Published:Updated:

வேற ஏரியாவில் விளையாட்டு!

இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் தொடரில், முதல்முறையாக ஹோம் கிரவுண்ட் அட்வான்டேஜ் எந்த அணிக்கும் இல்லாதது, போட்டிகளை இன்னும் சுவாரஸ்யப்படுத்தும் என்றே எதிர்பார்க்கலாம்.

பிரீமியம் ஸ்டோரி
ந்தே மாத இடைவெளியில் இன்னொரு ஐபிஎல் போட்டி! ரசிகர்களுக்கு அனுமதியில்லை, ஹோம் கிரவுண்ட் அட்வான்டேஜ் யாருக்கும் இல்லை, கிளஸ்டர் கேரவன் மாடலில் போட்டிகள் எனப் பல புதிய மாற்றங்களோடு தொடங்கவிருக்கிறது ஐபிஎல் 2021 சீசன்.

கிளஸ்டர் கேரவன் மாடல்!

ஏப்ரல் 9 சென்னையில் தொடங்கி மே 30 அகமதாபாத்தில் முடிவடைகிறது ஐபிஎல் 2021. கொரோனாச் சூழல் காரணமாக பயணங்களைக் குறைக்கும் பொருட்டு கிளஸ்டர் கேரவன் மாடல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி எந்த அணியுமே தனது சொந்த மைதானத்தில் விளையாடாது. அதாவது, சென்னை அணியின் போட்டிகள் எதுவும் சேப்பாக்கம் மைதானத்தில் நடக்காது.

வேற ஏரியாவில் விளையாட்டு!

போட்டிகள் சென்னை, பெங்களூரு, கொல்கத்தா, மும்பை, டெல்லி, அகமதாபாத் ஆகிய ஆறு நகரங்களில் மட்டுமே நடைபெறவிருக்கின்றன. ஆனால், அணிகளைப் பொறுத்தவரை ஒவ்வொரு அணியும் நான்கே மைதானங்களில்தான் 14 லீக் போட்டிகளையும் விளையாடும். கடந்த சீசன்களைப் போல 8 நகரங்களுக்குப் பயணிக்க வேண்டியதில்லை. ப்ளேஆஃப் மற்றும் இறுதிப் போட்டிகள் அகமதாபாத்தில் நடக்க உள்ளன.

தொடர்ந்து இரண்டாவது ஆண்டாகப் பார்வையாளர்கள் இல்லாமல் ஐபிஎல் போட்டிகள் நடப்பதால் ஒவ்வொரு அணியும் டிக்கெட் மூலம் கிடைக்கும் 25 முதல் 35 கோடி ரூபாய் வரையிலான வருமான இழப்பைச் சந்திக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

கோடிகளை அள்ளும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ்!

வேற ஏரியாவில் விளையாட்டு!

பார்வையாளர்கள் இல்லாமல் அணிகள் வருமானத்தை இழக்கும் அதே நேரத்தில், விளம்பரங்கள் மூலம் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் பல ஆயிரம் கோடிகளை அள்ளுகிறது. கடந்த சீசனில் மட்டும் ஸ்டார் ஸ்போர்ட்ஸின் வருமானம் ரூ. 2,400 கோடி. டிவி மற்றும் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகும் 10 நொடிகள் விளம்பரத்துக்கு கடந்த ஆண்டு 12 லட்சம் ரூபாய் கட்டணம் வாங்கிய ஸ்டார் ஸ்போர்ட்ஸ், இந்தாண்டு வியூவர்ஷிப் இன்னும் கூடும் என்பதால் அதை 15 லட்சமாக உயர்த்திவிட்டது.

வேற ஏரியாவில் விளையாட்டு!

சென்னைக்கு சாதகமா?!

2019 ஐபிஎல் வரை உச்சத்தில் இருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கடந்த ஐபிஎல் போட்டிகளின்போது அப்படியே அதலபாதாளத்தில் விழுந்தது. சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் சிங்கின் திடீர் விலகலால் சரியான ப்ளேயிங் லெவன் அமையாதது, வயதான வீரர்களின் தொய்வான ஆட்டம், தோனியின் மோசமான ஃபார்ம் என இந்தப் படுதோல்விக்குப் பல காரணங்கள் உண்டு. இதையெல்லாம் சரி செய்ய நிர்வாகம் முயன்றது. எப்போதும் ஐபிஎல் ஏலங்களில் மிக்ஸர் சாப்பிட்டபடி வேடிக்கை பார்க்கும் சென்னை டீம், இந்த ஆண்டு வெகுண்டெழுந்து மேக்ஸ்வெல்லையே வாங்கும் அளவுக்குக் கடும் போட்டி போட்டது.

வேற ஏரியாவில் விளையாட்டு!

மேக்ஸ்வெல் கிடைக்கவில்லை என்றாலும் ரூ.7 கோடிக்கு மொயின் அலி, ரூ.9.25 கோடிக்கு கிருஷ்ணப்ப கெளதம், 50 லட்சம் ரூபாய்க்கு டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட் புஜாரா என முக்கிய வீரர்களை வாங்கி வந்திருக்கிறது. ஏலத்துக்கு முன்பாகவே டிரேட் முறையில் ராபின் உத்தப்பாவையும் வாங்கிவிட்டது. இவர்கள் எல்லோருமே சென்னை சேப்பாக்கத்தில் போட்டிகள் நடக்கும் என்பதை மனதில் வைத்து எடுக்கப்பட்டவர்கள். ஆனால், இப்போது சென்னை சூப்பர் கிங்ஸின் போட்டிகள் எதுவும் சென்னையில் நடக்கவில்லை.

சென்னையை மும்பை காப்பாற்றுமா?!

சென்னை விளையாடும் 5 போட்டிகள் - அதுவும் டெல்லி, கொல்கத்தா, பெங்களூரு, ராஜஸ்தான், பஞ்சாப் அணிகளுக்கு எதிரான முக்கியமான போட்டிகள் மும்பையில் நடைபெறவிருக்கின்றன. வான்கடே மைதானம் சுழற்பந்து, வேகப்பந்து என இரண்டுவகையான பெளலிங்குக்கும் எடுபடும். இதனால் லுங்கி எங்கிடி, ஜோஷ் ஹேஸில்வுட், தீபக் சஹார், ஷர்துல் தாக்கூர் என நல்ல வேகப்பந்து வீச்சாளர்களைக் கொண்டிருக்கும் சிஎஸ்கே, மும்பை பிட்சைச் சிறப்பாகவே சமாளிக்கும் என எதிர்பார்க்கலாம்.

வேற ஏரியாவில் விளையாட்டு!

நான்கு போட்டிகள் நடைபெறவிருக்கும் டெல்லி ஃபெரோஸ் ஷா கோட்லா மைதானம் சுழற்பந்துக்கு சாதகமாக இருக்கும். பெங்களூரிலும் ஸ்பின் எடுபடும் என்பதால், சென்னை சூப்பர் கிங்ஸ் இந்த முறை 9 கோடி மற்றும் 7 கோடிக்கு எடுத்திருக்கும் கிருஷ்ணப்ப கெளதமையும், மொயின் அலியையுமே அதிகம் நம்பியிருக்கும் என எதிர்பார்க்கலாம். அதனால், இந்தமுறை சென்னையின் ஏலத்தேர்வுகள் சரியாகவே அமைந்திருக்கின்றன.

வேற ஏரியாவில் விளையாட்டு!

சென்னையில் தோனி!

மற்ற ஐபிஎல் அணிகளுக்கெல்லாம் முன்னோடியாக, போட்டிகள் தொடங்குவதற்கு ஒரு மாதத்துக்கு முன்பே மார்ச் 9-ம் தேதி பயிற்சியைத் தொடங்கிவிட்டது சென்னை சூப்பர் கிங்ஸ். ஒரு வாரத்துக்கு முன்பாகவே சென்னை வந்த தோனி உள்ளிட்ட வீரர்கள், க்வாரன்டைனை முடித்து பயிற்சியில் களமிறங்கிவிட்டார்கள். சென்னை சூப்பர் கிங்ஸின் முக்கிய அங்கம் ரவீந்திர ஜடேஜா. காயத்தால் குணமடைந்துவரும் ஜடேஜா, ஐபிஎல் தொடங்குவதற்குள் அணிக்குத் திரும்பினால் அது சென்னைக்குப் பெரும் பலமாக இருக்கும்.

இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் தொடரில், முதல்முறையாக ஹோம் கிரவுண்ட் அட்வான்டேஜ் எந்த அணிக்கும் இல்லாதது, போட்டிகளை இன்னும் சுவாரஸ்யப்படுத்தும் என்றே எதிர்பார்க்கலாம்.

ஆரம்பிக்கலாங்களா?!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு