வெளியிடப்பட்ட நேரம்: 19:30 (27/08/2017)

கடைசி தொடர்பு:09:32 (28/08/2017)

டெஸ்ட் போட்டியின் முதல் நாளிலேயே ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சியளித்த வங்கதேசம்!


ஆஸ்திரேலிய அணி தற்போது, வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளது. அங்கு, மூன்று போட்டிகள்கொண்ட டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் மோத உள்ளன. முதல் டெஸ்ட் போட்டி, டாக்காவில் இன்று தொடங்கியது. வங்கதேச அணி முதலில் பேட் செய்தது. தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கியது முதலே, அந்த அணிக்கு அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்தன. 

ஆஸ்திரேலியா - வங்கதேசம்


ஆனால், மறுபக்கம் தொடக்க ஆட்டக்காரர் தமீம் இக்பால் மற்றும் ஷக்கிப் ஆகியோர் நிதானமாக ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டனர். ஷக்கிப் 84 ரன்களும், இக்பால் 71 ரன்களும் எடுத்தனர். அந்த அணி, முதல் இன்னிங்ஸில் 260 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலியா தரப்பில் கமின்ஸ் லியோன், அகார் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.


இதையடுத்து, முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஆஸ்திரேலிய அணி சுதாரிப்பதற்குள் அடுத்தடுத்து மூன்று விக்கெட்டுகளைக் கைப்பற்றி, சொந்த மண்ணில் கெத்துகாட்டியது வங்கதேசம். வார்னர் 8, கவாஜா 1, லியோன் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர்.


முதல் நாள் ஆட்ட நேர முடிவில், ஆஸ்திரேலிய அணி மூன்று விக்கெட்டுகள் இழப்புக்கு 18 ரன்கள் எடுத்தது. ரென்ஷா 6, கேப்டன் ஸ்மித் 3 ரன்களுடன் களத்தில் உள்ளனர். 
 

"சொந்த மண்ணில் எங்களை வீழ்த்த முடியாது" என்று அந்த அணியின் ஷக்கிப் தொடர் தொடங்குவதற்கு முன் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.