வெளியிடப்பட்ட நேரம்: 11:34 (27/08/2017)

கடைசி தொடர்பு:11:34 (27/08/2017)

லெஜண்ட், ஜாம்பவான் இல்லையெனிலும் ரூனி இஸ் கிரேட்! #Rooneyretires #RooneyMara

வெய்ன் ரூனி – இங்கிலாந்து கால்பந்தின் ஈடு இணையற்ற வீரர். சர்வதேச அரங்கில் இங்கிலாந்தை பல முறை வழிநடத்தியவர். பல சர்வதேச சாதனைகளுக்குச் சொந்தக்காரர். கால்பந்து உலகின் மிகப்பெரிய கெளரவங்களில் ஒன்றான இங்கிலாந்து அணியின் அந்த வெள்ளை நிற ஜெர்சிக்கு கெளரவம் சேர்த்தவர். ஆனால் இனி அவர் அந்த உடையை உடுத்தப் போவதில்லை. பிரீமியர் லீக் தொடரில் 200 கோல்கள் என்ற சாதனையைப் படைத்துவிட்டு, அந்தச் செய்தி காற்றில் உலாவும்போதே தனது சர்வதேச ஓய்வையும் அறிவித்துள்ளார் ரூனி. அவரது கால்பந்துப் பயணத்தை…அந்தப் பயணங்களில் அவர் தொடாத இலக்குகளை, அவர் கண்டுணர்ந்த சிகரத்தை அலசுவோம்.

 ரூனி

தன் 17வது வயதில் இங்கிலாந்து அணிக்காக அறிமுகமானார் ரூனி. அப்போது மிக இளம் வயதில் இங்கிலாந்து அணிக்காகக் களம் கண்டவர் ரூனி தான். 1966 உலகக்கோப்பைக்குப் பிறகு சர்வதேசத் தொடர்களில் சோபிக்கத் தவறிய இங்கிலாந்து அணிக்கு மீண்டும் ஒரு சர்வதேச பதக்கத்தை ரூனி பெற்றுத்தருவார் என்று அப்போதே பலரும் ஆருடம் கூறினார்கள். பீலேவைப் போல், மரடோனாவைப் போல் இங்கிலாந்து மண்ணில் ஒருவன் அவதரித்துவிட்டான் என்றே கருதினர். ரூனியும் அதற்கு ஏற்றார்போல் இளம் சூறாவளியாகவே களத்தில் கலக்கினார். இங்கிலாந்து அணிக்காக இளம் வயதில் கோலடித்தவர் என்ற பெருமையும் இவரின் வசமே.

ஆனால் ரூனியால் அந்த எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்ய முடியவில்லை. பெக்கம், ஜெரார்டு, லாம்பார்டு, டெர்ரி என உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் நிறைந்திருந்த இங்கிலாந்து அணி ஒவ்வொரு பெரிய தொடரிலும் சொதப்பியது. யூரோ கோப்பைகளில் போராடிய ரூனியும் கூட உலகக்கோப்பைகளில் ஒவ்வொரு முறையும் சரண்டர் ஆகிவிட்டார். அதுவும்  உலகக்கோப்பையில் கோலடிக்க  அவருக்கு 3 தொடர்கள் தேவைப்பட்டன. 2006ல் முடியவில்லை. 2010- உலகக் கோப்பையிலும் போராடிப் பார்த்து தோற்றுப்போனவர், ஒருவழியாய் 2014 பிரேசில் உலகக்கோப்பையில் உருகுவேவிற்கு எதிராய் அந்த தீராக்கனவை தீர்த்துக்கொண்டார். 

இப்படி பெரிய ஏமாற்றங்களைச் சுமந்துகொண்டுதான் ஒவ்வொரு முறையும் அந்த வெள்ளை உடையை உடுத்தியிருந்தார் ரூனி. ஆனால் அவற்றுக்கு நடுவே அவர் செய்த சாதனைகள் அலப்பறியது. சர்வதேச அரங்கில் 50 கோல்கள் என்பதே மிகப்பெரிய மைல்கல். அதுவும் ஐரோப்பிய யூனியனைச் சார்ந்த ஒருவீரருக்கு அது இன்னும் கடினமான விஷயம். காரணம் அவர்கள் எதிர்த்து விளையாடும் அணிகள் பெரும்பாலும் பலம் வாய்ந்தவையாக இருக்கும். அந்த மைல்கல்லை கடந்த ஆண்டு அடைந்தார் ரூனி. கிட்டத்தட்ட சுமார் 46 ஆண்டுகள் எந்த இங்கிலாந்து வீரராலும் தொடமுடியாத சாதனையைத் தகர்த்தெறிந்தார் ரூனி. அது சர் பாபி சார்ல்டனின் அதிக கோலடித்த இங்கிலாந்து வீரரென்ற சாதனை. 49 கோல்கள் அடித்து 46 ஆண்டுகளாய் அச்சாதனையைச் சொந்தம் கொண்டாடிவந்தவரின் சாதனையை நெருங்கிய ஒரே ஆள் ரூனி தான். அதை நொறுக்கிய ஒரே ஆளும் ரூனி தான்!

ரூனி

இதுவரை 119 போட்டிகளில் இங்கிலாந்து அணிக்காக விளையாடியுள்ள ரூனி 53 கோல்கள் அடித்துள்ளார். 119 போட்டிகளில் 53 கோல்கள் என்பதொன்றும் மாபெரும் விஷயமல்ல. ஆனால் ரூனி அடித்தது பெரிய விஷயம் தான். காரணம் அவர் தனக்கென்று ஒரு ஆஸ்தான பொசிஷனை வைத்துக்கொண்டு அதில் மட்டுமே ஆடியவர் அல்ல. ஏறக்குறைய முன்களத்திலும் நடுகளத்திலும் இருக்கும் ஒவ்வொரு பொசிஷனிலும் விளையாடியுள்ளார். போர்ச்சுகல், அர்ஜென்டினா அணிகளெல்லாம்  ரொனால்டோவிற்கும், மெஸ்ஸிக்கும் ஏற்றார்போல் தங்கள் அணியின் ஃபார்மேஷன்களை அமைத்துக்கொள்ளும். ஆனால் ரூனி தன் பயிற்சியாளர்களுக்கு மாபெரும் ஆயுதமாகவே இருந்தார். 

தன் அணியில் இன்னொரு ஃபார்வேர்டு வீரர் நல்ல ஃபார்மில் இருந்தால், ‘ஃபால்ஸ் 9’ எனப்படும் இரண்டாவது ஸ்டிரைக்கர் பொசிஷனில் விளையாடுவார். 4-3-3 ஃபார்மேஷனில் விளையாட பயிற்சியாளர் முடிவெடுத்தால் வலது விங்கிலோ, இடது விங்கிலோ ஆடத்தயாராக இருப்பார். நடுகளத்தை பலமாக்க நினைத்தால் பிளேமேக்கராக மாறுவார். அணியின் தடுப்பாட்டம் சற்றுத் தடுமாறும்போது ஹோல்டிங் மிட்ஃபீல்டராகி அணியை நிலைப்படுத்துவார். இப்படி அணிக்காக முழுவதுமாய் வளைந்து கொடுக்கக் கூடியவர் ரூனி. கொஞ்சமும் சுயநலம் இல்லாதவர். இந்தக் குணம்தான் மான்செஸ்டர் யுனைடட் அணியில் இவர் புரிந்த சாதனைகளுக்கும், அந்த அணி ரூனியால் அடைந்த வெற்றிகளுக்கும் காரணம். 

“ரூனிக்கு ஓய்வளிக்க நாங்கள் நினைத்தால், அவரோடு போராட வேண்டியிருக்கும். அவ்வளவு சீக்கிரம் ஓய்வெடுக்க சம்மதிக்கமாட்டார். விட்டால் தன் வாழ்நாளின் ஒவ்வொரு நொடியும் அவர் கால்பந்து விளையாடிக்கொண்டே இருப்பார்” என்று அவரைப் புகழ்ந்துள்ளார் இங்கிலாந்து அணியின் முன்னாள் பயிற்சியாளர் ராய் ஹாட்சன். இதுவே ரூனியின் கமிட்மென்டுக்கு உதாரணம்.

ரொனால்டோ மான்செஸ்டர் யுனைடட் அணியில் ஆடிய காலத்தில்தான் ரூனியும்  வாங்கப்பட்டார். உலகம் உற்றுப்பார்த்த இரு இளம் வீரர்கள் ஒரே அணியில். கொஞ்சம் ஈகோ தலைதூக்கியிருந்தாலும் இரு வீரர்களுக்கும் பெரும் பின்னடைவாய் இருந்திருக்கும். ஆனால் ரூனி ரொனால்டோவிற்குப் பெரும் பக்கபலமாகவே இருந்தார். சற்றும் சுயநலம் இல்லாது விளையாடக்கூடிய அவரை வெறுக்கும் ரசிகனோ, எதிரணி வீரரோ இருக்கவே முடியாது. களத்தில் அவ்வப்போது ஆக்ரோஷம் காட்டி சிவப்பு அட்டைகள் வாங்கியிருக்கிறார், அடிக்கடி மஞ்சள் அட்டை வாங்கியிருக்கிறார். ஆனால் யார் மீதும் தனிப்பட்ட முறையில் காழ்ப்புணர்வு கொண்டதில்லை. அப்படியொரு ஜென்டில்மேன் ரூனி.

ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக ரூனியின் கால்பந்து வாழ்க்கை பாதாளம் நோக்கிப் பயணித்தது என்பதே உண்மை. மான்செஸ்டர் யுனைடட் அணியின் பிளேயிங் லெவனில் தனது இடத்தை இழந்தார். இளம் வீரர்கள் பலரும் துடிப்புடன் ஆட, இங்கிலாந்து அணியிலும் இவரது இடம் கேள்விக்குறியாகவே இருந்தது. “கேப்டனாக இருப்பதனால் தான் அவர் அணியில் இருக்கிறார்” என்று பலரும் குற்றஞ்சாட்டினர். யூரோ’16ல் கத்துக்குட்டி ஐஸ்லாந்திடம் தோற்று இங்கிலாந்து வெளியேறியபோதே இவரது ஓய்வு குறித்து விமர்சனங்கள் உரக்க ஒலித்தன. எங்கு ஒதுக்கப்பட்டு மோசமான தருணத்தில் அவர் வெளியேற வேண்டுமோ என்று ரசிகர்கள் வருந்தினர். ஆனால் தன் நிலையை தானே தலைகீழாய் மாற்றி கெத்தாய் ஒய்வை அறிவித்துள்ளார் ரூனி.
    

வெய்ன் ரூனி

மான்செஸ்டர் அணியில் இடத்தை இழந்த ரூனியின் கால்பந்து எதிர்காலமே சற்று கேள்விக்குறியாகத்தான் இருந்தது. தான் இளம் வயதில் விளையாடிய தன் சொந்த ஊரைச் சேர்ந்த எவர்டன் அணிக்கு மீண்டும் திரும்பினார் ரூனி. ஆனால் அங்கு அவருடைய பங்களிப்பு என்னவாக இருக்குமென்பதும் கேள்வியாகவே இருந்தது. அணியில் இணைந்த முதல் போட்டியிலேயே கோலடித்து அசத்தினார். ஆனால் அதற்கடுத்த போட்டிகளில் பெரிதாக சோபிக்காததால் “பிரீமியர் லீக் தொடரில் தொடர்ந்து களமிறக்கப்படுவாரா?” என்ற சந்தேகம் ஏற்பட்டது. அதையெல்லாம் உடைக்கும் வகையில் பிரீமியர் லீக் தொடரின் முதல் போட்டியில் கோலடித்து “ஐ ஏம் பேக்” என்று அறைகூவல் விடுத்தார் ரூனி. அந்தப் போட்டியில் அவரது சிங்கிள் கோலே அணிக்கு வெற்றி தேடித்தந்தது. அடுத்த போட்டி கடந்த செவ்வாய் அதிகாலை, தன் முன்னாள் வைரி மான்செஸ்டர் சிட்டி அணியோடு. பலம் வாய்ந்த சிட்டி அணிக்கெதிராக சந்தேகத்திற்கு இடையே தான் களம் கண்டார் ரூனி. இம்முறையும் இந்த ஜாம்பவான்தான் தனது அணிக்காக மீண்டும் கோலடித்தார். அது பிரீமியர் லீக் தொடரில் அவர் அடித்த 200வது கோல்.  பல இளம் நட்சத்திரங்களின் மீதும் புது சூப்பர் ஸ்டார்களின் மீதும் மட்டுமே பார்வை செலுத்திக்கொண்டிருந்த அனைவரையும் திரும்பிப்பார்க்க வைத்தார் ரூனி. மீண்டும் பழைய ரூனி வந்துவிட்டாரா என்று அனைவரும் காத்திருக்க, அடுத்த இரண்டாவது நாளில் இந்த அதிர்ச்சி முடிவை வெளியிட்டுள்ளார் ரூனி.

அனைவரும் தூற்றிய சமயம் ஓய்வை அறிவித்து சாதாரணமாய்ப் போகாமல், தன்னைத் தூற்றியவரையெல்லாம் வாய்பிளக்க வைத்துவிட்டு, ஓய்வை அறிவித்து அவர்களையே பாராட்டவும் வைத்துள்ளார் இந்த நாயகன். இளம் வீரர்கள் அவரது இடத்தைத் தற்போது நிரப்பிவிட்டாலும் இங்கிலாந்து கால்பந்தின் வரலாற்றில் ஒரு பெறிய வெற்றிடம், நிரப்பமுடியாத ஒரு வெற்றிடம் உருவாகியுள்ளது. “கனவுகள் நனவாகும். அப்படிப்பட்ட ஒன்றுதான் நான் இங்கிலாந்து அணிக்காக விளையாடியது. இங்கிலாந்து உடையணிந்து விளையாடிய ஒவ்வொரு தருணமும் பெருமை வாய்ந்தது” என்று நெகிழ்ந்துள்ளார் அவர். ரூனி கால்பந்தை நேசிக்கும் ஒவ்வொரு ரசிகனும் நேசிக்கும் ஜென்டில்மேன் ஃபுட்பாலர். 

உங்களுக்கு ரூனி பத்தித் தெரியாதா? அவரோட திறமையைத் தெரிஞ்சிக்க இந்த ஒற்றை வீடியோ போதும்.


டிரெண்டிங் @ விகடன்