FIFA உலகக்கோப்பை கால்பந்து போட்டி இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது. பிரான்ஸ், அர்ஜெண்டினா, மொராக்கோ, குரோஷியா ஆகிய நான்கு அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறிய நிலையில் மற்ற அணிகள் போட்டியில் இருந்து வெளியேறின. இதில் கால் இறுதிப் போட்டியில் மொரோக்கோவுடனான மோதலில் போர்ச்சுகல் அணி தோல்வியுற்று வெளியேறியது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
உலகக்கோப்பை தொடரில் இருந்து போர்ச்சுக்கல் அணி வெளியேறியதால் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் உலகக் கோப்பை கனவும் தகர்ந்தது. ரொனால்டோ மைதானத்திலேயே கண்ணீர்விட்டு அழுதது, அனைவரின் மனதையும் உருகச்செய்தது. இந்நிலையில், தனது ரசிகர்களுக்கு உருக்கமான பதிவு ஒன்றை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார்.
அப்பதிவில், "போர்ச்சுக்கல் நாட்டிற்கு கவுரவத்தை தரும் விதமாக உலகக்கோப்பையை வெல்வதே எனது வாழ்க்கையின் மிகப்பெரிய கனவாக இருந்தது. இதற்காக நான் கடுமையாக போராடினேன். ஆனால் என் கனவு முடிவுக்கு வந்துவிட்டது. போர்ச்சுகல் அணி மீது நான் வைத்திருந்த அர்ப்பணிப்பு உணர்வு ஒரு கணமும் மாறவில்லை என்பது நீங்கள் அனைவரும் அறிந்ததே. நன்றி போர்ச்சுகல். நன்றி கத்தார். இந்த கனவு உயிர்ப்புடன் இருந்த வரை அழகாக இருந்தது" என்று உருக்கமாக பதிவிட்டிருந்தார்.
இப்பதிவை தொடர்ந்து ரொனால்டோவிற்கு பலரும் ஆறுதலையும், ஆதரவையும் தெரிவித்து வந்தநிலையில் விராட் கோலியும் கிறிஸ்டியானோ ரொனால்டோ குறித்து ட்விட்டரில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அதில், “நீங்கள் இதுவரை விளையாட்டுக்காகவும், விளையாட்டு ரசிகர்களுக்காகவும் செய்தது உலகக்கோப்பைக்கெல்லாம் அப்பாற்ப்பட்டது. நீங்கள் விளையாடுவதைப் பார்க்கும்போது நானும் சரி உலகில் உள்ள மற்ற ரசிகர்களும் சரி என்ன உணர்கிறோம் என்பதை எவற்றாலும் விளக்க முடியாது. அவையெல்லாம் கடவுள் கொடுத்த வரம். ஒரு மனிதனுக்கு உண்மையான ஆசீர்வாதம் எதுவென்றால், ஒருவரின் கடின உழைப்பு, அர்ப்பணிப்பு, மற்றும் அவர் மற்ற விளையாட்டு வீரர்களுக்கு முன்மாதிரியாக இருப்பதும்தான். அந்தவகையில் நீங்கள் எல்லாக் காலக்கட்டத்திலும் எனக்கு சிறந்தவராகதான் இருந்திருக்கிறீர்கள்” என்று தனது ஆதரவை ரொனால்டோவிற்கு தெரிவித்துள்ளார் விராட் கோலி.