இலங்கை டெஸ்ட் கேப்டன் சன்டிமல் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டிக்குத் தேர்வு!

இலங்கை கிரிக்கெட் அணிக்கு தற்போது போதாத காலம் என்றுதான் கூற வேண்டும். இந்திய அணியிடம் அனைத்துத் துறைகளிலும் தோல்வி  அடைந்து, எளிதாக சரணடைந்து விடுகிறது. டெஸ்ட் தொடரில் அடைந்த தோல்விக்குப் பின்னர் தொடங்கிய ஒருநாள் தொடரிலும் அந்த அணியின் தோல்வி தொடர்கிறது.

chandimal

ஜிம்பாப்வே அணியுடன் நடந்த ஒருநாள் தொடரில் கிடைத்த தோல்விக்குப் பின்னர், கேப்டன் பதவியில் இருந்து ஏஞ்செலோ மேத்திஸ் விலகிய பின்னர், டெஸ்ட் போட்டிகளுக்கு தினேஷ் சன்டிமல் கேப்டன் ஆகவும் ஒருநாள் மற்றும் டி-20  போட்டிகளுக்கு உபுல் தரங்காவும் கேப்டனாக அறிவிக்கப்பட்டனர். 

இந்நிலையில், இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் பந்துவீசுவதற்கு அதிக நேரம் எடுத்துக்கொண்ட காரணத்துக்காக தரங்காவுக்கு இரண்டு போட்டிகளில் விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

இதனால், தற்போது டெஸ்ட் கேப்டன் சன்டிமல் ஒருநாள் தொடருக்கு அழைக்கப்பட்டு இருக்கிறார். அதேபோன்று தொடக்க ஆட்டக்காரர் தனுஷ்கா குணதிலகா கடந்த போட்டியில் காயமடைந்ததால், அவருக்குப் பதிலாக திரிமன்னே அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். மூன்றாவது மற்றும் நான்காவது ஒரு நாள் போட்டிகளுக்கு கபுகேத்ரா கேப்டனாக செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

முன்னாள் வீரர்கள் ஜெயவர்தனே, சங்ககாரா போன்ற வீரர்களின் ஓய்வுக்குப் பின்னர் இலங்கை அணி தொடர்ச்சியாக பல தடுமாற்றங்களை சந்தித்து வருகின்றது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!