வெளியிடப்பட்ட நேரம்: 21:17 (28/08/2017)

கடைசி தொடர்பு:21:44 (28/08/2017)

தங்கமாக ஜொலிக்கும் வெள்ளி... தொடரும் சிந்துவின் வேட்டை!

`உலக பேட்மின்டனில் வெள்ளி வென்றார் சிந்து. ஃபைனலில் தோல்வியடைந்தார்' இதுதான் நேற்று இரவிலிருந்து இந்தியர்களை உருத்திக்கொண்டிருக்கும் செய்தி. `Sindhu lost the Gold, but she won million hearts'. இது சமூக வலைதளங்களில் பரவிவரும் இந்தியர்களின் ஏக்கம். ஆம், சிந்துவால் தங்கம் வெல்ல முடியவில்லை. மீண்டும் கடைசித் தடையைத் தாண்ட முடியாமல் நின்றுவிட்டார். ஆனால், அவர் தோற்கவில்லை. அவர் தோற்றதாக நீங்கள் நினைத்தால், அந்த வார்த்தைகளின் அர்த்தம்  உங்களுக்குப் புரியவில்லை என்றே பொருள்.

சிந்து

ராஜா `செக்மேட்’டால் காலியானாலும் எதிராளியின்  கடைசிக்கட்டம் வரை செல்லும் சிப்பாயும் வெற்றியாளன்தானே! தண்டனைக்கு எதிராகப் போராடி 26 ஆண்டுகள் கழித்து பரோலில் வந்தவரும் வெற்றியாளன்தானே! தோல்வியைத் துரத்திப் போராடுபவர் யாவரும் வெற்றியாளரே. எனில், சிந்து தோற்கவில்லை. அவரும் வெற்றிபெற்றவரே! தன் உடல் ஒத்துழைக்காவிடிலும் ஒரு நொடிகூட மனம் தளராத சிந்துவின் அந்தப் போராட்டம் போதும் மனங்களை வெல்ல. தங்கம் என்ன அந்த வெள்ளிகூடத் தேவையில்லை.

கிளான்ஸ்கோ நகரத்தின் குளிர்ச்சிக்கு நடுவே அந்த அரங்கத்தில் மட்டும் அவ்வளவு வெப்பம். ``கமான் சிந்து... கமான் சிந்து...'' என்ற கோஷம் அந்த ஆர்க்டிக் பிரதேசத்தில் எதிரொலித்துக்கொண்டே இருந்தது. ஆனால், அந்த நெட்டின் இருபுறங்களிலும் சோர்வு மட்டுமே மிஞ்சியிருந்தது. வியர்வை, ஊற்றாய் வெளியேறிக்கொண்டிருந்தது. சிந்து, நசோமி இருவராலும் தங்களின் முழுத்திறனையும் வெளிப்படுத்த முடியவில்லை. ஆனால், இருவரும் விட்டுத்தரவில்லை, வெற்றிக்காகப் போராடினார்கள்... போராடிக்கொண்டே இருந்தார்கள். சிறு ஓய்வுக்குப் பிறகு திரட்டும் மொத்த எனர்ஜியும், NFS கேமின் நைட்ரோவைப்போல ஒரே ரேலியில் முடிந்தது. ஒவ்வொரு செட்டும் கடைசி வரை இழுபறியாகவே நீடித்தது. ஒவ்வொரு ரேலியும் நீண்டுகொண்டேபோனது. நிற்க முடியாமல் சிறு ஓய்வுக்காகக் களத்திலிருந்து அவ்வப்போது வெளியேறிய இருவரும் மீண்டும் நடுவரின் கண்டிப்பால் மீண்டும் ஆட வந்தனர். அடிக்கடி சோர்வால் அவதிப்பட்டு நேரம் தாழ்த்திய சிந்து, மஞ்சள் அட்டை பெற்றார். நசோமியும் பலமுறை நடுவரால் எச்சரிக்கப்பட்டார். 

P.V.Sindhu

அவ்வளவு சோர்வு. நினைத்திருந்தால் இருவரும் எந்தத் தருணமும் போட்டியிலிருந்து வெளியேறியிருக்கலாம். ஆனால், இருவரும் போராட்டத்தை விடுவதாக இல்லை. 110 நிமிடம். பேட்மின்டன் வரலாற்றின் இரண்டாவது பெரிய போட்டி. 19-21, 22-20, 20-22 என முடிந்த இந்தப் போட்டியை நேரில் பார்த்த வெண்கல மங்கை சாய்னா நேவால், கோபிசந்திடம் ``இந்தப் போட்டியைப் பார்த்தே என் எனர்ஜியை முழுவதுமாக இழந்துவிட்டேன்” என்று சிந்துவைப் பாராட்டினாராம். இந்த வரலாற்றுப் போட்டியில் இவர்களின் போராட்டம் பலருக்கும் ஒரு முன்னுதாரணம். அந்தப் போராட்டம் மதிக்கப்படவேண்டியது. சிந்து தங்கம் வென்றிருந்தாலும், நசோமியும் வெற்றியாளரே! சிந்துவுக்கு நேற்றிரவு கிடைத்தது நிச்சயம் வெற்றிதான். காரணம், சிந்து எந்த வெற்றிக்குப் பிறகும் ஓயவில்லை. ரியோ வெள்ளிக்குப் பிறகு, இன்னும் அதே வேகத்தோடுதான் ஆடிக்கொண்டிருக்கிறார்.

ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளி வென்று வந்த சிந்து, அதன்பிறகு பல போட்டிகளில் தன் வெற்றிப் பயணத்தைத் தொடர்ந்தார். ப்ரீமியர் பேட்மின்டன் லீக் தொடரில் சென்னை ஸ்மேஷர்ஸ் அணியை வழிநடத்தி சாம்பியனாக்கினார். அந்தத் தொடரில் ஐந்து போட்டிகளில் விளையாடி 4-ல் வெற்றி பெற்று அசத்தினார். இரண்டு வாரங்கள் கழித்து நடந்த சையது மோடி சர்வதேசப் போட்டியிலும் சிந்துவே சாம்பியன். அடுத்து மார்சில் இந்தியன் சூப்பர் சீரிஸ் போட்டி. கால் இறுதியில் சாய்னாவோடு மோதினார் சிந்து. 21-16, 22-20 என சாய்னாவை வீழ்த்தி அரை இறுதிக்குள் நுழைந்தார். அதில் 4-ம் நிலை வீராங்கனை சங் ஜி ஹியூனை எதிர்கொண்டார். 21-18, 18-21 எனப் பரபரப்பாகச் சென்ற போட்டியை, மூன்றாவது செட்டில் 21-14 எனப் போட்டுத்தாக்கினார் சிந்து. அடுத்து ஃபைனல், ரியோவில் தங்கத்தை இழந்த கரோலின் மரினோடு. ஆனால், சொந்த ரசிகர்கள் முன்னிலை மரினை அட்டகாசமாக வீழ்த்தி சாம்பியன் ஆனார் சிந்து. இப்போது அதே வேகத்தோடு உலக சாம்பியன்ஷிப்பில் வெள்ளி.

P.V.Sindhu

ஒவ்வொரு முறையும் உலகின் டாப் வீராங்கனைகளுக்குக் கடும் சவால் விடுத்துக்கொண்டிருக்கிறார். எல்லையில் சீனாவின் ஆதிக்கத்தை ராணுவம் அடக்குகிறதோ இல்லையோ, பேட்மின்டன் அரங்கில் சீனப் பெண்களின் ஆதிக்கத்தை அடக்கிக்கொண்டிருக்கிறார் சிந்து. இந்தச் சீற்றம் இன்னும் வேகமெடுக்கும். நேற்று தன்னிடமிருந்து தங்கத்தைப் பறித்த நசோமியின் சொந்த மண்ணான ஜப்பான் மண்ணிலிருந்தே, ஒலிம்பிக் தங்கத்தை நிச்சயம் வென்று வருவார் சிந்து. சிங்கத்தின் வேட்டை தொடருமோ இல்லையோ, சிந்துவின் வேட்டை நிச்சயம் தொடரும்!