Published:Updated:

இந்திய அணியின் வெற்றி ரகசியம்!

இந்திய அணியின் வெற்றி ரகசியம்!
பிரீமியம் ஸ்டோரி
News
இந்திய அணியின் வெற்றி ரகசியம்!

இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலம் இப்போது பாதுகாப்பான கைகளில் உள்ளது’ எனச் சொல்வதற்கு சாட்சியாய், செளரவ் கங்குலி, ராகுல் டிராவிட் என இருவரும் முக்கியமான பொறுப்பில் இருக்கிறார்கள்.

‘`இந்திய அணியை எப்போதும் குறைத்து மதிப்பிடக்கூடாது என்பதைப் புரிந்துகொண்டேன். 150 கோடி மக்களிலிருந்து 11 பேர் அணிக்குள் தேர்வாகிறார்கள் என்றால், அந்த 11 பேர் எவ்வளவு திறமையானவர்களாக இருப்பார்கள் என்பது தெரிகிறது. முதல் டெஸ்ட்டை மூன்றே நாள்களில் முடித்து, 36 ரன்களுக்குள் சுருட்டியபிறகு அவர்கள் மீண்டுவந்த விதம் பேரதிசயம்!’’

- ஜஸ்டின் லாங்கர், பயிற்சியாளர், ஆஸ்திரேலிய அணி.

இந்திய அணியின் வெற்றி ரகசியம்!

ஒரு நாள், டி20 தொடர்கள் இளைஞர் களுக்கானவை. முதல் டி20 உலகக்கோப்பையை இந்தியா வென்றபோது, அந்த அணியைப் பெரும்பாலும் ஆக்கிரமித்தது இளைஞர்கள்தான். ஆனால், டெஸ்ட் கிரிக்கெட் என்பது அதற்கு நேரெதிர். சச்சின், டிராவிட், லக்ஷ்மண், கங்குலி என டெஸ்ட் கிரிக்கெட்டின் FAB 4 உருவான காலம் தொட்டு தற்போதைய ஸ்மித், ரூட், வில்லியம்சன், கோலி காலம் வரை, டெஸ்ட் கிரிக்கெட் என்றாலே அங்கு அனுபவம்தான் பேசும். இந்தத் தொடரில் அதை ஒட்டுமொத்தமாய் மாற்றியிருக்கிறது நம் இளைஞர் படை. நான்காவது போட்டி நடந்த பிரிஸ்பேனில் வைக்கப்பட்டிருந்த நிலைத்தகவல் ஒன்று வைரலானது. ஆஸ்திரேலிய அனுபவ பந்துவீச்சாளர்கள் மொத்தமாய் எடுத்த விக்கெட்டுகளின் எண்ணிக்கை 1,013. இந்தியாவின் கத்துக்குட்டி வீரர்கள் எடுத்த விக்கெட்டுகள் வெறும் 13. ஆனால், இந்த 13 தான் அந்தப் போட்டியை மாற்றி புதிய வரலாறு படைத்திருக்கிறது. இந்திய அணிக்காக விளையாடிய ஒவ்வொரு வீரரும் பங்களித்த தொடராக மாறிய தருணம் அதுதான். வாஷிங்டன் சுந்தரும் ஷரதுல் தாகூரும் அரைசதங்கள் அடித்தனர்; கில் இரண்டாவது இன்னிங்ஸில் ஒரு அதிரடி தொடக்கம் தந்தார்; அவசரமாக ஆடி விக்கெட்டை இழப்பவர் எனச் சொல்லப்படும் பன்ட் வெற்றியை நோக்கி ரன்களைக் குவித்தார். ஒரு தொடரின் முதல் டெஸ்ட்டிலேயே 36 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆகி வரலாற்றிலேயே மிக மோசமான தோல்வியைப் பதிவு செய்து அவமானத்தைச் சந்தித்த அணி, 2-1 என தொடரை வெல்கிறது. அதுவும் ஆஸ்திரேலிய மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக. இன்று எந்த தனி வீரரையும் நம்பியில்லாமல் 11 வீரர்களுமே சிறப்பாகப் பங்களிக்கும் அணியாக மாறியிருக் கிறது. அந்த 11 வீரர்களும் காயமடைந்தால்கூட, அடுத்தகட்ட வீரர்கள் உள்ளே வந்து அதே வேகத்துடன் ஆடுகிறார்கள்.

செளரவ் கங்குலி
செளரவ் கங்குலி

அணியில் கேப்டன் கோலி இல்லை. ஸ்ட்ரைக் பெளலர்கள் பும்ரா, ஷமி, இஷாந்த் என யாரும் இல்லை. அறிமுக வீரர்களை வைத்து, 32 ஆண்டுகளாக ஆஸ்திரேலியாவை யாரும் வெல்லாத பிரிஸ்பேன் மைதானத்தில் வெற்றிபெற்றிருக்கிறது இந்தியா. இந்த மாற்றம் ஒரே இரவில் நிகழ்ந்ததல்ல. ஓர் ஆண்டில் இந்தியாவில் முறைப்படி நடக்கும் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளின் எண்ணிக்கை 2036. ஓராண்டில் 8 மாதங்கள் சர்வதேசத் தரத்தில் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவில் நடக்கின்றன. ஒவ்வொரு ரஞ்சி கோப்பை சீசனிலும் கிட்டத்தட்ட ஆயிரம் வீரர்கள் பங்கேற்கிறார்கள். ரஞ்சி டிராபி, துலீப் டிராபி, தியோதர் டிராபி, சையது முஸ்தாக் அலி டிராபி என ஐ.பி.எல் இல்லாமல் நான்கு உள்ளூர்ப் போட்டிகளை பி.சி.சி.ஐ நடத்துகிறது. ஐ.பி.எல் அணிகளுக் கான இந்திய வீரர்கள் பெரும்பாலும் இந்தப் போட்டிகளில் இருந்தே தேர்வாகிறார்கள். இதுமட்டுமல்லாமல் ஒவ்வொரு மாநில கிரிக்கெட் போர்டும் தமிழ்நாடு பிரிமியர் லீக், கர்நாடகா பிரிமியர் லீக் என உள்ளூர் லீக் போட்டிகளை சர்வதேசத் தரத்தில் நடத்துகின்றன. இப்போட்டிகளின் மூலம் இந்திய அணிக்குள் வந்தவர்கள்தான் நடராஜன் உள்ளிட்ட வீரர்கள்.

ராகுல் டிராவிட்
ராகுல் டிராவிட்

இங்கிலாந்தில் மூன்று வகையான உள்ளூர்ப் போட்டிகள் நடக்கும் நிலையில், ஆஸ்திரேலியாவில் ஐந்து வகையான போட்டிகள் நடைபெறுகின்றன. ஆனால், இந்தியாவில் எட்டு வகையான போட்டிகள் நடக்கின்றன. இந்த ஃபர்ஸ்ட் கிளாஸ் போட்டிகளில் ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 20,000 வீரர்கள் பங்கேற்கிறார்கள். இவர்களில் இருந்துதான் இந்திய அணிக்கான 25 வீரர்கள் தேர்வாகிறார்கள். ரஞ்சி, சையது முஸ்தாக் தொடர்களில் 38 அணிகள் மோதுகின்றன. அதுவும் சையது முஸ்தாக் தொடர் அட்டவணையைப் பார்த்தால் எல்லோருக்கும் கிறுகிறுக்கும். ஒரே நாளில் 8 போட்டிகள், இந்தியாவின் எல்லா மூலைகளிலும் நடக்கும். 8 போட்டிகளுக்கும் தரமான பிட்ச்கள், சிறப்பான நடுவர்கள், வீடியோ கவரேஜ் என அத்தனையையும் செய்கிறது பி.சி.சி.ஐ.

 ரிஷப் பன்ட் , வாஷிங்டன் சுந்தர்
ரிஷப் பன்ட் , வாஷிங்டன் சுந்தர்

இந்தியாவில் நடக்கும் கிரிக்கெட் போட்டிகளின் தரம் உயர்த்தப்பட்டிருக்கிறது. உள்ளூர்ப் போட்டிகள்கூட டிவியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகின்றன. இதனால் வீரர்களுக்குத் தேவையான அத்தனை வசதிகளும் கிடைக்கின்றன. வீடியோ பதிவு செய்யப்படுவதால், ஒவ்வொரு போட்டிக்குப் பிறகும் அவர்கள் செய்த தவறுகள் வீடியோ அனலிஸ்ட்டுகளால் சுட்டிக் காட்டப்பட்டு பயிற்சி அளிக்கப் படுகிறது. இளம் வீரர்களை அடையாளம் காண அண்டர் 12, அண்டர் 16, அண்டர் 19 என மூன்றுவகையான போட்டிகளையும் பி.சி.சி.ஐ நடத்துகிறது. இந்த மூன்று ஃபார்மேட்டிலும் விளையாடும் வீரர்களின் பங்களிப்பு அத்தனையும் பதிவு செய்யப்பட்டு, அவர்களின் திறன் மேம்படுத்தப்படுகிறது.

நடராஜன்,  ஷுப்மான் கில்
நடராஜன், ஷுப்மான் கில்

1996 உலகக்கோப்பையை இலங்கை வென்றபோது அதன் பயிற்சியாளர் டேவ் வாட்மோர். அவரை தேசிய கிரிக்கெட் அகாடமியின் பயிற்சியாளராக நியமித்தது பி.சி.சி.ஐ. இந்திய அண்டர் 19 அணிக்குப் பயிற்சியாளராக இருந்தார் வாட்மோர். இவர் பயிற்சியாளராக இருந்தபோது உருவானவர்தான் விராட் கோலி. வாட்மோர் பயிற்சியின்கீழ் 2008-ல் கோலி தலைமையிலான இந்திய அணி உலகக்கோப்பையை வென்றது. இப்போதும் இந்திய சீனியர் அணிக்கு ரவி சாஸ்திரி பயிற்சியாளராக இருக்க, இளம் வீரர்களை உருவாக்கும் முழுப்பொறுப்பும் ராகுல் டிராவிட்டிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.

``ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்க நாடுகளில் நடைபெறும் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளைக்காட்டிலும் இந்திய உள்ளூர்ப் போட்டிகளின் தரம் மிக உயர்ந்ததாக இருக்கிறது. ஷுப்மான் கில் உட்பட திறமையான இளம் வீரர்கள் இப்போது உள்ளூர்ப் போட்டிகளில் ஆடிக்கொண்டிருக்கிறார்கள்’’ என 2019-ல் கேரள அணிக்குப் பயிற்சியாளராக இருந்தபோது சொன்னார் வாட்மோர். அவர் குறிப்பிட்ட ஷுப்மான் கில், பிரிஸ்பேன் டெஸ்ட்டில் ஸ்டார்க், கம்மின்ஸ், ஹேசில்வுட், நாதன் லயானின் பந்துகளை எல்லாம் சிதறடித்து 91 ரன்கள் குவித்தவர்.

‘இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலம் இப்போது பாதுகாப்பான கைகளில் உள்ளது’ எனச் சொல்வதற்கு சாட்சியாய், செளரவ் கங்குலி, ராகுல் டிராவிட் என இருவரும் முக்கியமான பொறுப்பில் இருக்கிறார்கள். இந்தியா ஏ அணி, அண்டர் 19 அணி... இரண்டும் டிராவிட்டால் பட்டைத் தீட்டப்பட்டு வருகிறது. இந்த இளம் அணிகளை ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து என்று பல நாடுகளுக்கும் அனுப்பிவைத்து சர்வதேச அனுபவம் தடையில்லாமல் கிடைப்பதை உறுதி செய்கிறார் கங்குலி.

ஆஸ்திரேலியாவை இந்தியா வென்றதும், வர்ணணையாளர் ஹர்ஷா போக்ளேவிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. ``இத்தனை போராட்ட குணம் இந்தியர்களுக்கு எங்கிருந்து வந்தது?’’ கொஞ்சமும் யோசிக்காமல் பதில் சொன்னார் ஷர்ஷா. ``நகரங்களில் தனக்கான வீரர்களைத் தேடிக் கொண்டிருந்த இந்திய கிரிக்கெட், இப்போது கிராமங்களில் தேட ஆரம்பித்துவிட்டது. கிராமத்து மக்களுக்கு இயல்பாகவே போராட்ட குணம் அதிகம். அதுதான் இப்போது இந்திய அணியில் வெளிப்படுகிறது’’ என்றார்.

நடராஜன்களின் வருகை இப்போதுதான் தொடங்கியிருக்கிறது. இன்னும் பல நூறு வீரர்கள் இந்திய அணிக்குள் நுழையக் காத்திருக்கிறார்கள். இந்திய கிரிக்கெட்டின் உச்சம் இனிதான் நிகழக் காத்திருக்கிறது!