Election bannerElection banner
Published:Updated:

``14 வயசானதும் அந்தக் கனவை நோக்கி வேகமா முன்னேறுவேன்!” – ஸ்கேட்டிங்கில் கலக்கும் சென்னை சிறுமி

லக்சிதா
லக்சிதா

சென்னையைச் சேர்ந்த லக்சிதா, ஸ்கேட்டிங் விளையாட்டில் கலக்கும் இளம் வீராங்கனை. சமீபத்தில் சண்டிகர் மாநிலத்தில் நடந்த தேசிய அளவிலான ஸ்கேட்டிங் போட்டியில், வெவ்வேறு பிரிவுகளில் மூன்று தங்கப் பதக்கங்களை வென்று சாம்பியன்ஷிப் பட்டம் வென்றுள்ளார்.

சென்னையைச் சேர்ந்த லக்சிதா, ஸ்கேட்டிங் விளையாட்டில் கலக்கும் இளம் வீராங்கனை. சமீபத்தில் சண்டிகர் மாநிலத்தில் நடந்த தேசிய அளவிலான ஸ்கேட்டிங் போட்டியில், வெவ்வேறு பிரிவுகளில் மூன்று தங்கப் பதக்கங்களை வென்று சாம்பியன்ஷிப் பட்டம் வென்றுள்ளார். ஆறு வயதில் இருந்தே போட்டிகளில் கலந்துகொள்பவர், தற்போது ஐந்தாம் வகுப்பு முடித்திருக்கிறார். வாழ்த்துகள் கூறி லக்சிதாவிடம் பேசினோம்.

லக்சிதா
லக்சிதா

``ஒன்றாம் வகுப்பு படிச்சிட்டிருந்தபோது ஸ்கேட்டிங் கத்துக்க ஆரம்பிச்சேன். ஆனா, கொஞ்ச நாள் கழிச்சு பயிற்சிக்குப் போறதை விட்டுட்டேன். ஒருமுறை ஃபிரான்ஸ் போயிருந்தேன். அந்த நாட்டுல குழந்தைகள் உட்பட பலரும் ஸ்கேட்டிங் விளையாட்டுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறதைப் பார்த்தேன். அதன் பிறகு எனக்கும் இந்தப் போட்டியில ஆர்வம் அதிகரிச்சது. ரெண்டாம் வகுப்பு படிக்கும்போதுல இருந்து ஆர்வமா பயிற்சியில கலந்துக்கிறேன். கூடவே, மாவட்ட, மாநில அளவுல இருந்து தேசிய அளவிலான பல்வேறு போட்டிகள்லயும் கலந்துகிட்டு நிறைய பதக்கங்கள் வாங்கினேன்.

சி.பி.எஸ்.இ ஸ்கூல் அளவிலான தேசிய போட்டிகள்ல ஏற்கெனவே தங்கம் உட்பட சில பதக்கங்களை வென்றிருக்கேன். இந்த விளையாட்டைப் பொறுத்தவரை, ரோலர் ஸ்கேட்டிங் ஃபெடரேஷன் ஆஃப் இந்தியா (ஆர்.எஸ்.எஃப்.ஐ) அமைப்பின் சார்புல நடத்தப்படுற சாம்பியன்ஷிப் போட்டிதான் இந்திய அளவுல பெரிசு. போன வருஷம் இந்தப் போட்டியில கலந்துகிட்டாலும் பதக்கம் கிடைக்கல. விடாமுயற்சியுடன் பயிற்சி எடுத்து, இந்த வருஷம் சண்டிகர்ல நடந்த போட்டியில கலந்துகிட்டேன். ரிங் 4, ரிங் 5 உட்பட மூணு வெவ்வேறு பிரிவுகள்ல கலந்துகிட்டு மூணுலயும் தங்கப் பதக்கம் வென்றேன்.

லக்சிதா
லக்சிதா

நிறைய பாராட்டுகள் கிடைச்சது. சர்வதேச அளவிலான போட்டிகள்ல வெற்றி பெறணும்ங்கிறதுதான் என்னோட கனவு. 14 வயசுல இருந்துதான் அதுக்கான போட்டிகள்ல பங்கேற்க முடியும். விளையாட்டுக்கு இணையா படிப்பிலும் சிறப்புடனே செயல்படுறேன். `உனக்குப் பிடிச்ச துறையில முழுத் திறமையை வெளிப்படுத்து’ன்னு என்னோட பெற்றோர், பயிற்சியாளர்கள் ஊக்கப்படுத்துவாங்க. அதனால, நம்பிக்கையோடு கால்கள்ல சக்கரங்களைக் கட்டிகிட்டு ஓடுறேன்” என்னும் லக்சிதாவின் முகத்தில் வெற்றிச் சிரிப்பு சிறகடிக்கிறது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு