்ரல் 30 வரை தள்ளிவைக்கப்பட்டிருக்கிறது. இத்தாலியின் சீரி ஏ, ஜெர்மனியின் புண்டஸ்லிகா இரண்டும் ஏப்ரல் 3 வரை நிறுத்திவைக்கப்பட்டிருக்கின்றன. பிரான்ஸின் லீக் 1 தொடர் காலவரையின்றி நிறுத்திவைக்கப்பட்டிருக்கிறது. இவற்றையெல்லாம் விட, யூரோ 2020 தொடரை அடுத்த ஆண்டுக்கு மாற்றியிருக்கிறது ஐரோப்பிய கால்பந்து யூனியன். ஆண்கள் தொடர் 2021-க்கு தள்ளிவைக்கப்பட்டிருப்பதால், அடுத்த வருடம் நடக்கவிருந்த பெண்கள் யூரோ 2022-ம் ஆண்டுக்கு மாற்றப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்பெயினைச் சேர்ந்த அத்லெடிகோ பொர்டாடா ஆல்டா அணியைச் சேர்ந்த 21 வயது பயிற்சியாளரான ஃபிரான்சிஸ்கோ கார்சியா கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளார். ஏற்கெனவே அவருக்குக் கேன்சர் இருந்ததாகவும், அதுவரை அவருக்கு அது தெரியாமல் இருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்புக்கு முன்பே அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டதுதான் அவரது உயிரைப் பறித்திருக்கிறது.

Francisco Garcia
Francisco Garcia

டென்னிஸைப் பொறுத்தவரை, ஆறு வாரங்களுக்குப் போட்டிகளை நிறுத்திவைத்திருக்கிறது ஏ.டி.பி. பி.என்.பி பரிபாஸ், இந்தியன் வெல்ஸ் தொடர்கள் தள்ளிவைக்கப்பட்டிருக்கின்றன. எப்போதும் மே மாதம் நடைபெறும் பிரெஞ்ச் ஓப்பன், இப்போது செப்டம்பர் 20-ம் தேதிக்குத் தள்ளிவைக்கப்பட்டிருக்கிறது. வழக்கமாக ஆண்டின் இரண்டாவது கிராண்ட்ஸ்லாமாக நடக்கும் இந்தத் தொடர், இப்போது கடைசி கிராண்ட் ஸ்லாமாக நடக்குமாறு திட்டமிட்டிருக்கிறது ஸ்பேனிஷ் டென்னிஸ் கூட்டமைப்பு. ஆனால், இது டென்னிஸ் உலகில் சில அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. அமெரிக்க ஓப்பன் கிராண்ட்ஸ்லாம் தொடர் முடிந்த ஒரு வார இடைவெளியில் இந்தத் தொடர் தொடங்குமாறு திட்டமிடப்பட்டிருக்கிறது.

அதோடு, கடந்த சில ஆண்டுகளாக பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கும் லேவர் கப் தொடரும் செப்டம்பர் மூன்றாம் வாரம்தான் நடக்கவிருக்கிறது. இதனால் சில முன்னணி வீரர்கள் பிரெஞ்ச் ஓப்பனைப் புறக்கணிக்க வாய்ப்புள்ளதாக டென்னிஸ் வட்டாரத்தில் கருதப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், இந்தத் தொடரைத் தள்ளிவைப்பதற்கு முன் வீரர்களிடமோ, மற்ற அமைப்பாளர்களிடமோ கருத்து கேட்கப்படவில்லை என்று பலர் வருத்தத்தில் இருப்பதாகவும் தெரிகிறது. பிரெஞ்ச் ஓப்பன் அமைப்பாளர்கள் இந்தத் தொடர் தொடங்கும் தேதியை மீண்டும் ஒருமுறை பரிசீலனை செய்யவேண்டியிருக்கலாம்.

French Open
French Open

மார்ச் 22 முதல் 29 வரை நடக்கவிருந்த உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடர், தென்கொரியாவின் கொரோனா பாதிப்பைக் கருத்தில் கொண்டு தள்ளிவைக்கப்பட்டிருக்கிறது. மாற்று தேதி ஜூன் 21-28 என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல், யு.எஸ்.மாஸ்டர்ஸ் கோல்ஃப் தொடர் தள்ளிவைக்கப்பட்டிருக்கிறது. ஆஸ்திரேலியன் கிராண்ட் ப்ரீ பந்தயத்திலிருந்து மெக்லாரன் அணி விலகிய நிலையில், ஃபார்முலா 1 கூட்டமைப்பே அந்தச் சுற்றை ரத்து செய்திருக்கிறது.

கிரிக்கெட்டைப் பொறுத்தவரை பல பைலேட்டரல் தொடர்கள் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன. இந்தியா - தென்னாப்பிரிக்கா, இலங்கை - இங்கிலாந்து, ஆஸ்திரேலியா - நியூசிலாந்து, அயர்லாந்து - ஜிம்பாப்வே தொடர்கள் தடைசெய்யப்பட்டுவிட்டன. கடைசிவரை விடாப்பிடியாக பாகிஸ்தான் சூப்பர் லீகை நடத்திக்கொண்டிருந்த பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு, நாக் அவுட் போட்டிகளை இப்போது நிறுத்திவைத்திருக்கிறது. இந்தத் தொடரில் விளையாடிக்கொண்டிருந்த சில வெளிநாட்டு வீரர்கள் விலகிய நிலையில், அதில் ஒரு வீரருக்கு கொரோனா பரவியதாக வந்த தகவலின் அடிப்படையில் அந்த முடிவை எடுத்திருக்கிறார்கள்.

IPL
IPL

இப்போது மிகப்பெரிய குழப்பத்தில் இருப்பது ஐபிஎல் நிர்வாகம்தான். ஏப்ரல் 15 வரை தொடரைத் தள்ளிவைத்திருக்கும் நிலையில், இழந்த 15 நாள்களுக்கு என்ன செய்வது என்ற குழப்பம் ஏற்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல், ஏப்ரல் 15-ல் தொடங்க முடியுமா என்ற மிகப்பெரிய கேள்வியும் எழுந்துள்ளது. அப்படித் தொடங்கினாலும் வெளிநாட்டு வீரர்கள் வருவது கேள்விக்குறிதான். நியூசிலாந்து போன்ற நாடுகள் லாக் டவுனில் இருப்பதாலும், விசா சிக்கல்கள் இருப்பதாலும், ஐபிஎல் குறித்த நேரத்தில் தொடங்கினாலும் வெளிநாட்டு வீரர்கள் வருவதென்பது மிகவும் கடினம்தான். அவர்கள் இல்லாமல் போட்டியை நடத்துவதில் ஐபிஎல் அணியின் நிர்வாகங்கள் தயாராக இல்லை. எனவே, நிதானம் காப்பதைத் தவிர ஐபிஎல் நிர்வாகத்துக்கு இப்போது வேறு வழியில்லை.

அடுத்த கட்டுரைக்கு