Published:Updated:

`அம்மாவின் உழைப்பு... வறுமை... ஏளனப்பேச்சு!' - கூடைப்பந்தாட்டத்தில் சாதித்த புஷ்பா

புஷ்பா
புஷ்பா

தோல்வியை பாடமாகக் கொண்டு இனி வருங்காலங்களில் வெற்றியை நோக்கிப் பயணிப்போம்.

`புஷ்பா' கூடைப்பந்தாட்டத்தில் தமிழகத்தின் அடுத்த நம்பிக்கை நட்சத்திரம். வறுமையின் பிடியில் இருந்தும் சாதிக்க வேண்டும் என்ற லட்சியத்தோடு பயணித்துக்கொண்டிருக்கிறார் இந்த 17 வயதுச் சிறுமி. தமிழகத்தைச் சேர்ந்த புஷ்பா கடந்த ஆண்டு இந்தோனேசியாவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்ற வீராங்கனைகளில் இவரும் ஒருவர். அப்போது இவருக்கு 16 வயது. இவரது சொந்த ஊர் நாகை. சென்னையில் உள்ள எம்.ஓ.பி வைஷ்னவ் மகளிர் கல்லூரியில் இளங்கலை சோசியாலஜி பயின்று வருகிறார். புஷ்பாவை சந்தித்துப் பேசினோம்.

கூடைப்பந்தாட்ட வீராங்கனை புஷ்பா
கூடைப்பந்தாட்ட வீராங்கனை புஷ்பா

``நாகை மாவட்டம் முடிகண்டநல்லூர்தான் என் சொந்த ஊர். அப்பா 2012-ல் இறந்துட்டார். சொந்தமா இருந்த விவசாய நிலத்துல அப்பா இருந்தவரை விவசாயம் பார்த்துக்கிட்டு இருந்தோம். அப்பா இறப்புக்கு அப்புறம் ரொம்ப கஷ்டமாயிடுச்சு. அம்மா திருப்பூர்ல பனியன் கம்பெனியில் வேலைக்குப் போனாங்க. அக்காவும் நானும் பாட்டி வீட்ல இருந்தோம். அம்மாவோட உழைப்புலதான் எங்க குடும்ப பொருளாதாரமே இயங்க ஆரம்பித்தது. எங்க அம்மா மஞ்சுளா, அக்கா சத்யா இவங்கதான் என் வாழ்க்கை மாற காரணம். அக்காவுக்கு கூடைப்பந்து விளையாடுவதில் ஆர்வம் அவர் சாய் (SAI) அகாடமியில் விளையாடிக்கொண்டிருந்தார். அக்கா மூலமாகத்தான் நான் அங்கு சேர்ந்தேன்.

சாய் அகாடமிக்கு கூடைப்பந்து விளையாடப்போனபோது, நான் பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். எனக்கு அப்போது இந்த விளையாட்டு குறித்து எதுவுமே தெரியாது. மணிவாசகம் சார்தான் என்னுடைய முதல் பயிற்சியாளர். ஆரம்பத்தில் சாதாரணமாக ஆரம்பித்த விளையாட்டு இப்போது என் வாழ்வின் அங்கமாகிவிட்டது. தோல்விகள், வெற்றி பெற வேண்டும் என வெறியைக் கொடுத்தது. உறவினர்களின் ஏளனப் பேச்சுகள் என்னை சாதிக்கத் தூண்டியது.

கூடைப்பந்தாட்ட வீராங்கனை புஷ்பா
கூடைப்பந்தாட்ட வீராங்கனை புஷ்பா

முதல் இரண்டு வருடங்களில் பெரிய தொடர்கள் எதிலும் விளையாடவில்லை. நான் அப்போதுதான் இந்த விளையாட்டின் அடிப்படைகளைக் கற்றுக்கொண்டிருந்தேன். ப்ளஸ் டூ படிக்கும்போது ஜூனியர் யூத் போட்டிக்குத் தேர்வானேன். இது தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டி தமிழ்நாடு அணியில் இடம்பிடித்து விளையாடினேன். அங்கிருந்து இந்தப் பயணம் தொடர்கிறது. தேசிய அளவிலான போட்டிகளில் விளையாட ஆரம்பித்தேன். இந்திய அணியில் இடம்பிடித்தது மறக்க முடியாதது. இந்தோனோசியாவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் தோல்வியடைந்தது வருத்தமாக இருந்தது. தோல்வியைப் பாடமாகக் கொண்டு இனி வருங்காலங்களில் வெற்றியை நோக்கிப் பயணிப்போம்.

யூத் இந்தியா கேம்ப் செல்வதற்காக குஜராத் போனதுதான் எனது முதல் விமான பயணம். ப்ளைட்ல போகப்போறேன்னு ஒரு பக்கம் மகிழ்ச்சி இன்னொரு பக்கம் பயம் வேற. அம்மாவும் பயந்தாங்க பார்த்து போயிட்டுவான்னு சொன்னாங்க. ப்ளைட்ல தல சுத்துற மாதிரி இருந்தது. இனிமே ப்ளைட்ல போகக்கூடாதுன்னுகூட நெனச்சேன். இப்போ பழகிடுச்சு.

தமிழ்நாடு கூடைப்பந்தாட்ட அணி
தமிழ்நாடு கூடைப்பந்தாட்ட அணி

‘KHELO INDIA' போட்டிகள் மறக்க முடியாதது. இந்தத் தொடருக்கு முன்பாகத் தேசிய அளவிலான போட்டியில் விளையாடிவிட்டு திரும்பி இருந்தோம். 3 நாள்கள் இடைவெளியில் KHELO INDIA போட்டி தொடங்கியது. லீக் போட்டியில் கர்நாடகா அணியிடம் வீழ்ந்துவிட்டோம். அடுத்த போட்டியில் 30 புள்ளிகள் வித்தியாசத்தில் ஜெயித்தால் தான் நாங்கள் தொடரில் நீடிக்க முடியும் என்ற நிலை. அடுத்த போட்டியில் ஜெயிக்க வேண்டும் என்ற வைராக்கியத்தோடு ஆடினோம். மஹாராஷ்ட்ரா அணிக்கு எதிரான போட்டியில் 30 புள்ளிகள் வித்தியாசத்தில் வென்றோம். இறுதிப்போட்டியில் கர்நாடகா அணியைச் சந்தித்தோம் லீக்கில் அடைந்த தோல்விக்குப் பதிலடி கொடுத்தோம் சாம்பியன் ஆனோம் இது மறக்க முடியாத போட்டி.

அம்மாவின் வருமானம் போதுமானதாக இல்லை. விளையாட்டு போட்டிகளில் கிடைக்கும் ரொக்க பரிசுகளை அம்மாவிடம் கொடுத்துவிடுவோம். அம்மாவின் வருமானம், பரிசுத் தொகைகள் இவற்றைக்கொண்டுதான் தற்போது வாழ்க்கையை நடத்திக்கொண்டு இருக்கிறோம். போட்டியின்போது காயங்கள் ஏற்படும். இதுவரை எனக்கு பெரிதாக காயங்கள் ஏற்படவில்லை. ஆனால் அக்காவுக்கு முதுகில் ஏற்பட்ட காயம் சரியாக ஒரு வருடம் ஆனது.

புஷ்பாவின் தாயார்
புஷ்பாவின் தாயார்

டிவிஷன், ஸ்டேட், நேஷ்னல், இன்டர்நேஷ்னல் என நிறைய போட்டிகளில் விளையாடி வருகிறேன். ஆனால், எங்க அம்மா நான் ஆடிய பெரிய போட்டிகள் எதையும் பார்த்ததில்லை. எங்க அம்மாவ விமானத்தில் அழைத்துப் போகணும். நான் விளையாடும் போட்டிகளை நேரில் அழைத்துப்போய் காண்பிக்க வேண்டும் என ஆசையாக உள்ளது. என்ன செய்வது நாங்க மூணு பேரும் சந்திக்கிறது எப்போதாவதுதான். பண்டிகை காலங்களில்தான் நாங்க எல்லாம் ஒண்ணா இருப்போம். எங்க கூட இல்லன்னு அம்மாவுக்கும் வருத்தம்தான்.

இந்தியாவில் குறிப்பிட்ட சில விளையாட்டுகளுக்கும் அந்த வீரர்களுக்கு கிடைக்கும் அங்கீகாரமும் மற்ற வீரர்களுக்கு கிடைப்பதில்லை. அதெல்லாம்கூட பரவாயில்லை வீதிகளில் பந்தினை கையில் எடுத்துச் செல்லும்போது சிலர் இது என்ன கைப்பந்தா (Volley ball) எனக் கேட்பார்கள் அது கஷ்டமாக இருக்கும்.

சக வீராங்கனைகளுடன்
சக வீராங்கனைகளுடன்

இந்தியாவுக்காக நிறைய போட்டிகளில் விளையாடி வெற்றிகளைக் குவிக்க வேண்டும். நிறைய இளம் வீரர்களை உருவாக்க வேண்டும்.நாங்க விளையாட போகும்போது, `பெண் குழந்தைகளுக்கு எதுக்கு இந்த விளையாட்டு. ஒழுங்காகப் பள்ளிக்கூடத்துல போய் படிக்கச் சொல்லு'ன்னு சொன்னவங்க எல்லாம். இப்ப எங்கள பாராட்டுறாங்க. இதுவே எங்க அம்மாவுக்கு நிறைய திருப்தியைக் கொடுத்துள்ளது'' என்றார்.

அடுத்த கட்டுரைக்கு