தோனி தந்த பக்கா அட்வைஸ்... அசத்திய புவனேஷ்வர் குமார்!

 

இலங்கைக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி மூன்று விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு அதிகம் துணை புரிந்தவர் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார். இந்நிலையில் அவரது அசத்தலான ஆட்டத்துக்கு காரணம் தோனி கொடுத்த அறிவுரைதான் என்று புவனேஷ்வர் கூறியுள்ளார்.

இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, டெஸ்ட் போட்டித் தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதையடுத்து, கடந்த 20-ம் தேதி ஆரம்பித்த முதல் ஒருநாள் போட்டியிலும் இந்திய அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. நேற்று பல்லேகல்லேவில் நடந்த ஒருநாள் போட்டியில் இந்திய அணி, 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கையிடமிருந்து வெற்றியைப் பறித்தது. இந்தப் போட்டியில் இரண்டாவதாக பேட்டிங் செய்த இந்திய அணிக்கு 231 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், 131 ரன்களுக்கு எடுத்திருந்த நிலையில் 7 விக்கெட்டுகளை இழந்தது இந்தியா. இதையடுத்து ஜோடி சேர்ந்த தோனி மற்றும் புவனேஷ் குமார் அணியை வெற்றி பெற வைத்தனர். குறிப்பாக புவனேஷ்வர் குமார், அரை சதத்தை கடந்து  அசத்தினார்.

இந்தப் போட்டி குறித்து புவனேஷ்வர் குமார், "நான் பேட்டிங் செய்ய களத்துக்கு சென்றபோது, தோனி, 'எந்த நிலையிலும் பதற்றம் அடைய வேண்டாம். உன்னுடைய நார்மலான விளையாட்டை டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆடுவாய் அல்லவா அதைப் போன்றே விளையாடு' என்று அறிவுரை வழங்கினார். அந்த சமயத்தில் நாங்கள் ஏழு விக்கெட்டுகளை இழந்திருந்ததால் எதைப் பற்றியும் நான் கவலைப்படாமல் தான் விளையாடினேன். நான் ஒன்றை மட்டும்தான் என் மனதில் நினைத்துக்கொண்டேன். தோனிக்கு முடிந்தவரை நான் களத்தில் துணையாக இருந்தால் போதும், வெற்றி கிட்டிவிடும் என்று நினைத்தேன். அதைப் போன்றுதான் நடந்தது" என்று கூறியுள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!