வெளியிடப்பட்ட நேரம்: 08:50 (28/08/2017)

கடைசி தொடர்பு:08:52 (28/08/2017)

'அடுத்த இரு போட்டிகளில் புதியவர்களுக்கு வாய்ப்பு' - கோலி

இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகளில் விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை 3-0  என்று வென்ற நிலையில், நேற்று நடந்த மூன்றாவது ஒருநாள் போட்டியிலும் வெற்றிபெற்று தொடரைக் கைப்பற்றியது.

விராத் கோலி


ஐந்து போட்டிகள்கொண்ட தொடரில், இரண்டு போட்டிகள் மீதம் இருக்கையிலேயே இந்திய அணி தொடரை வென்றுவிட்டது. இது, இந்திய அணி இலங்கை அணிக்கு எதிரான இருநாட்டு தொடரில் தொடர்ச்சியாக வெல்லும் ஏழாவது தொடர் ஆகும். 

மகேந்திர சிங் தோனி நேற்று கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்து, உலக சாதனையை சமன்செய்துள்ளார். அதாவது, இதுவரை 72 முறை ஆட்டமிழக்காமல், இன்னிங்ஸ் முடியும் வரை களத்தில் இருந்துள்ளார். இதற்கு முன்னர், இலங்கையின் சமிந்தா வாஸ் மற்றும் தென்னாப்பிரிக்காவின் ஷான் பொல்லாக் ஆகியோர் 72 முறை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்துள்ளனர். தற்போது தோனி அந்த சாதனையைச் சமன்செய்துள்ளார். 

போட்டி முடிந்த பின்னர் பேசிய இந்திய கேப்டன் கோலி, "சிறிய இலக்கை எதிர்த்து விளையாடுவது எப்போதுமே தந்திரமானது. பும்ரா, கடந்த போட்டியில் தவறவிட்ட 5 விக்கெட்டுகளை இந்த முறை எடுத்துவிட்டார். ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகளில் அவர் சிறந்த பந்துவீச்சாளர். ஏற்கெனவே தொடரை வென்றுவிட்டதால், அணியில் இருக்கும் மற்ற வீரர்களுக்கும் அடுத்த இரு போட்டியில் வாய்ப்பளிக்கப்படும்" என்றார். இந்திய அணியில் ஷர்துல் தாகூர், மனிஷ் பண்டே, குல்தீப் யாதவ் போன்ற வீர்களுக்கு அடுத்த இரு போட்டிகளில் வாய்ப்பு வழங்கப்படும்.