Published:Updated:

`காவல்துறையினருக்கான சர்வதேச போட்டிகள்!’ - சீனாவில் அசத்தும் குமரி பெண் காவலர்

சிந்து ஆர்

சீனாவில் நடைபெற்று வரும் உலகக் காவல் துறையினர் விளையாட்டுப் போட்டியில் கலந்துகொண்டுள்ள பெண் காவலர் கிருஷ்ண ரேகா 2 தங்கப்பதக்கங்களை வென்று அசத்தியுள்ளார்.

கிருஷ்ணரேகா
கிருஷ்ணரேகா

சீனாவில் நடைபெற்றுவரும் சர்வதேச அளவிலான காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் பங்கேற்கும் தடகள போட்டியில் கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி காவல்நிலைய பெண் காவலர் கிருஷ்ணரேகா பங்கேற்றுள்ளார். முதற்கட்டமாக உயரம் தாண்டுதல் போட்டியில் பங்கேற்று தங்கம் வென்றார்.

தங்கம் வென்ற கிருஷ்ண ரேகா
தங்கம் வென்ற கிருஷ்ண ரேகா

இந்த நிலையில் இன்று ஹெப்டத்லான்ஸ் போட்டிகளில் வெற்றிபெற்று இரண்டாவதாகத் தங்கம் வென்று பெருமை சேர்த்துள்ளார். ஹெப்டாத்லான்ஸ் போட்டி என்பது உயரம் தாண்டுதல், ஷாட் புட், நீளம் தாண்டுதல், ஈட்டி எறிதல் போன்ற ஏழு விளையாட்டுகளின் கலவையாகும். இதில் வெற்றிபெற்று தங்கம் வென்ற காவலர் கிருஷ்ண ரேகாவுக்கு நேற்று நாகர்கோவிலில் நடந்த சுதந்திர தின விழாவில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரிந்துவரும் கிருஷ்ண ரேகா (34), மணவாளக்குறிச்சியை அடுத்த சேரமங்கலத்தைச் சேர்ந்தவர். கிருஷ்ண ரேகாவுக்கு 2010-ம் ஆண்டு செந்தில் என்பவருடன் திருமணமாகி தற்போது, கவின் (8), கஜின் (7) என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.

கிருஷ்ண ரேகா
கிருஷ்ண ரேகா

கணவர் செந்தில் மரவேலை செய்து வருகிறார். விளையாட்டுப் போட்டியில் அதிக ஆர்வம் கொண்ட கிருஷ்ணரேகா உயரம் தாண்டுதல் போட்டியில் மாவட்ட மற்றும் மாநில அளவில் பங்கேற்று பல பதக்கங்கள் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.