Published:Updated:

`அவரை உடனடியாக அழைத்து வாருங்கள்’ - வைரல் வீடியோவால் மாறிய இளைஞரின் வாழ்க்கை!

Kiren Rijiju
Kiren Rijiju ( twitter/@KirenRijiju )

சமூக வலைதளத்தில் வைரலான ஒரு வீடியோவால் ஒரு தடகள வீரருக்கு அழைப்பு விடுத்து, அரசு அகாடமியில் சேர்த்துள்ளார், மத்திய அமைச்சர்.

தினம் தினம் சமூக வலைதளங்களில் அதிக வீடியோக்கள், புகைப்படங்கள், செய்திகள், கருத்துகள் பகிரப்பட்டுவருகின்றன. அவற்றில் ஒரு சில மட்டுமே அதிக வைரலாகும். அவை நேர்மறையாகவோ அல்லது எதிர்மறையாகவோகூட இருக்கலாம். சில புகைப்படங்கள், வீடியோக்கள் பெரிய பேசுபொருளாக மாறும். இப்படி வெளியாகும் வீடியோக்களால் சிலருக்கு நன்மையும் ஏற்படலாம், தீமையும் ஏற்படலாம். ஆனால், தற்போது வைரலாகியுள்ள ஒரு வீடியோ, தடகள வீரரின் வாழ்க்கையையே மாற்றியுள்ளது.

ஓர் இளைஞர், ஆட்கள் குறைவாக உள்ள சாலையில் வெறும் காலுடன் ஓடுகிறார். அவர், 100 மீட்டர் தொலைவை வெறும் 11 விநாடிகளில் கடந்துவிடுகிறார். இந்த வீடியோதான் இரு தினங்களாக சமூக வலைதளங்களில் உலா வந்துகொண்டிருந்தது. இந்த வீடியோ, எப்படியோ மத்தியப்பிரதேச முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கண்களில் பட, அவர் அதை உடனடியாக ஷேர் செய்திருந்தார்.

அதனுடன், ``நம் இந்தியா இதுபோன்ற திறமைமிக்க இளைஞர்களால் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளது. இவருக்கு சிறந்த இடமும் உரிய வாய்ப்பும் வழங்கப்பட்டால், புதிய வரலாற்றை படைத்து, பல வண்ணங்களுடன் வானில் பறப்பார். இந்த இளைஞருக்குத் தேவையான ஆதரவை மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் வழங்க வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.

Kiren Rijiju Tweet
Kiren Rijiju Tweet

சிவராஜ் சிங் சவுகானின் பதிவைக் கவனித்த மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, அதற்குப் பதில் அளித்துள்ளார். ``அந்த இளைஞரின் விவரங்களை அறிந்து அவரை உடனே என்னிடம் அழைத்துவாருங்கள் சிவராஜ் ஜி. அவரை ஒரு தடகள அகாடமியில் சேர்க்க நான் ஏற்பாடு செய்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். மத்திய அமைச்சரின் இந்த பதிவை நெட்டிசன்கள் பாராட்டிவருகின்றனர்.

இதற்கிடையில், வைரலான வீடியோவில் தோன்றிய இளைஞரைப் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர், மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதான ரமேஷ்வர் சிங் என்பது தெரியவந்துள்ளது. மேலும் விவரங்கள் அறிந்தவுடன், அந்த இளைஞர் உடனடியாக போபாலில் உள்ள இந்திய விளையாட்டு ஆணையத்துக்கு வரவழைக்கப்பட்டு, அவருக்கான பயிற்சியின் தேவைகள் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளன. விரைவில் ரமேஷ்வர் தன் பயிற்சியைத் தொடங்குவார் என கூறப்பட்டுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு