வெளியிடப்பட்ட நேரம்: 08:59 (27/08/2017)

கடைசி தொடர்பு:15:23 (27/08/2017)

ஆம், அவர் பெயர் டான்! #HBDDonBradman

ண்டன் லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானம். பரம எதிரிகளான ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் போட்டி. ஆகஸ்ட் 14, 1948. அன்றைய நாளின் கடைசி ஆட்டம். ஆஸ்திரேலிய அணி 117 ரன்கள் எடுத்தபோது பர்ன்ஸ் 61 ரன்களுடன் அவுட் ஆகி வெளியேறுகிறார். மைதானம் ஆர்பரிக்க மூன்றாம் இடத்தில் விளையாட அந்த நபர் களத்தினுள் வேகமாக வருகிறார். ஆடுகளத்தை இரண்டு முறை தனது பேட்டால் தட்டிப் பார்த்துவிட்டு கிரீஸுக்குள் நின்று பந்தை எதிர்கொள்ளத் தயாராகிறார். லெக் ஸ்பின்னர் ஹோல்லிக்ஸ் Around the wicket-ல் இருந்து பந்தை வீசுகிறார். அதைத் தடுத்து விளையாடுகிறார். அதற்கே மைதானத்தில் ஆரவாரம். அடுத்த பந்தையும் அதே போல வீச, அது பேட்டின் உள்பகுதியை முத்தமிட்டு ஸ்டம்பைத் தொட்டது. ஒட்டுமொத்த மைதானமும் அதிர்ச்சியில் உறைந்தது. சின்னச் சத்தம்கூட இல்லை. எந்த அதிர்ச்சியையும் ஆவேசத்தையும் காட்டாமல் வந்ததுபோலவே திரும்புகிறார் அந்த வீரர். அனைவரும் எழுந்து நின்று கைதட்டி, அவருக்கு மரியாதை தருகின்றனர். இங்கிலாந்தில் ஆஸ்திரேலிய வீரருக்குக் கிடைத்த மாபெரும் விருது இது.

டான் பிராட்மேன் பிறந்த நாள்

அந்த மனிதன் இன்னும் நான்கு ரன்களை எடுத்திருந்தால், 7,000 ரன்களையும் நூறு என்ற சராசரியும் வைத்திருப்பார். அந்த நான்கு ரன்களுக்கு ஒரு Pull ஷாட்டோ, ஒரு ஃபிளிக்கோ, ஒரு கவர் டிரைவோ அல்லது கட் ஷாட்டோ அடித்திருந்தால் போதும். அவரிடம் அதற்கான திறமை உள்ளது என்பது கேள்விகளுக்கு அப்பாற்பட்டது. ஆனாலும் ஏனோ அந்த மனிதன் தனது கடைசி இன்னிங்சில் டக் அவுட் ஆகி வெளியேறினார். அப்போதும் சதம் அடித்ததற்கு இணையான பாராட்டுகளையும் பெற்றார். டக் அவுட்டான அதே நபர்தான், ஒரே நாளில் முன்னூறு ரன்கள் அடித்த ஜாம்பவான்.

1930-ம் ஆண்டில் இங்கிலாந்துக்கு விளையாடச் சென்றிருந்தது ஆஸ்திரேலிய அணி. அந்தத் தொடரில் முதல் டெஸ்டில் 131, இரண்டாவது டெஸ்டில் 254 ரன்கள் என மெர்சல் காட்டி வந்த அவர், மூன்றாவது டெஸ்டில் இங்கிலாந்தைப் பிரித்து தொங்கவிட்டார். ஹேடிங்க்லியில் நடந்த அந்தப் போட்டியில் காலை உணவு இடைவேளைக்கு முன்னர் சதம், தேநீர் இடைவேளைக்கு முன்னர் இரட்டைசதம், அன்றைய நாள் முடியும்போது 309 ரன்களுடன் நாட் அவுட் என உச்சத்தைக் காண்பித்தார். ஒரே நாளில் 300 ரன்கள் இன்னும் யாராலும் தாண்ட முடியாத சாதனையாகவே உள்ளது. 

அவர் விளையாடுவதைப் பார்க்கவே அற்புதமாக இருக்கும். மற்ற பேட்ஸ்மேன்களிடமிருந்து வித்தியாசமானது. வேறு வகையில் நிற்பது, நடனமாடும் கால்கள், மின்னலின் வேகத்தில் தீர்மானித்தல், திடீரென ஷாட்டை மாற்றுவது, கூறிய பார்வை, ஓட்டப்பந்தைய வீரரைப் போன்று தயாரான செயல்பாடு என இவை எத்தனை பேட்ஸ்மேன்களுக்குச் சரியாக அமையும்? அவரின் செயல்படும் தன்மை பலரால் ஆராயப்பட்டது. அவர் வேகபந்தை எதிர்கொள்ளும்போது, பேட்டை இரண்டாம் ஸ்லீப்பிடமிருந்து கீழே கொண்டுவருவார். அப்படிக் கொண்டுவரும் சமயத்தில் பந்தின் நகர்தலுக்கு ஏற்ப விளையாடுவார். பலர் பந்தை வீசுவதற்கு முன்னரே என்ன வகையில் விளையாடப்போகிறோம் என, தங்களின் விருப்பத்துக்கு ஏற்ப  தீர்மானித்துவிடுவர். ஆனால், பந்திற்கேற்ப செயல்படுவதே அவருக்கு வெற்றியைத் தந்தது. அவர் விளையாடும் முறையை தென் ஆப்பிரிக்க பந்து வீச்சாளர் சண்டி பெல் ``இயந்திரத்தன்மையுடையது, பந்து வீச்சாளரின் இதயத்தைப் பிளக்கக்கூடியது” என்கிறார்.

சச்சினுடன் பிராட்மேன்

அவர் விளையாடும் முறையை எங்கிருந்து கற்றுகொண்டார் எனத் தேடாதவர்கள் இல்லை. ஆனால், அவர் யாரிடமிருந்தும் இதைக் கற்றுக்கொள்ளவில்லை. தனிநபராக கோல்ஃப் பந்தையும் கிரிக்கெட் ஸ்டம்ப்பையும் வைத்துக்கொண்டு பயிற்சி செய்வார். சிறுவயதில் அவரின் வீட்டுக்குப் பின் பக்கம் வளைவான சுவர்கொண்ட தண்ணீர்த்தொட்டி இருந்தது. அந்தச் சுவரில் பட்டுவரும் பந்து வேகமாகவும், கணிக்க முடியாத திசையிலும் வரும். அந்த இடத்தில் பயிற்சிசெய்வார். இந்தப் பயிற்சி, வேகமாக ஸ்விங் ஆகும் பந்துகளுக்கு எதிராக சிறந்த ஷாட்களை விளையாட உதவியது. விளையாடச் சென்ற பிறகும்கூட வருமானத்துக்கு தரகராக வேலை பார்த்துக்கொண்டே விளையாடிவந்தார். அவரின் வித்தியாசமான விளையாட்டு முறைகளில் குறைகள் இருப்பதைக் கண்டறிந்து, அதற்கு எதிராக வெற்றியும் பெற்றார்கள்.

1932-ம் ஆண்டில் டக்லஸ் ஜார்டின் என்பவர் தலைமையில், இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவுக்குப் பயணப்பட்டது. அப்போது தனது அணியில் உள்ள வேகபந்து வீச்சாளர்களை `பாடிலைன்' என்ற யூகத்தைப் பயன்படுத்தச் சொன்னார். உயர எழும்பி, உடலை நோக்கிவரும் பந்துகளை எதிர்கொள்வது கடினம். கொஞ்சம் அசந்தாலும் பெரியதாக அடிவாங்க நேரிடும். ஆஸ்திரேலிய கேப்டன் பில் வோட்புல் இதயத்தில் அடிவாங்கினார். வேறு ஒருவரின் மண்டை ஓடு உடைந்தது. இந்த மாதிரியான பந்துகளை விளையாடுவதை நமது நாயகன் தவிர்த்துவந்தார். ஆனாலும் இடதுகையில் ஓர் அடியை வாங்கிவிட்டார். இந்தத் தொடரில்கூட அவரின் சராசரி 56.57.

அவரின் காலத்தில் இந்த ஒரே ஒரு தொடரை மட்டுமே ஆஸ்திரேலிய அணி இழந்தது. இன்ப்ளுன்சா நோயால் தாக்கப்பட்டபோதும் மெல்பர்னில் நடந்த டெஸ்டில் 375 பந்துகளில் 270 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்குக் காரணமானார். 1941-ம் ஆண்டில் அவர் தசைகளில் ஏற்படும் ஒருவகை வியாதியால் பாதிக்கப்பட்டு, தனது வலதுகையின் ஆள்காட்டி மற்றும் கட்டைவிரல்களில் உணர்வை இழந்தார். இவைபோல் ஆயிரம் வந்தாலும் அந்த மனிதனின் ஆட்டம் குறைந்ததாகத் தெரியவில்லை. அவர் விளையாடிய 20 ஆண்டுகளில் வெறும் 50 டெஸ்ட் போட்டிகளே விளையாடப்பட்டன. அவற்றுள் இங்கிலாந்து அணியுடன் மட்டும் 37 போட்டிகளில் விளையாடி  5,028 ரன்களைக் குவித்துள்ளார். இந்தியாவுடன் ஐந்து போட்டிகளில் 715 ரன்களும், தென் ஆப்பிரிகாவுடன் ஐந்து போட்டிகளில் 806 ரன்களும், மேற்கிந்திய தீவுகளுடன் ஐந்து போட்டிகளில் 447 ரன்களும் அடித்துள்ளார். ஒரேயொரு போட்டியில் மட்டுமே 12-வது நபராக உட்காரவைக்கப்பட்டார். ஒருமுறை மட்டுமே ரன் அவுட் ஆகியுள்ளார்.

களமிறங்கும் டான் பிராட்மேன்

இவர் கிரிக்கெட் விளையாட்டில் மட்டுமல்ல, இசைத் துறையிலும் தலைசிறந்தவர். பியானோ வாசிப்பதில் வல்லவரான  இவர், சொந்தமாக பாடல்கள் இயற்றியுள்ளார். கிரிக்கெட்டில் அதிகபட்ச சராசரியான 99.94 இவரின் வசம் இருந்தது; இவரின் வசமே இன்றும் இருக்கிறது என்பதே அவருடைய ஆட்டத்தின் பிரமாண்டத்தைச் சொல்லும். அவரின் 90-வது பிறந்த நாள் நிகழ்வில் அவரிடம், சச்சின் ``இப்போது விளையாடினால் உங்கள் சராசரி என்னவாக இருக்கும் டான்?” என்று கேட்டதற்கு ``70” என அந்த ஜாம்பவானிடம் இருந்து பதில் வந்தது. ``ஏன் இவ்வளவு குறைவாகச் சொல்கிறீர்கள்?” என்றதற்கு, ``கம்மான், 90 வயதில், 70 சராசரி என்பது ஒன்றும் குறைவானது இல்லையே?” என்றார் கிரிக்கெட்டின் டான்.