‘தனிநபர் புகழ் பாடுவதை நிறுத்துங்கள்!’ - உசேன் போல்ட் மீது கார்ல் லீவிஸ் காட்டம்

கார்ல் லீவிஸ் - அமெரிக்காவைச் சேர்ந்த முன்னாள் தடகள வீரர். டிராக் அண்ட் ஃபீல்டில் ஈடு இணையற்ற நாயகன். 100 மீட்டர், 200 மீட்டர், 4x100 மீட்டர் தொடர் ஓட்டம் மட்டுமல்லாது நீளம் தாண்டுதலிலும் சாம்பியன். சாம்பியன் என்றால் உலக சாம்பியன் மட்டுமல்ல, ஒலிம்பிக் சாம்பியன். ஒலிம்பிக்கில் ஒன்பது தங்கம், ஒரு வெள்ளிப் பதக்கம் வென்றவர். உலக சாம்பியன்ஷிப்பில் எட்டு தங்கம் உள்பட 10 பதக்கங்களை வசப்படுத்தியவர். 1979 முதல் 1996 வரை தடகள உலகில் ராஜாங்கம் செய்தவர். 

உசேன் போல்ட்

அடுத்தடுத்து நடந்த நான்கு ஒலிம்பிக் போட்டிகளில் தொடர்ந்து ஒரே விளையாட்டில் தங்கம் வென்றது மூன்று பேர் மட்டுமே. கார்ல் லீவிஸ் அதில் ஒருவர். சந்தேகமே வேண்டாம். தடகளத்தின் கிங். ஆனால், கடந்த பத்து ஆண்டுகளாக தடகள உலகில் முத்திரை பதித்தவர், உசேன் போல்ட். தடகளத்தால் போல்ட்டுக்குப் பெருமையா அல்லது போல்ட்டால் தடகளத்துக்குப் பெருமையா என்று விவாதிக்கும் அளவுக்கு, உசேன் போல்ட் தடகளத்தில் சாதித்தது ஏராளம். சாதித்தது என்பதை விட அவர் சாதிக்காமல் விட்டது எதுவும் இல்லை என்பதே நிதர்சனம். போல்ட் தடகள உலகின் முடிசூடா மன்னன்; மனித உருவில் வந்த மின்னலின் மகன். நிச்சயம், போல்ட்டால்தான் தடகளத்துக்குப் பெருமை. வெறும் 10 விநாடிகள் மட்டுமே நீடிக்கும் இந்தப் போட்டியை உலகெங்கும் பார்க்க வைத்த பெருமை போல்ட்டையே சாரும்.

ஜமைக்கா மைந்தன் மீது பாய்ந்த இந்த புகழ் வெளிச்சம் கார்ல் லீவீஸுக்கு உறுத்தியது. வீரனாக வந்து ஜாம்பவானாக விடைபெற்ற போல்ட் மீது, லீவிஸுக்கு எக்கச்சக்க காழ்ப்புணர்ச்சி. இது இயற்கைதான். உலகெங்கிலும் இந்த பேட்டைக்காரன் சண்டை உண்டு என்றாலும், அதை பொதுவெளியில் வெளிப்படுத்த மாட்டார்கள். ஆனால், தைபே சிட்டியில் இன்று நடந்த பிரஸ் மீட்டில் தன் ஆதங்கத்தைக் கொட்டி விட்டார் லீவிஸ்.  

Carl Lewis

அப்படி என்ன சொன்னார்? 

“விளையாட்டு என்பது தனிநபரை மட்டும் சார்ந்தது அல்ல. நாடுகள் கடந்து, நாகரிகங்கள் கடந்து தடகளம் இன்றும் நீடித்து நிற்கிறது.ஜெஸ்ஸி ஓவன்ஸ், கார்ல் லீவிஸ், மைக்கேல் ஜான்சன் வரிசையில் தற்போது உசைன் போல்ட் சாம்பியன். அவ்வளவே. மனிதர்கள் வருவார்கள்; போவார்கள். ஆனால், விளையாட்டு... தடகளம்.... என்றும் நிலைத்திருக்கும். 

தனிநபர் புராணம் பாடுவதைத் தவிர்த்து தடகளத்தை வளர்த்தெடுக்க வேண்டிய நேரம் இது. கடந்த எட்டு ஆண்டுகளாக தனி நபர் ஒருவரைப் பின்பற்றும் நடைமுறை இருந்தது. அந்த  நடைமுறையை இனி பின்பற்ற வேண்டியதில்லை. வெற்றிடங்களை நிரப்புவதே நம் பணி. தனி நபர் மீது கவனம் செலுத்தியதால், கடந்த பத்து ஆண்டுகளில் தடகளம் வளரவே இல்லை. இனி வரும் காலங்களில், போட்டியை கடினமானதாக்க வேண்டும். தடகளத்தை மேம்படுத்தி, அதை வளர்க்க இதுவே சரியான தருணம். தனிநபரைத் தாண்டி தடகளத்தை மேம்படுத்துவோம்’’ என்றார். 

சரி, இனி யார் சாம்பியனாக வலம் வருவர் என்ற கேள்விக்கு லீவிஸ், “அமெரிக்காவைச் சேர்ந்த கிறிஸ்டியன் கோல்மன் மற்றும் ரியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற கனடாவைச் சேர்ந்த ஆண்ட்ரூ டி கிராஸே இருவரும் எதிர்காலத்தில் தடகளத்தில் முத்திரை பதிப்பர். சமீபத்தில் முடிந்த உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரில் 100 மீட்டர் ஓட்டத்தில் அமெரிக்காவின் ஜஸ்டின் கேட்லின் முதலிடம் பிடித்தார். அவர் வயது 35. கிட்டத்தட்ட, பெரிய தொடர் ஒன்றில் அவர் பங்கேற்பது இதுவே கடைசியாக இருக்கும். எனவே, கிறிஸ்டியன் கோல்மன், ஆண்ட்ரூ டி கிராஸே இருவரும் இனி தடகள உலகை ஆள்வர்’’ என்று சொன்னவர், அமெரிக்காவின் கேம்ரூன் புரெல் மீது ஸ்பெஷல் லைக்ஸ் குவித்தார்.

உசேன் போல்ட்

“கேம்ரூன் புரெல் எதிர்காலத்தில் அமெரிக்காவின் நம்பிக்கை நட்சத்திரமாக வலம்வருவார். அவர் 100 மீட்டர் ஓட்டம் மட்டுமல்லாது நீளம் தாண்டுதலிலும் ஜொலிப்பார். கேம்ரூன் புரெல் வேறு யாருமல்ல, 1991 உலக தடகள சாம்பியன்ஷிப்பில் கார்ல் லீவிஸ் உடன் ஓடிய சக வீரரும் ஒலிம்பிக்கில் தொடர் ஓட்டத்தில் சாம்பியன் பட்டம் வென்ற அணியில் இடம்பெற்றிருந்தவருமான லெராய் புரெல் மகன். நான் நீளம் தாண்டுதல் வீரராக இருந்தபோது லெராய், ஓட்டப்பந்தய வீரராக இருந்தார். தற்போது அவரது மகன் கேமரூன் தடகளம், நீளம் தாண்டுதல் இரண்டிலும் ஒருசேர ஜொலித்து வருகிறார். இதைப் பார்க்கவே சந்தோஷமாக இருக்கிறது. ஒரு ஒலிம்பிக் சாம்பியன் ஆவதற்கான அனைத்துத் தகுதியும் கேமரூனிடம் உள்ளது. 

கேமரூன் ஒருநாள் ஒலிம்பிக் சாம்பியன் ஆவார். கோல்மனும் ஒருநாள் ஒலிம்பிக் சாம்பியன் ஆவார். ஒவ்வொருவரும் தோட்டத்தின் மையப்பகுதியைப் பற்றி மட்டுமே பேச விரும்புகிறோம். வெற்றி மேடையில் முதலிடத்தில் இருப்பவரை மட்டுமே பாராட்டுவதை விட்டுவிட்டு, தனிநபர் புராணம் பாடுவதை விட்டுவிட்டு, இந்த விளையாட்டை வளர்த்தெடுப்போம்’’ என மீண்டும் ஒருமுறை போல்ட் மீது காட்டமான லீவிஸ். “உலக சாம்பியன்ஷிப்பில் 100 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்றதும் உசைன் போல்ட் முன் ஜஸ்டின் கேட்லின் தலை தாழ்த்தி வணக்கம் செய்தது நியாயமாகப் படவில்லை. அவர் செய்தது சரி என்று சொல்லமாட்டேன். ஏனெனில், கேட்லின் செய்தது சிறுபிள்ளைத்தனமானது’’ என முடித்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!