''என் பொண்ணு காட்டிய பக்குவம்... அம்மாவா எனக்குப் பெருமிதம்!’’ - நெகிழும் பி.வி.சிந்து அம்மா

பி.வி.சிந்து

ந்திய விளையாட்டு வரலாற்றில் நேற்றைய தினம் மிகவும் முக்கியமான  நாள்.  இந்திய பேட்மின்ட்டனின் நம்பிக்கை நட்சத்திரமான  பி.வி.சிந்து, உலக  சாம்பியன்ஷிப் போட்டியில் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த நசோமி ஒக்குஹாராவிடம் போராடி, ஒரு சில புள்ளிகளில் தங்கம்  பதக்கத்தை தவறவிட்டு,  வெள்ளிப் பதக்கம் வென்றிருக்கிறார். ஏற்கெனவே, உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்றிருந்த சிந்து, இந்த போட்டியில் முதன்முறையாக வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  

இவர்  வெள்ளிப் பதக்கம் வென்றதைவிடவும்,  மிகவும் பரபரப்பான நடந்துமுடிந்த இந்த ஆட்டத்தில்  சிந்து வெளிப்படுத்திய  ஆட்டத்திறமையும் ஆர்ப்பணிப்பும்தான் உலகம் முழுவதும் அவருக்கு பாராட்டுகளைத் தேடி தந்திருக்கின்றது எனலாம். 

பிரதமர் நரேந்திர மோடி, ஆந்திர முதல்வர்  சந்திரபாபு நாயுடு, சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட பலரும் அவருக்கு வாழ்த்து மழை பொழிந்தனர். கடந்த 1983ம் ஆண்டு, பிரகாஷ் படுகோன் உலக சாம்பியன்ஷிப் பேட்மின்ட்டன் போட்டியில்  வெள்ளிப் பதக்கம் வென்றபின்,  பல  ஆண்டுகள் கழித்து, வெள்ளிப் பதக்கம் வென்ற இரண்டாவது இந்தியர் என்ற பெருமைக்குச் சொந்தகாரராகியிருக்கிறார் பி.வி.சிந்து. சிந்து நிகழ்த்திக்காட்டிய இந்த சாதனை குறித்து  அவரின் அம்மா விஜயாவுடன் பேசினோம்.

பி.வி.சிந்து‘சிந்து வெளிநாட்டில் கலந்துக்கிற ஒவ்வொரு போட்டியிலயும் அவர்கூட நான் இருந்திருக்கேன். இந்த முறையும் அவகூட நான் இருந்தேன். விளையாட்டுல வெற்றி-தோல்வி சகஜம்னு அவளுக்கு அடிக்கடி  சொல்லிட்டே இருப்பேன். இந்தப் போட்டியை  பொருத்தவரைக்கும்,  அவ அற்புதமா விளையாடுனானுதான் சொல்லணும்.  விளையாடி முடிச்சதும், அவளுக்கு கொஞ்சம் வருத்தமாதான் இருந்தது. ஆனா, “பரவாயில்ல மா! நான் நல்லாதான் விளையாடினேன். போட்டினு வந்தா, யாராவது ஒருத்தர் ஜெயிக்கணும்; யாராவது ஒருத்தர் தோக்கணும்.  அந்த வகையில்,  எனக்கு வெள்ளிப் பதக்கம் கிடைச்சதுக்கு  சந்தோஷம்தான்மா. இந்த நாள் என்னுடையதில்லைனு நினைக்கிறேன்”னு ரொம்பப் பக்குவமா சொன்னா. அந்த நிமிஷம் அவளை நினைச்சு ரொம்ப பெருமிதமா இருந்தது. இப்படி ஒரு மகள் கிடைச்சது  நான் செஞ்ச பாக்கியம்.  இதேமாதிரிதான், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம்தான் 'ரியோ ஒலிம்பிக்ஸ் போட்டியில்' சிந்து வெள்ளிப் பதக்கம் வாங்கினார். கொஞ்ச நாளைக்கு முன்னாடி இதைப் பத்தி என்கிட்ட சொல்லி மலரும் நினைவுகள்ல மூழ்கிட்டு இருந்தா.   

அப்புறம், இந்தப் போட்டியில, இன்னொரு விஷயத்தையும் கவனிக்கணும்.  அரையிறுதிப் போட்டிக்கு பிறகு, நசோமி ஒக்குஹாராவுக்கு இறுதிப் போட்டியில கலந்துகிட 21 மணிநேரம் கால அவகாசம் இருந்தது. ஆனால், சிந்துக்கு அரையிறுதிப் போட்டிக்கும், இறுதிப் போட்டிக்கும் இடையே 14 மணி நேரம்தான் இருந்தது.  இதுமாதிரியான முக்கியமான  போட்டிகள்ல, இரு போட்டிகளுக்கும் இடையேயான கால அவகாசம்தான் வெற்றியை தீர்மானிக்கும். அந்த கால அவகாசத்தை போட்டியாளருக்கு கட்டாயம் கொடுக்கணும். அப்படியொரு கால அவகாசம் கிடைச்சிருந்தா சிந்து நிச்சயம் தங்கத்தை தட்டிட்டு வந்திருப்பா” என்று சற்றே ஆதங்கத்துடன் கூறியவர், மீண்டும் தொடர்ந்து,  ”இந்தப் பதக்கம் மறுபடியும் சிந்துவுக்கு நல்லதொரு ஆங்கீகாரத்தை கொடுத்திருக்கிறது. இன்னும் 15 நாள்ல அவர் ஜப்பான், கொரியாவுல நடக்கயிருக்கிற போட்டியில கலத்துக்கயிருக்கிறார்.  அவர் தொடர்ந்து உற்சாகமாக விளையாடுவார். அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு” என்பவரின் குரலில் நம்பிக்கை கரைபுரண்டோடுகிறது

உலக சாம்பியன்ஷிப் பேட்மின்ட்டன் போட்டியில் கலந்து கொண்ட சாய்னா நெய்வால் வெண்கலப் பதக்கத்தை தட்டி வந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!