வெளியிடப்பட்ட நேரம்: 21:23 (28/08/2017)

கடைசி தொடர்பு:21:23 (28/08/2017)

ரசிகருக்காக சண்டையிட்ட அகுவேரா… தந்தை சுடப்பட்டும் களம் கண்ட பெசிச்... ப்ரீமியர் லீக் அப்டேட்!

ப்ரீமியர் லீக் கால்பந்து போட்டி, இந்த வாரம் வழக்கமான அதே விறுவிறுப்போடு நடந்து முடிந்தது. செல்சீ, மான்செஸ்டர் யுனைடெட், மான்செஸ்டர் சிட்டி, லிவர்பூல் ஆகிய அணிகள் இந்த வாரம் வாகை சூடின. முன்னணி அணிகளில் ஆர்சனல் மட்டும் தோல்வியைத் தழுவியது. விளையாட்டையும் தாண்டி நெகிழ்ச்சியான சில சம்பவங்கள் இந்த வாரம் அரங்கேறின.

ப்ரீமியர் லீக்

ரசிகருக்காக சண்டையிட்ட அகுவேரோ!

2013-14ம் ஆண்டு சீஸனின் சாம்பியனான மான்செஸ்டர் சிட்டி அணி, கத்துக்குட்டி போர்ன்மவுத் அணியை எதிர்கொண்டது. கடந்த வாரம் எவர்டன் அணியோடு டிரா செய்ததால், இந்த வாரம் அதிக ஆக்ரோஷத்தோடு களம்கண்டது சிட்டி. ஆனால், போர்ன்மவுத் வீரர் சார்லி டேனியல்ஸ் 13-வது நிமிடத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில் அற்புதமாக கோல் அடித்து அசத்தினார். அதற்கு 21-வது நிமிடத்திலேயே இளம் வீரர் ஜீசசின் மூலம் பதிலடி கொடுத்த சிட்டி அணி, அதன் பிறகு கோலடிக்க முடியாமல் திணறியது. தொடர்ந்து இரண்டாவது போட்டியையும் டிரா செய்தால், கோப்பை வேட்டையில் ஆரம்பத்திலேயே பின்தங்கிடநேரும் என்பதால், பயிற்சியாளர் கார்டியாலோ மிகவும் விரக்தியாக இருந்தார். கடைசிகட்டத்தில் நடுவர்களுடனும் போர்ன்மவுத் பயிற்சியாளர் ஹோவுடனும் வாக்குவாதத்தில்கூட ஈடுபட்டார்.  

கடைசிகட்டத்தில் ஆட்டம் சூடுபிடித்தது. கடந்த ஆட்டத்தில் அணி டிரா செய்ய உதவிய ஸ்டெர்லிங் இந்த முறையும் கோலடித்து அணிக்கு வெற்றி தேடித்தந்தார். கடைசி நிமிட கோல் என்பதால், வீரர்கள் அனைவரும் உணர்ச்சிவசப்பட்டு தங்கள் அணி ரசிகர்கள் இருந்த இடத்துக்குள் புகுந்தனர். ரசிகர்களும் உற்சாகத்தில் மைதானத்துக்குள் புகுந்து வீரர்களைக் கட்டித்தழுவினர். ரசிகர்களை வெளியேற்ற அங்கு வந்த பாதுகாவலர் ஒருவர், சிட்டி அணியின் ரசிகர் ஒருவரை கீழே தள்ளிக் கடுமையாக நடந்துகொண்டார். அந்த ரசிகரை அவரிடமிருந்து காப்பாற்ற சிட்டி அணி வீரர் அகுவேரோ, அந்தப் பாதுகாவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதனால் மைதானத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாவலரிடம் தகராறு செய்ததற்காக அகுவேரோ மீது போர்ன்மவுத் அணி நிர்வாகம் குற்றம்சாட்டியது. தங்கள் அணியின் ரசிகருக்காகத்தான் அவர் சண்டையிட்டார் என்பதால் அந்தக் குற்றச்சாட்டு திரும்பப் பெறப்பட்டது.

யுனைடெட் தொடர்ந்து ஆதிக்கம்

முதல் இரு போட்டிகளில் பட்டையைக் கிளப்பிய மான்செஸ்டர் யுனைடட் அணி, இந்த வாரமும் தன் வெற்றிப் பயணத்தைத் தொடர்ந்தது. லெய்செஸ்டர் அணியோடு மோதிய அந்த அணி 2-0 என வெற்றி கண்டு தொடர்ந்து முதல் இடத்தில் நீடிக்கிறது. ரேஷ்ஃபோர்டு, ஃபெல்லாய்னி கோல் அடித்து வெற்றிக்கு உதவினர். மூன்று சுற்றுகளின் முடிவில் யுனைடெட் அணி மட்டுமே மூன்று போட்டிகளிலும் வென்றுள்ளது. மூன்று போட்டிகளில் 10 கோல்கள் அடித்த யுனைடெட் அணி, இதுவரை ஒரு கோல்கூட விடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மான்செஸ்டர் யுனைடெட் அணி விளையாடுவதைப் பார்க்க, அந்த அணியின் தீவிர ரசிகரும் ஓட்டப்பந்த சாம்பியனுமான உசேன் போல்ட் வந்திருந்தார்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட லிவர்பூல் –ஆர்சனல் ஆட்டத்தில், லிவர்பூல் 4-0 என அபார வெற்றி பெற்றது. எப்போதும் பெரிய அணிகளைப் பந்தாடிவிட்டு, கத்துக்குட்டிகளிடம் அடிபடுவதை வழக்கமாகக்கொண்ட லிவர்பூல் அணி, ஆர்சனலை தொடக்கத்திலிருந்தே பதம் பார்த்தது. லிவர்பூல் அணியின் தாக்குதல் ஆட்டத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் ஆர்சனல் மிகவும் திணறியது. பின்களத்தில் அவர்கள் பல தவறுகள் செய்ய, அது லிவர்பூல் அணிக்கு சாதகமாக மாறியது. ஃபிர்மினோ, சலா, மனே, ஸ்டரிட்ஜ் ஆகியோர் கோலடித்தனர். ஆர்சனல் அணி மூன்று போட்டிகளில் அடைந்த 2-வது தோல்வி இது.

Usain Bolt - ப்ரீமியர் லீக்

தந்தை சுடப்பட்டும் களம் புகுந்த பெசிச்!

ஸ்டாம்ஃபோர்டு பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் செல்சீ அணி, எவர்டனை 2-0 என வீழ்த்தியது. புதிய நட்சத்திரம் அல்வாரோ மொரடா ஃபேப்ரகாஸ் கோலடிக்கக் காரணமாக அமைந்ததோடு, தானும் ஒரு கோலடித்து அசத்தினார். இதன்மூலம் ப்ரீமியர் லீக் வரலாற்றில், தன் அணியின் சொந்த மைதானத்தில் தான் ஆடிய முதல் இரண்டு போட்டிகளிலும் தலா ஒரு கோலும், அசிஸ்டும் செய்த முதல் வீரர் என்ற பெருமையை மொரடா பெற்றார். இந்தப் போட்டிக்கான எவர்டன் அணியில் போஸ்னிய வீரர் முகமது பெசிச் இடம்பெற்றிருந்தார்.

சனிக்கிழமை அன்று பெசிச்சின் தந்தை மெஹோ பெசிச், ஒருவரால் கையிலும் காலிலும் சுடப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அந்நிலையிலும் அவர் தன் அணிக்காக ஞாயிறு அன்று களமிறங்கினார். ``இதுபோன்ற தருணங்களில் களமிறங்குவது அந்தக் குறிப்பிட்ட வீரரின் முடிவுதான். இந்தச் சூழ்நிலையில் களம் கண்ட பெசிச்சின் அர்ப்பணிப்பு அசாத்தியமானது. அவர் தன் குடும்பத்துடன் தொலைபேசியில் பேசினார். போட்டி முடிந்ததும் அவர் குடும்பத்துடன் தொடர்புகொண்டு அவர்களுக்குத் தேவையானதைச் செய்வோம்'' என்று எவர்டன் அணியின் பயிற்சியாளர் கீமேன் தெரிவித்தார்.  

இந்தப் போட்டியில் எவர்டன் வீரர் ஆரோன் லெனானும் மாற்று வீரராகக் களம்கண்டார். சில மாதங்களுக்கு முன்பு தீவிர மன அழுத்த நோயால் பாதிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்து அணிக்காக விளையாடியுள்ள 30 வயது லெனான், ஏப்ரல் மாதத்திலிருந்து தீவிர மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொண்டு மீண்டும் இந்த மாதம் களம் கண்டுள்ளார். அந்த இரு வீரர்களின் அர்ப்பணிப்பையும் அனைத்து கால்பந்து ரசிகர்களும் பாராட்டினர்.

தொடரும் வெம்ப்ளி சோகம்!

ப்ரீமியர் லீக்

கடந்த சீஸனில் இரண்டாவது இடம் பிடித்திருந்த டாட்டன்ஹாம் அணி, பர்ன்லி அணியோடு 1-1 என டிரா செய்தது. தங்கள் சொந்த மைதானமான ‘வைட் ஹார்ட் லேன்’ கட்டுமான வேலையில் இருப்பதால் அந்த அணி வெம்ப்ளி மைதானத்தில் தனது ‘ஹோம் கேம்’களை விளையாடிவருகிறது. அந்த மைதானம் அவர்களுக்கு ராசியற்ற மைதானமாகவே கருதப்படுகிறது. கடந்த சீஸனில் இங்கு விளையாடிய சாம்பியன்ஸ் லீக் போட்டிகளில் சொதப்பி, தொடரிலிருந்து வெளியேறியது. கடந்த வாரம் செல்சீ அணியிடம் தோற்றது. இந்நிலையில் இந்த வாரமும் பர்ன்லியிடமும் இரண்டு புள்ளிகளை இழந்துள்ளது. வெஸ்ட் புரோம் – ஸ்டோக் சிட்டி அணிகள் மோதிய போட்டியும் 1-1 என டிரா ஆனது. ஹடர்ஸ்ஃபீல்டு – சவுதாம்ப்டன் போட்டியும், வாட்ஃபோர்டு – பிரிட்டன் போட்டியும் ஒரு கோல்கூட அடிக்காமல் டிராவில் முடிவுற்றன.

மற்ற போட்டிகளில் ஸ்வான்சி அணி கிறிஸ்டல் பேலஸை 2-0 எனவும், நியூகாசில் அணி வெஸ்ட்ஹாம் அணியை 3-0 எனவும் வீழ்த்தின. வெஸ்ட் ஹாம், பேலஸ், போர்ன்மவுத் அணிகள் இதுவரை புள்ளிக்கணக்கைத் தொடங்கவில்லை. அதேசமயம் புது வரவான ஹடர்ஸ்ஃபீல்டு அணி ஏழு புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் அமர்ந்துகொண்டு அனைவரையும் ஆச்சர்யப்படவைத்துள்ளது.


டிரெண்டிங் @ விகடன்