Published:Updated:

`சர்வதேசப் போட்டி; வறுமையில் தவித்த மாற்றுத்திறனாளி வீரர்!’ - கரம்கொடுத்த வேலூர் கலெக்டர்

சர்வதேச தடகளப் போட்டிக்குத் தேர்வாகியுள்ள குடியாத்தம் மாற்றுத்திறனாளி வீரரின் வறுமையை அறிந்து கலெக்டர் சண்முக சுந்தரம் ரூ.1 லட்சம் ஊக்கத்தொகையை வழங்கினார்.

ஊக்கத்தொகை வழங்கிய கலெக்டர் சண்முக சுந்தரம்
ஊக்கத்தொகை வழங்கிய கலெக்டர் சண்முக சுந்தரம்

வேலூர் மாவட்டம், குடியாத்தம் காமாட்சியம்மன் பேட்டையைச் சேர்ந்தவர் மணி. கைத்தறி நெசவுத் தொழிலாளி. இவரின் மகன் வெங்கடாச்சலம் (32). இரண்டு கால்களும் செயலிழந்த மாற்றுத்திறனாளி இளைஞரான வெங்கடாச்சலம் சிறந்த தடகள வீரர். தேசிய அளவிலும் சர்வதேச விளையாட்டுப் போட்டிகளிலும் பங்கேற்றுள்ளார். பயிற்சியும் விடாமுயற்சியும் இருந்தும் அரசின் ஊக்கத்தொகை கிடைக்காததால், திறமையை வெளிக்காட்ட முடியாமல் வறுமையில் தவித்துவந்தார்.

வெங்கடாச்சலம்
வெங்கடாச்சலம்

இதுபற்றி, கடந்த ஆண்டு டிசம்பர் 2-ம் தேதி `கடும் பயிற்சியும்... விடாமுயற்சியும்...!’- ‘வறுமையிலும் சாதித்த குடியாத்தம் மாற்றுத்திறனாளி வீரர்’ என்கிற தலைப்பில் ‘விகடன்’ இணையத்தில் விரிவான செய்தியை வெளியிட்டிருந்தோம்.

வெங்கடாச்சலம் நம்மிடம் பேசுகையில், ``நான் பிறப்பிலேயே மாற்றுத்திறனாளி இல்லை. 2013-ம் ஆண்டு என் தங்கையை கல்லூரியில் விடுவதற்காக வீட்டிலிருந்து மாதனூர் சாலையில் பைக்கை ஓட்டிச் சென்றேன். மாடு திடீரென குறுக்கே வந்ததால் விபத்தில் சிக்கினோம். தங்கை இறந்துவிட்டார்.

எனக்கு முதுகுத் தண்டுவடம் பாதிக்கப்பட்டு இடுப்புக்குக்கீழ் உணர்வு இல்லை. கால்கள் முழுவதுமாக செயலிழந்துவிட்டது. அதன்பிறகு, வீல் சேரிலிருந்தபடியே குண்டு எறிதல், ஈட்டி எறிதல் உள்ளிட்ட விளையாட்டுகளைக் கற்றுக்கொண்டேன். முதலில், மாவட்ட அளவிலும் மாநில அளவிலும் சிறுசிறு விளையாட்டுப் போட்டியில் கலந்துகொண்டு வெற்றிபெற்றேன். 2016-ல் ஹரியானாவில் நடைபெற்ற தேசிய விளையாட்டுப் போட்டியில், முதல் முறையாகத் தமிழகம் சார்பில் கலந்துகொண்டு இரண்டு பதக்கங்களை வென்றேன்.

வெங்கடாச்சலம்
வெங்கடாச்சலம்

பாரா அத்லெடிக் விளையாட்டுகளில் முழுமையாகக் கவனம் செலுத்தினேன். ராஜஸ்தானில் நடைபெற்ற போட்டியிலும் வெற்றிபெற்றேன். 2017-ல் சீனாவில் நடைபெற்ற சர்வதேச தடகள போட்டியிலும் இந்தியா சார்பில் கலந்துகொண்ட வீரர்களில் நானும் ஒருவன். ஈட்டி எறிதலில் வெற்றியைத் தவறவிட்டேன். ஆனாலும், ஓர் அனுபவம் கிடைத்தது. அதன்பிறகு எந்த வாய்ப்பும் எனக்கு வரவில்லை. ஊக்கத்தொகை கேட்டு அரசாங்கத்திடம் கோரிக்கை வைத்தேன். இதுவரை கிடைக்கவில்லை.

`கடும் பயிற்சியும்... விடாமுயற்சியும்...!’- வறுமையிலும் சாதித்த குடியாத்தம் மாற்றுத்திறனாளி வீரர்

மற்ற மாநிலங்களில் `கேஷ்’ அவார்டு தருகிறார்கள். `ஸ்பான்ஸர் தேடுவதில் சிக்கல் இருப்பதால் ஊக்கத்தொகை கொடுங்கள்' என அரசுக்குக் கோரிக்கை வைத்திருக்கிறேன். மாற்றுத்திறனாளி வீரர்களையும் ஊக்கப்படுத்தினால் மாநிலத்துக்கும் தேசத்துக்கும் பெருமை சேர்ப்போம்’’ எனக் கூறியிருந்தார்.

இந்த நிலையில், தாய்லாந்தில் வரும் பிப்ரவரி மாதம் 20-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை நடைபெற உள்ள சர்வதேச தடகள போட்டிக்கு தேர்வுசெய்யப்பட்டுள்ளார் வெங்கடாச்சலம்.

கலெக்டர் சண்முக சுந்தரம்
கலெக்டர் சண்முக சுந்தரம்

இருப்பினும், பொருளாதாரச் சூழல் காரணமாக போட்டியில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் சண்முக சுந்தரத்திடம் கோரிக்கை வைத்திருந்தார். அதையடுத்து, வெங்கடாச்சலத்தை நேரில் அழைத்து ரூ.1,02,300-க்கான காசோலையை கலெக்டர் வழங்கி ஊக்கப்படுத்தினார்.

இதுபற்றி நம்மிடம் பேசிய மாற்றுத்திறனாளி வீரர் வெங்கடாச்சலம், `கலெக்டர் விருப்ப நிதியிலிருந்து எனக்கு உதவிசெய்துள்ளார். அவருக்கு நன்றி. தாய்லாந்தில் நடைபெறும் போட்டியில் வெற்றிபெற்று இந்தியாவுக்கும் வேலூர் மாவட்டத்துக்கும் நிச்சயமாகப் பெருமை சேர்ப்பேன்’ என்றார் நம்பிக்கையான குரலில்.

வென்று வாருங்கள் வெங்கடாச்சலம்..!