"பெண்கள் பைக் ஓட்டுறதை விசித்திரமா பார்க்காதீங்க ப்ரோ!’’ கோவையின் பறக்கும் ராசாளிகள்

பைக்

முன் இருக்கையில் குழந்தை, பின் இருக்கையில் மனைவியுடன் பார்த்துப் பார்த்து கவனமாகச் செல்லும் பொறுப்பான குடும்பத் தலைவன், காதில் ஹெட்போன் மற்றும் கண்களில் கூலிங்கிளாஸ் அணிந்து சீறிப் பறக்கும் ஜூன்ஸ் இளைஞன்... 'பைக்' என்ற வார்த்தையைச் சொன்னதும், இப்படிப் பல்வேறு ஆண்களையே மனது தொடர்புப்படுத்திப் பார்க்கும். ’பைக்கிங் கிளப்’, ‘லாங் ரைய்டு’ என்பதெல்லாம் ஆண்கள் சம்பந்தப்பட்டது என்று பலரும் நினைக்கிறார்கள்.. 

''அவங்க எல்லாம் அப்டேட் ஆகுங்கப்பா... குழந்தைகளை டியூஷன் கொண்டுபோய் விடறதுக்கும், காய்கறி வாங்க மார்க்கெட் போறதுக்கும் ஸ்கூட்டி யூஸ் பண்றவங்கதான் பெண்கள் என்பது ரொம்ப பழசு. R15 ரக பைக்கை எடுத்துக்கிட்டு ஹைவேயில் பறக்கும் ராசாளிகள் நிறைய பேர் இருக்கோம்'' என்று ஆக்ஸிலேட்டரை முறுக்குகிறார்கள் பல இளம் பெண்கள். 

'விமன் எம்பவர்மென்ட்' என்ற பெயரில், பெண்கள் மட்டுமே பங்கேற்கும் 'பைக் ராலி' கடந்த வாரம் கோவையில் நடந்தது. 80-க்கும் மேற்பட்டோர் இதில் கலந்துகொண்டனர். துடியலூரில் ஆரம்பித்து கேரளாவின் அங்காளி வரையிலான பயணம். நடுவில், ஆணைக்கட்டியில் மரம் நடும் நிகழ்வுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கல்லூரி மாணவிகளில் ஆரம்பித்து கல்யாணமான குடும்பத் தலைவி வரை பலதரப்பட்ட வயதினரும் உற்சாகமாக வந்திருந்தனர். 

பைக்

டிராக் ரேசிங்கில் தமிழகத்தின் ரெப்ரசென்ட் என அறிமுகப்படுத்தப்பட்ட ஐஸ்வர்யா, ''எனக்கு வயசு 23. இரண்டரை வருஷமா புரொபசனல் பைக்கிங்ல இருக்கேன். அஜித் ரசிகையான நான், அவரைப் பார்த்துத்தான் பைக் ஓட்ட ஆரம்பிச்சேன். பின்னாடி விர்ரு விர்ருன்னு பைக்கை ரைஸ் பண்ற சத்தம் கேட்குதா? அதுதாங்க பைக் மேலான கிரேசுக்கு காரணம்” என்று ஒரு கையில் தலைக்கவசத்துடன், மறு கையால் தலைமுடியை கோதியவாறு புன்னகைக்கிறார். 

பைக்

FZ பைக்கில் சாய்ந்து நின்றிருந்தார் அம்சபிரியா. அவருக்கு அருகில் நின்றிருந்த தந்தை, “என் பொண்ணு கோயம்புத்தூரில்தான் படிக்குது. சின்ன வயசிலிருந்தே டூவீலர் மேலே அவ்வளவு ஆசை. 'பைக் ஓட்டட்டுமாப்பா'னு கேட்டதும், தைரியமா ஓட்டுன்னு சொல்லிட்டேன். கீழே விழுந்து அடிப்பட்டுக்காமல் கவனமா இருந்தால் சரி'' என்கிறார்.  ''என் அப்பா, மகள்களைப் பெற்றிருக்கும் தந்தைகளுக்கு எல்லாம் ஒரு ரோல் மாடல்'' எனச் சிரிக்கிறார் அம்சபிரியா. 

மழையில் பைக் ஓட்ட வேண்டும், வேகமாக பைக் ஓட்டும்போது முகத்தில் அடிக்கும் தென்றலை உணர வேண்டும். பைக்கை விரட்டிப் பறக்கும்போது, உலகமே திரும்பிப் பார்க்க வேண்டும், மலைப்பாதையில் ஆண் தோழனைப் பின் அமரவைத்து செல்ல வேண்டும், கெத்தாக டீக்கடை முன்பு பைக்கை நிறுத்தி ‘சியர்ஸ்’ சொல்லி டீ குடிக்க வேண்டும், வார இறுதி நாளில் அனைத்துப் பணிகளிலிருந்தும் விடுபட்டு பைக்கில் துரமாக தொலைந்துவிட்டுத் திரும்ப வேண்டும் என ஒவ்வொருவரும் தங்களது ஆசையைப் பகிர்ந்துகொண்டபோது, உலகத்தை கைக்குள் அடக்கும் வேகம் தெரிந்தது. 

bike

“போட்டோகிராபர் தம்பி... எல்லாப் பொண்ணுகளையும் வளைச்சு வளைச்சு போட்டோ எடுத்துட்டிருக்கீங்க போல? கொஞ்சம் இந்தப் பக்கமும் வந்து என்னையும் எடுங்க. என் மகன் கல்யாணத்துக்கு உங்களையே போட்டோ புடிக்கக் கூப்பிடறேன்“ எனக் கிண்டலாக அழைத்தார் உமா பாலாஜி. 40 வயதாகும் அவர், கல்லூரிப் பெண்களுக்கு இணையாகத் தனது ரைடிங் அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார். தனக்கு சப்போர்டிவ்வாக இருந்து ஊக்கப்படுத்தும் கணவரை மறக்காமல் சொன்னார். 

அவர்கள் யாரிடமும் 'why boys should have all the fun?' என்ற மனோபாவம் இல்லை. “பசங்க மட்டும்தான் பைக் ஓட்டணுமானு கேட்டு வீம்புக்காக ஓட்ட ஆரம்பிக்கலை. பைக் ஓட்ட பிடிச்சிருக்கு. அதனால் ஓட்டுறோம், அவ்வளவுதான். எந்த ஒரு விஷயமும் ஒரு பாலினத்தவருக்கு மட்டுமே சொந்தமாகாது'' என்கிறார்கள். 
​ 
காலை எட்டு மணிக்குக் கொடி அசைக்கப்பட்டது. பல்சர், ராயல் என்பீல்டு, அப்பாசி என ஒவ்வொன்றும் உறும ஆரம்பித்தது. தலைக்கவசத்தை அணிந்தவாறு அந்த ராசாளிகள் ஒருவர் பின் ஒருவராக சீறிக் கிளம்பினார்கள். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!