Published:Updated:

`இப்படியொரு சங்கடம், அவமானத்தைச் சந்தித்ததில்லை!'- வாசிம் அக்ரம் வேதனைப்பட என்ன காரணம்?

எம்.குமரேசன்

ஒருநாள் போட்டிகளில் 500 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வேகப்பந்துவீச்சாளர் என்ற பெருமை வாசிமுக்கு உண்டு.

வாசிம் அக்ரம் ட்வீட்டர் பதிவு
வாசிம் அக்ரம் ட்வீட்டர் பதிவு

இன்சுலின் மருந்து எடுத்துச் சென்றதற்காக மான்செஸ்டர் விமான நிலையத்தில் வாசிம் அக்ரம் அவமானப்படுத்தப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம், சர்க்கரை நோய் பாதிப்புக்குள்ளானவர். விளையாடும் காலத்திலிருந்தே அவருக்கு சர்க்கரை நோய் உள்ளது. சர்க்கரை நோயையும் தாண்டி வேகப்பந்தில் அசத்தியவர்.

வாசிம் அக்ரம்
வாசிம் அக்ரம்

வாசிம் அக்ரம் இன்று தன் ட்வீட்டர் பதிவில் இன்சுலின் மருந்து வைத்திருந்தற்காக மான்செஸ்டர் விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகாரிகள் தன்னை அவமானப்படுத்தியதாகக் கூறியுள்ளார். தன் பதிவில், ``மான்செஸ்டர் விமான நிலையத்தில் இன்று நான் மனமுடைந்து போனேன். உலகமெங்கும் நான் இன்சுலின் மருந்துடன் பயணித்திருக்கிறேன். ஆனால், இப்படியொரு சங்கடத்தை நான் சந்தித்ததில்லை. பொதுமக்கள் முன்னிலையில், என்னை அவமானப்படுத்தும் வகையில் கேள்விகள் கேட்டதோடு, பொது இடத்தில் வைத்தே என் இன்சுலின் மருத்துகளை அதன் கூலான பேக்கிலிருந்து எடுத்து பிளாஸ்டிக் பையில் போட உத்தரவிட்டனர் '' என்று தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் அணிக்காக 104 டெஸ்ட் போட்டிகள், 356 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள வாசிம் அக்ரமுக்கு தற்போது 53 வயது ஆகிறது. கடந்த 1997- ம் ஆண்டு பாகிஸ்தான் அணியின் கேப்டனாக இருந்தபோது, அவருக்கு சர்க்கரை நோய் இருப்பது தெரியவந்தது. அப்போது, வாசிமுக்கு 29 வயதே ஆகியிருந்தது. ''வாழ்க்கை முறை, உணவு முறை, உடற்பயிற்சி செய்யாதது போன்றவை சர்க்கரை நோய் வர காரணம் என்று சொல்வார்கள். ஆனால், தினமும் 10 கிலோமீட்டர் ஓடும் எனக்கு இந்த நோய் வந்திருப்பது ஆச்சர்யத்தை தந்தது'' என்று வாசிம் அக்ரம் முன்பு சொல்லியிருந்தார்.

வாசிம் அக்ரம்
வாசிம் அக்ரம்

சர்க்கரை நோய் வந்தால், எதிர்கொள்வது எப்படி என்று விழிப்புணர்வு கூட்டங்களில் பங்கேற்று வாசிம் அக்ரம் ஆலோசனைகள் வழங்கியும் வருகிறார். ஒருநாள் போட்டிகளில் 500 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வேகப்பந்துவீச்சாளர் என்ற பெருமையும் அவருக்கு உண்டு.