மேவெதர் புதிய உலகச் சாதனை! | Floyd Mayweather beats Conor McGregor by TKO, improves record to 50-0

வெளியிடப்பட்ட நேரம்: 12:50 (27/08/2017)

கடைசி தொடர்பு:12:50 (27/08/2017)

மேவெதர் புதிய உலகச் சாதனை!

தொழில்முறை குத்துச்சண்டைப் போட்டிகளில் தொடர்ச்சியாக 50 போட்டிகளில் வென்று அமெரிக்க வீரர் ஃபிளாயிட் மேவெதர் புதிய சாதனை படைத்தார். 


அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நடந்த போட்டியில் அயர்லாந்து வீரர் கனோர் மெக்கிரிகோரை அவர் எதிர்கொண்டார். குத்துச்சண்டை வரலாற்றில் மிகப்பெரும் போட்டிகளில் ஒன்றாக இந்த போட்டி கருதப்பட்டது. 40 வயதான மேவெதர், இதுவரை பங்கேற்ற 49 போட்டிகளிலும் வெற்றியைப் பதிவு செய்தவர்.

கடந்த 2015-ம் ஆண்டில் ஓய்வுபெறுவதாக அறிவித்த அவர், ஓய்வு முடிவைக் கைவிட்டு மீண்டும் குத்துச்சண்டை களத்தில் இறங்கினார். அதனால், மேவெதர் - மெக்கிரிகோர் இடையிலான போட்டி உலக அளவில் குத்துச்சண்டை ரசிகர்களால் உற்றுநோக்கப்பட்டது. லாஸ்வேகாஸ் நகரின் டி-மொபைல் அரீனா மைதானத்தில் நடந்த இந்த போட்டியைக் காண முன்னாள் குத்துச்சண்டை சாம்பியன் மைக் டைசன் உள்ளிட அமெரிக்காவில் பிரபலங்கள் பலரும் நேரில் வந்திருந்தனர்.

போட்டியின் தொடக்கத்தில் சிறிது தடுமாறினாலும், பின்னர் சுதாரித்த மேவெதர், டெக்னிக்கல் நாக் அவுட் முறையில் 10ஆவது சுற்றில் மெக்கிரிகோரை வீழ்த்தினார். தொழில்முறை குத்துச்சண்டை போட்டிகளில் மேவெதரின் தொடர்ச்சியான 50ஆவது வெற்றி இதுவாகும். இதன்மூலம், தொடர்ச்சியாக 49 வெற்றிகளைப் பதிவு செய்திருந்த முன்னாள் உலகச் சாம்பியன் ராக்கி மார்சியானோவின் சாதனையை அவர் முறியடித்தார். 


[X] Close

[X] Close