Published:Updated:

``பேட்ரிக், நீ ஒரு போராளி''! - குத்துச்சண்டை வீரரின் மரணத்தால் கலங்கும் அமெரிக்கா

`பேட்ரிக்குக்கு இவ்வாறு நடக்கும் என நான் நினைக்கவில்லை. போட்டியைப் போட்டியாக மட்டுமே பார்க்கிறேன்' என கான்வெல் உருக்கமாகப் பேசியுள்ளார்.

Patrick Day
Patrick Day

சிகாகோவில் யு.எஸ்.பி.ஏ குத்துச்சண்டை போட்டி கடந்த சனிக்கிழமை நடந்தது. இந்தப்போட்டியில் நியூயார்க்கைச் சேர்ந்த முன்னாள் கோல்டன் கிளவுஸ் சாம்பியன் பேட்ரிக் டே, ஒலிம்பிக் சாம்பியன் கான்வெல் இருவரும் மோதினர். விறுவிறுப்பாக நடந்த இந்தப்போட்டியின் 10-வது ரவுண்டில் பேட்ரிக் திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக மருத்துவக்குழு வரவழைக்கப்பட்டது. ரிங்கில் இருந்து ஆக்சிஜன் மாஸ்க் பொருத்தப்பட்ட நிலையில் ஸ்ட்ரெக்சரில் தூக்கிச் சென்றனர். இந்தச் சம்பவத்தால் அரங்கே அதிர்ச்சியில் உறைந்தது.

பேட்ரிக் டே
பேட்ரிக் டே

மருத்துவமனையில் அவருக்கு செயற்கை சுவாசக் கருவிகள் பொருத்தப்பட்டன. பேட்ரிக் கோமா நிலைக்குச் சென்றார். இது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது. அவரை பரிசோதித்த மருத்துவர்கள் பேட்ரிக்கின் மூளை அதிர்ச்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். நான்கு நாள்களாக கோமாவில் இருந்த பேட்ரிக் டே சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். பேட்ரிக் மரணத்தை அவரது விளம்பர தூதரான லூ டிபெல்லா அறிவித்தார்.

பேட்ரிக் 2013- ஆண்டு தொழில்முறை குத்துச்சண்டை போட்டிகளில் பங்கேற்கத் தொடங்கினார். தேசியளவில் இரண்டு டைட்டில்கள், நியூயார்க் கோல்டன் கிளவுஸ் சாம்பியன் ஷிப்களை வென்றுள்ளார். 2013-ல் தொழில்முறை குத்துச்சண்டை போட்டியில் களமிறங்கியவர் டபிள்யூ. பி.சி கான்டினென்டல் அமெரிக்கா சாம்பியன் ஷிப் 2017 மற்றும் ஐபிஎஃப் இன்டர்கான்டினென்டல் சாம்பியன்ஷிப் 2019 ஆகியவற்றை வென்றுள்ளார்.

பேட்ரிக் டே
பேட்ரிக் டே

பேட்ரிக் மரணம் குறித்து பேசிய லூ டிபெல்லா, ``பேட்ரிக் டே குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்க வேண்டும் என எந்த நிர்பந்தமும் கிடையாது. நல்ல பொருளாதாரப் பின்னணியைக் கொண்ட குடும்பத்திலிருந்து வந்தவர். நன்றாகப் படித்துள்ளார். வேறு பணிகளைச் செய்து தனது வாழ்க்கையை வழிநடத்தியிருக்க முடியும். குத்துச்சண்டை போட்டியை விரும்பித் தேர்ந்தெடுந்து வந்தார். இந்த பாக்ஸுக்குள் விரும்பி நுழைந்தார். ஒரு குத்துச்சண்டை வளையத்துக்குள் நுழையும் போது ஒரு வீரர் எந்தெந்த சவால்களை எதிர்கொள்ள வேண்டும் என்பதை தெரிந்து தான் இந்தப் பயணத்தைத் தொடங்கினார்.

இந்தச் சூழலில் குத்துச்சண்டை போட்டிகளில் உள்ள ஆபத்தை விளக்குவதோ அல்லது நியாயப்படுத்துவதோ மிகவும் கடினமானது. உங்களுடைய கேள்விகளுக்கு எங்களிடம் பதில்கள் இல்லை. ஆனால், ஒரு குத்துச்சண்டை வீரனின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டிய தருணம் இது. இதுதான் பேட்ரிக் செய்யவேண்டிய மரியாதையாக நான் பார்க்கிறேன்” என்றார்.

``பேட்ரிக், நீ ஒரு போராளி''! - குத்துச்சண்டை வீரரின் மரணத்தால் கலங்கும் அமெரிக்கா

பேட்ரிக் மரணம் கான்வெல்லை மிகவும் பாதித்துள்ளது. இதுகுறித்து பேசியுள்ள கான்வெல், `பேட்ரிக், நீ ஒரு போராளி என்று எனக்குத் தெரியும். இவ்வாறு நடக்கும் என நான் நினைக்கவில்லை. போட்டியைப் போட்டியாக மட்டுமே பார்க்கிறேன். வெற்றிபெற வேண்டும் என்பதே என்னுடைய நோக்கமாக இருந்தது. காயப்படுத்த வேண்டும் என்பது என்னுடைய நோக்கமல்ல. நான் செல்லும் இடங்களில் எல்லாம் உன்னைப் பார்க்கிறேன், நான் கேட்பதெல்லாம் உன்னைப் பற்றிய அற்புதமான விஷயங்கள்தான். குத்துச்சண்டையை விட்டு வெளியேறுவது பற்றி நான் நினைத்தேன். ஆனால், நீ விரும்புவது இதுவல்ல என்று எனக்கு தெரியும். ” என உருக்கமாகப் பேசியுள்ளார்.