Published:Updated:

`அன்று எல்லையில் காலை இழந்தார்; இன்று தங்கம் வென்றார்!' - யார் இந்தத் தடகள வீரர் ஆனந்த்?

பிரான்ஸில் நடைபெற்ற உலக அளவிலான தடகள போட்டியில் கும்பகோணத்தைச் சேர்ந்த தடகள வீரர் கலந்துகொண்டு தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.

தடகள வீரர் ஆனந்த்
தடகள வீரர் ஆனந்த்

ராணுவத்தில் பணிபுரிந்து வரும் ஆனந்த் என்பவர் செயற்கைக்காலுடன் பிரான்ஸில் நடந்த உலக பாரா தடகள போட்டியில் 200 மீட்டர் பிரிவில் கலந்துகொண்டு தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இதன்மூலம் இந்தப் போட்டியில் வெற்றி பெற்ற முதல் தமிழர் என்ற சாதனை படைத்துள்ளார். இவர் தமிழகத்தின் `உசேன் போல்ட்' ஆனந்த் எனப் பலரும் பாராட்டி வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தடகள வீரர் ஆனந்த்
தடகள வீரர் ஆனந்த்

கும்பகோணத்தை சேர்ந்தவர் ஆனந்த். இவர் பிரான்சில் நாட்டில் நடைபெற்ற உலக பாரா தடகள போட்டிக்கான தகுதிச் சுற்று போட்டியில் 200 மீட்டருக்கான தடகள போட்டியில் கலந்து கொண்டு தங்கப்பதக்கம் வென்றுள்ளார். இதன் மூலம் இந்தப் போட்டியில் தங்கம் வென்ற முதல் தமிழர் என்ற பெருமையையும் தட்டிச் சென்றுள்ளார். இதனால் கும்பகோணத்தில் சமூக ஆர்வலர்கள் ஆனந்த்தின் வெற்றியை போஸ்டர் ஒட்டியும், ஃப்ளெக்ஸ் வைத்து வாழ்த்து தெரிவித்தும் கொண்டாடி வருகின்றனர்.

ஆனந்தின் வெற்றியை எல்லோரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடவதற்குக் காரணம், அவர் செயற்கைக் காலுடன் இந்தப் போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்று சாதனை புரிந்துள்ளதுதான். இதுகுறித்து ஆனந்த்தின் உறவினர்கள் சிலரிடம் பேசினோம். ``ராணுவத்தில் காஷ்மீர் எல்லையில் பணிபுரிந்து வந்தார் ஆனந்த். அவர் தைரியமாகப் பணி செய்யக்கூடியவர் என்பதால் உயர் அதிகாரிகள் அவரை எல்லையில் பணிக்கு அமர்த்தினர். மிகவும் நேசித்து தனது பணியைச் செய்து வந்தார். அத்துடன் அவருக்கு ஓட்டப்பந்தயம் என்றால் உயிர். அதில் சாதிக்க வேண்டும் என்ற லட்சியம் சிறு வயதில் இருந்தே இருந்து வந்தது. மேலும், எப்போதும் உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்க வேண்டும் என நினைப்பவர்.

தடகள வீரர் ஆனந்த்
தடகள வீரர் ஆனந்த்

இந்த நிலையில் 10 ஆண்டுகளுக்கு முன்பு எல்லையில் நடந்த சண்டையில் குண்டு வீசப்பட்டதில் இவரின் இடதுகால் முற்றிலுமாக சேதமடைந்தது. இதனால் இடது காலை எடுக்கும் நிலை நேரிட்டது. ஓட்டப் பந்தயத்தை உயிராக நினைத்ததுடன் அதில் சாதிக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் இருந்த ஆனந்த் கனவில் மண் அள்ளிப் போட்டது போல் ஆகிவிட்டது இந்த விபத்து. அதன்பிறகு, ராணுவத்தில் வேறு பிரிவில் அமர்த்தப்பட்டார். அங்கும் தன் திறமையை வெளிபடுத்தி பணி செய்ததால் உயர் அதிகாரிகளின் நன்மதிப்பைப் பெற்றார். இதற்கிடையில் கும்பகோணத்தில் ஆனந்துக்குத் திருமணம் நடைபெற்றது. தற்போது அவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

ராணுவத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தாலும், தடகள போட்டியில் சாதிக்க வேண்டும் என்ற அவருடைய லட்சியத்தை செயல்படுத்த நினைத்து அதற்கான முயற்சிகளைச் செய்தார். ஆனால், அவரது நண்பர்களும் உறவினர்களும், ` இந்தப் பந்தயத்துக்கு ஆதாரமே கால்தான். உன்னால் எப்படி இதில் கலந்து கொள்ள முடியும்?' எனக் கேட்டுள்ளனர்.

தடகள வீரர் ஆனந்த்
தடகள வீரர் ஆனந்த்

ஆனால், எதையும் தைரியமாக எதிர்கொள்ளும் துணிச்சல் கொண்ட ஆனந்த் செயற்கை கால் பொருத்தி அதன்மூலம் தடகள போட்டியில் கலந்துகொண்டு சாதிக்க வேண்டும் என நினைத்தார். இதற்காக ராணுவத்தில் இருந்த முக்கிய அதிகாரிகளின் உதவியுடன் 25 லட்சம் செலவில் செயற்கைக் கால் பொருத்தினார். பின்னர் கடுமையான பயிற்சிக்குப் பிறகு, ஆசிய அளவில் நடந்த தடகள போட்டியில் கலந்துகொள்ள தொடங்கியதுடன் பல பதக்கங்களும் வென்றார். தற்போது உலக பாரா தடகள தகுதிச் சுற்றுப் போட்டியில் கலந்துகொண்டு தங்கம் வென்று இந்தியாவுக்கே பெருமை சேர்த்துள்ளார். பிரதமர் மோடி அவரை அழைத்து பாராட்டி வாழ்த்து தெரிவித்திருக்கிறார்'' என்றனர் நெகிழ்ச்சியுடன்.

ஆனந்த்திடம் பேசினோம். ``பள்ளி படிக்கும் காலத்தில்ருந்தே தடகள போட்டியின் மீது ஆர்வமாக இருப்பேன். அப்போது காலை நேரத்தில் வீடு வீடாகச் செய்தித் தாள்கள் போடும் பணியை செய்து கொண்டே படிப்பையும் ஓட்டத்தையும் தொடர்ந்தேன். இதன்மூலம் பள்ளி அளவிலான போட்டியிலும் ஆசிய அளவிலான போட்டியிலும் பல பதக்கங்களைப் பெற்றுள்ளேன். பின்னர் ராணுவத்தில் பணிக்குச் சேர்ந்தேன். ஜம்மு-காஷ்மீர் பகுதியில் இந்திய-பாகிஸ்தான் எல்லையில் பணியில் இருந்தேன். அப்போது 2008-ம் வருடம் நடந்த போரில் குண்டுபட்டு என் காலை இழந்தேன். அதன் பிறகு, எனக்குத் தீவிர சிகிச்சை அளித்தனர். எனக்கு கால் போனதை ஆறு மாதம் வரை வீட்டில் உள்ளவர்களிடம் சொல்லவே இல்லை.

போஸ்டர்
போஸ்டர்

அடுத்த மாதம் ரணுவத்துக்கான உலக அளவிலான போட்டி நடக்க உள்ளது. அதில் தடகள போட்டியில் கலந்துகொள்ளும் ஒரே இந்தியர் நான் என எல்லோரும் என்னைப் பாராட்டுகின்றனர். அதிலும் நிச்சயம் வெல்வேன். உலக அளவில் நடக்கும் தடகள போட்டியில் வென்று சாதனை புரிவதே என் லட்சியம்.

தடகள வீரர் ஆனந்த்
தடகள வீரர் ஆனந்த்

பொதுவாக தஞ்சாவூர் மாவட்டத்தில் விளையாட்டு பற்றிய விழிப்புணர்வு அதிகம் கிடையாது. எல்லோரும் விளையாட்டில் ஈடுபடுவதுடன் போட்டிகளில் கலந்துகொள்ள வேண்டும். இதன் மூலம் பல நன்மைகள் கிடைக்கும். வேலை வாய்ப்புகளும் எளிதாக உருவாகும். விளையாட்டுக்கான ஊக்கத்தை ஏற்படுத்தும்விதமாகவே நான் உலக அளவிலான போட்டியில் வென்று சாதனை படைத்து அதன் மூலம் எல்லோர் மனதிலும் விதையை விதைக்க வேண்டும் என நினைக்கிறேன். நிச்சயம் விளையாட்டு மீது எல்லோருக்கும் ஆர்வம் வர வைப்பேன்'' என்றார் உற்சாகக் குரலில் .

கும்பகோணத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள். ``பாரம்பர்ய மிக்க நமது நகரில் புகழ்பெற்ற பல பள்ளிகள் இருந்தும் குடந்தை நகரம் விளையாட்டு துறையில் மிகவும் பின்தங்கி உள்ளது. மாணவர்களை உலக அளவில் போட்டிக்குத் தயார் செய்ய வேண்டும். பல நூறு மாணவர்களை விளையாட்டுத் துறையில் ஊக்கப்படுத்தினால் அவர்களின் வாழ்வில் வளம்பெறுவதுடன் நமது நகரத்துக்கும் நாட்டுக்கும் பெருமை சேர்ப்பார்கள். கும்பகோணம் விளையாட்டுத் துறையில் உலக அளவில் உச்சத்தில் இருக்க வேண்டும் என்பது நம்முடைய கனவாக இருக்கிறது.

வாழ்த்து போஸ்டர்
வாழ்த்து போஸ்டர்

இந்தநிலையில், இதனைச் செயல்படுத்த மூர்த்தி கலையரங்க திடலில் ஒருங்கிணைந்த அதிநவீன விளையாட்டு மையம் கட்ட வேண்டும் எனத் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறோம். ஆனால், தற்போது மூர்த்தி கலையரங்கத் திடலில் திருமண மண்டபம் கட்டுவதற்கு நகராட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்து வருகிறது. இதனை உடனே கைவிட வேண்டும்'' எனக் கூறி ஆனந்த் தங்கப் பதக்கம் வென்றதை மேற்கோள் காட்டி சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.