Published:Updated:

ஐ.பி.எல்லை ஆளும் தமிழர்கள்!

நடராஜன்
பிரீமியம் ஸ்டோரி
நடராஜன்

தல என அவரைக் கொண்டாடும் தமிழகத்திற்கு அவர் திருப்பிக் கொடுக்கும் நிஜமான அன்பு இந்த மண்ணின் மைந்தர்களை உயரங்களுக்குக் கைப்பிடித்து அழைத்துச் செல்வதாகவே இருக்கமுடியும்.

ஐ.பி.எல்லை ஆளும் தமிழர்கள்!

தல என அவரைக் கொண்டாடும் தமிழகத்திற்கு அவர் திருப்பிக் கொடுக்கும் நிஜமான அன்பு இந்த மண்ணின் மைந்தர்களை உயரங்களுக்குக் கைப்பிடித்து அழைத்துச் செல்வதாகவே இருக்கமுடியும்.

Published:Updated:
நடராஜன்
பிரீமியம் ஸ்டோரி
நடராஜன்
‘எல்லோரும் சாத்தியமே இல்லை என்றதை சாத்தியமாக்கியிருக்கிறார் தமிழகத்தின் டி.நடராஜன். நெட்பெளலராக அணிக்குள் வந்தவர், ஐபிஎல் வெற்றியின் மூலம் இந்திய அணிக்குள் மூன்று ஃபார்மேட்களிலும் விளையாடி சாதித்திருக்கிறார். நடராஜனைப் போல இன்னும் பல பட்டை தீட்டப்படாத வைரங்கள் இந்தியாவில் இருக்கின்றன. ஒவ்வொன்றையும் பட்டை தீட்டி வெளியே கொண்டுவருவதுதான் ஐபிஎல் தொடரின் நோக்கம்.’’

- கடந்த வாரம் சென்னையில் ஐபிஎல் ஏலம் தொடங்குவதற்கு முன்பாக ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் படேல் பேசிய வார்த்தைகள் இவை.

நடராஜன்
நடராஜன்
ஹரி நிஷாந்த்
ஹரி நிஷாந்த்

90-களின் இந்திய கிரிக்கெட் அணியை அவ்வளவு எளிதாக மறந்துவிட முடியாது. மும்பை, கர்நாடக வீரர்களே அணியில் அதிகம் இருப்பார்கள். ஒரு கட்டத்தில் இந்திய அணியா, அல்லது கர்நாடக ரஞ்சி அணியா என்று சந்தேகம் வரும் அளவுக்கு இந்திய அணியில் ஏகப்பட்ட கர்நாடக வீரர்கள் இருந்தார்கள். ராகுல் டிராவிட், அனில் கும்ளே, ஜவகல் ஸ்ரீநாத், வெங்கடேஷ் பிரசாத், சுஜித் சோமசுந்தரம், சுனில் ஜோஷி, டோடா கணேஷ் என இந்திய அணியில் ஒரே போட்டியில் 7 கர்நாடக வீரர்கள் விளையாடியதெல்லாம் வரலாறு.

ஜெகதீசன்
ஜெகதீசன்
சாய் கிஷோர்
சாய் கிஷோர்

அந்தக் காலகட்டத்தில் இந்திய அணியில் தமிழக வீரர்கள் மிக அரிதாகவே இடம்பெறுவார்கள். சடகோபன் ரமேஷ், ஹேமங் பதானி, லட்சுமிபதி பாலாஜி, தினேஷ் கார்த்திக், முரளி விஜய், ரவிச்சந்திரன் அஷ்வின் என இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை திடீரென ஒரு தமிழக வீரர் பிரபலமாவார்... அது ‘தமிழ்நாட்டிலும் கிரிக்கெட் இன்னும் உயிர்ப்போடுதான் இருக்கிறது’ என்பதற்கான வெற்று அடையாளமாக மட்டுமே இருக்கும். அதிலும் அஷ்வினுக்குப் பிறகு பேர் சொல்லும்படியான தமிழக வீரர்கள் தேசிய அளவில் வரவேயில்லை.

ஷாருக்கான்
ஷாருக்கான்
வருண் சக்ரவர்த்தி
வருண் சக்ரவர்த்தி

இந்தச் சூழலில்தான் 2015-ல் ஸ்பாட் ஃபிக்ஸிங் குற்றச்சாட்டில் சிக்கி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு இரண்டு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு சென்னை சூப்பர் கிங்ஸும் இல்லை, சென்னையில் ஐபிஎல் போட்டிகளும் நடக்காது என்கிற நிலை. அந்த ஆண்டின் ரஞ்சி கோப்பை சீசனிலும் தொடர் தோல்விகளால் தமிழக அணி குரூப் ஸ்டேஜிலேயே வெளியேறியது. தமிழ்நாடு கிரிக்கெட்டின் முகமாகவும், பிசிசிஐ-ன் தலைவராகவும் இருந்த இந்தியா சிமென்ட்ஸ் சீனிவாசன், மும்பை லாபியால் ஊழலின் முகமாக முன்னிறுத்தப் பட்டார். ‘இனி மீண்டு வருவது சாத்தியமே இல்லை’ என்கிற சூழலில் இருண்டுபோனது தமிழ்நாடு கிரிக்கெட்டின் எதிர்காலம்.

வாஷிங்டன் சுந்தர்
வாஷிங்டன் சுந்தர்
மணிமாறன் சித்தார்த்
மணிமாறன் சித்தார்த்

ஆனால், நெருக்கடியான சூழல்கள்தானே புதிய வாய்ப்புகளைத் தேடி ஓடவைக்கும்! ‘சென்னை சூப்பர் கிங்ஸ் போனால் என்ன, தமிழ்நாடே திரும்ப வரும்’ என அதுவரை சென்னையைத் தாண்டி எதையும் யோசிக்காத தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம், திண்டுக்கல், திருநெல்வேலி எனச் சிறுநகரங்களில் உலகத் தரமான கிரிக்கெட் மைதானங்களை உருவாக்கியது. 2016-ல் தமிழ்நாடு பிரிமியர் லீக் தொடங்கப்பட்டது. திருநெல்வேலி, திண்டுக்கல் என கிராமத்து கிரிக்கெட்டுக்கு விதைக்கப்பட்ட விதைதான், இன்று ஐபிஎல் அணிகள் அத்தனையும் தமிழ்நாட்டைத் திரும்பிப் பார்க்கக் காரணம். ஏலத்தில் தமிழக வீரர்களைப் போட்டி போட்டுக்கொண்டு வாங்கக் காரணம்.

கடந்த வாரம் சென்னையில் நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில், ரூ.5 கோடிக்கு மேல் ஏலம் போனவர்கள் ஒன்பது பேர். இதில் ஏழு பேர் வெளிநாட்டு வீரர்கள். இருவர் மட்டுமே இந்தியர்கள். அதில் ஒருவர்தான் தமிழ்நாட்டின் ஷாருக்கான். சென்னையைச் சேர்ந்த ஷாருக்கான் கிரிக்கெட் பின்னணி கொண்ட குடும்பத்திலிருந்து வந்தவரில்லை. அவர் தந்தை சென்னை புரசைவாக்கத்தில் ட்ராவல் ஏஜென்ஸி நடத்திவந்தவர். சென்னை சூப்பர் கிங்ஸ் ஒவ்வொரு ஆண்டும் நடத்தும் ‘ஜூனியர் சூப்பர் கிங்ஸ்’ போட்டியின் மூலம் அடையாளம் காணப்பட்டவர்தான் ஷாருக்கான். 2012-ம் ஆண்டு சூப்பர் கிங்ஸ் ஜூனியர் தொடரின் ‘பெஸ்ட் ப்ளேயர் ஆஃப் தி இயர்’விருது வென்றவர். அடுத்தடுத்து தனது ஆட்டத்தை மெருகேற்றிக்கொண்டே போக, இப்போது ரூ.5.25 கோடிக்குப் போட்டி போட்டு அவரை ஏலம் எடுத்திருக்கிறது பஞ்சாப் கிங்ஸ் அணி. இவர் மட்டுமல்லாமல் தமிழக வீரர்களான பேட்ஸ்மேன் ஹரி நிஷாந்த்தை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஸ்பின்னர் மணிமாறன் சித்தார்த்தை டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் ஏலத்தில் எடுத்திருக்கின்றன.

முருகன் அஷ்வின்
முருகன் அஷ்வின்

இப்போது ஐபிஎல் அணிகளில் விளையாடும் இந்திய வீரர்களில் தமிழக வீரர்களே அதிகம். ரவிச்சந்திரன் அஷ்வின், தினேஷ் கார்த்திக், வாஷிங்டன் சுந்தர், வருண் சக்ரவர்த்தி, விஜய்ஷங்கர், நடராஜன், முருகன் அஷ்வின், ஜெகதீசன், சாய் கிஷோர், சந்தீப் வாரியர் (கேரள வீரர், இப்போது தமிழக அணிக்காக ஆடி வருகிறார்), ஹரி நிஷாந்த், ஷாருக்கான், மணிமாறன் சித்தார்த் என 13 தமிழக வீரர்கள் பல்வேறு அணிகளுக்காக 2021 ஐ.பி.எல் போட்டிகளில் பங்கேற்க உள்ளனர்.

கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் மிகச்சிறப்பாகப் பந்துவீசி, மிஸ்ட்ரி ஸ்பின்னராகக் கொண்டாடப்பட்டவர் வருண் சக்ரவர்த்தி. கிரிக்கெட் கனவையே தூக்கி தூரப்போட்டுவிட்டு ஆர்க்கிடெக்ட் ஆனவரை, மீண்டும் மைதானத்துக்குக் கொண்டுவந்தது தமிழ்நாடு பிரிமியர் லீக். 2018-ல் நடந்த விஜய் ஹசாரே தொடரில் அதிக விக்கெட்கள் எடுத்து கவனம் குவித்த இவர், டி.என்.பி.எல் போட்டியிலும் சிக்கனமான எக்கானமியை மெயின்டெயின் செய்ய, 2019 ஐபிஎல் ஏலத்தில் 8.4 கோடி ரூபாய்க்கு பஞ்சாப் அணி அவரை எடுத்தது.

கடந்த ஆண்டின் ஐபிஎல் ஹீரோ நடராஜன். திண்டுக்கல் அணிக்காக விளையாடியவரின் சூப்பர் ஓவர் பர்ஃபாமென்ஸைப் பார்த்துத்தான் வீரேந்திர ஷேவக் பஞ்சாப் அணிக்குள் இவரை எடுத்தார். அங்கிருந்து தொடங்கிய கனவுப் பயணம்தான், இந்திய அணிவரை நடராஜனைக் கொண்டுவந்தது.

திரும்பிய பக்கமெல்லாம் தமிழக வீரர்கள் ஐபிஎல் அணிகளில் இடம்பிடிக்க எந்த சீனிவாசன் காரணமாக இருந்தாரோ, அதே சீனிவாசனின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மூன்று தமிழக வீரர்கள் இருக்கிறார்கள். கொல்கத்தா நைட் ரைடர்ஸிலும் மூன்று தமிழக வீரர்கள் இருக்கிறார்கள். தினேஷ் கார்த்திக், வருண் சக்ரவர்த்தி இருவரும் கொல்கத்தா அணியின் தவிர்க்கமுடியாத வீரர்கள். சந்தீப் வாரியரும் விரைவில் கொல்கத்தா அணிக்காக விளையாடிவிடுவார்.

ஆனால், சென்னை சூப்பர் கிங்ஸிலோ நிலைமை தலைகீழ். தமிழக வீரர்கள் டவல், தண்ணீர் பாட்டில்களைத் தூக்கிக்கொண்டு ஓடிவரும் சப்ஸ்டிட்யூட்களாகவே இருக்கிறார்கள். நடந்து முடிந்த சையது முஷ்தாக் அலி தொடர், தற்போது நடந்துகொண்டிருக்கும் விஜய் ஹசாரே என இரண்டு தொடர்களிலும் மிகச்சிறப்பாக விளையாடி வருபவர் ஜெகதீசன். 2018-ம் ஆண்டு இவரை ஏலத்தில் எடுத்த சென்னை சூப்பர் கிங்ஸ், 2020-ம் ஆண்டில்தான் ப்ளேயிங் லெவனில் சேர்த்தது. அதுவும் தோனிமீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தபின்தான். ஜெகதீசனைப் போல கடந்த ஆண்டு ஏலத்தில் எடுக்கப்பட்டவர் சாய்கிஷோர். இடது கை ஆர்த்தடாக்ஸ் ஸ்பின்னரான இவருக்கு இன்னும் ஆடும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்நிலையில் இப்போது கோயம்புத்தூரைச் சேர்ந்த ஹரி நிஷாந்தையும் ஏலத்தில் எடுத்திருக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ். இவருக்கும் ப்ளேயிங் லெவனில் இடம் கிடைப்பது சந்தேகமே!

உள்ளூர்த் திறமைகளுக்கு இனியாவது சென்னை அணி நிர்வாகமும் தோனியும் வாய்ப்பளிக்க வேண்டும். சொல்லப்போனால் தோனிக்கு இந்தக் கடமை அதிகமாகவே உண்டு. கிட்டத்தட்ட தன் இறுதி சீசனை ஆடவிருக்கும் தோனி தனக்குப் பின் ஒரு வலிமையான அணியை விட்டுச்செல்லும் பொறுப்பிலிருக்கிறார். ‘தல’ என அவரைக் கொண்டாடும் தமிழகத்திற்கு அவர் திருப்பிக் கொடுக்கும் நிஜமான அன்பு இந்த மண்ணின் மைந்தர்களை உயரங்களுக்குக் கைப்பிடித்து அழைத்துச் செல்வதாகவே இருக்கமுடியும். செய்வீர்களா தோனி?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism