வெளியிடப்பட்ட நேரம்: 01:19 (25/08/2017)

கடைசி தொடர்பு:04:11 (25/08/2017)

தோனி, புவனேஷ்வர் அசத்தல் ஆட்டம் - இந்திய அணி போராடி வெற்றி

ந்திய அணி தற்போது இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகின்றது. டெஸ்ட் தொடரை அசத்தலாக வென்ற இந்திய அணி தற்போது, ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.  இந்திய-இலங்கை அணிகள் மோதிய இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று நடந்தது. 


டாஸ் வென்ற  இந்திய அணி இலங்கையை அணியை முதலில் பேட் செய்ய பணித்தது. முதலில் களமிறங்கிய இலங்கை அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 236 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் பும்ரா அதிகபட்சமாக 4  விக்கெட் சாய்த்தார். 

முதல் இன்னிங்ஸ் முடிவடைந்த பின்னர் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் சிறுது நேரம் பாதிக்கப்பட்டது. அதன் பின்னர், டி.எல்.எஸ் விதிமுறைப்படி 47 ஓவர்கள் கொண்ட போட்டியாக மாற்றப்பட்டது. இந்திய அணி 231 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கியது.
இந்திய அணிக்கு ரோஹித் ஷர்மா மற்றும் தவான் ஆகியோர் சிறப்பான தொடக்கம் அளித்தனர். குறிப்பாக ரோஹித் ஷர்மா நீண்ட இடைவெளிக்கு பிறகு அதிரடி காட்டினார். முதல் விக்கெட்டுக்கு 109 ரன்கள் சேர்த்த நிலையில் ரோஹித் ஷர்மா ஆட்டமிழந்தார். அவர் 45 பந்துகளில் 54 ரன்கள் எடுத்தார். அதன் பின்னர் இந்திய அணியில் விக்கெட்டுகள் சீட்டுக்கட்டு சரிவது போல் சரிந்தது. குறிப்பாக இலங்கையின் தனஞ்சயா குறுகிய இடைவெளியில் முக்கிய ஆறு விக்கெட்டுகளை சாய்க்க இந்திய அணி நிலைதடுமாறியது. 22 ரன்களில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் இழந்து தடுமாறியது. கோலி, ராகுல், கேதர் ஜாதவ் என அனைவரும் ஒற்றை இலக்கில் வெளியேறினர். 

இந்திய அணி தோல்வி அடைந்து விடும் என்று எண்ணிய நிலையில், முன்னாள் கேப்டன் தோனியுடன் சேர்ந்தார் புவனேஷ்வர் குமார். இருவரும் நிதானமாகவும் அதே நேரத்தில் நேர்த்தியாகவும் எந்த பதற்றமும் இல்லாமல் மெதுவாக வெற்றி இலக்கை நோக்கி நகர்ந்தனர். 

இறுதியாக 44.2 ஓவர்களில் வெற்றி இலக்கை மேற்கொண்டு விக்கெட்டுகள் இழக்காமல் எட்டி பிடித்து வெற்றி பெற்றது இந்தியா. இதன் மூலம் இந்திய அணி தற்போது 2-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது. தனஞ்சயா ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.