வெளியிடப்பட்ட நேரம்: 20:52 (28/08/2017)

கடைசி தொடர்பு:20:52 (28/08/2017)

தினேஷ் கார்த்திக், ஜி.லட்சுமணனுக்கு சிறந்த வீரர் விருது...!

ஒலிம்பிக், உலகக் கோப்பை, உலக சாம்பியன்ஷிப் என சர்வதேச அரங்கில் முத்திரை  பதித்தவர்களை ‘ஜஸ்ட் லைக் தட்’ எனக் கடப்பது நம் நாட்டின் சாபக்கேடு. ஆனால் Arise Steel மற்றும் TNSJA இரண்டும் இணைந்து, தமிழகத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களை ஆண்டுதோறும் விருது வழங்கி கெளரவித்து வருகிறது. வளர்ந்து வரும் இளம் வீரர், வீராங்கனைகளைக் கண்டறிந்து, அவர்களுக்கு ஸ்காலர்ஷிப் வழங்குவதும் TNSJA-வின் ஆக்கப்பூர்வ பணிகளில் ஒன்று. அந்த வரிசையில் இந்த ஆண்டுக்கான விருது வழங்கும் விழா சென்னையில் நேற்று நடந்தது. பி.சி.சி.ஐ தேர்வுக்குழுத் தலைவர் எஸ்.எஸ்.கே.பிரஸாத் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். 

விருது


1975-ல் உலகக் கோப்பை வென்ற இந்திய ஹாக்கி அணியில் இடம்பெற்றிருந்த வி.ஜே.பிலிப்ஸ், இந்தியாவின் முதல் சர்வதேச செஸ் மாஸ்டர் மேன்யல் ஆரோன் ஆகியோருக்கு, தமிழ்நாடு விளையாட்டு நிருபர்கள் சங்கத்தின் (TNSJA)  சார்பில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது. வி.ஜே.பிலிப்ஸ் உலகக் கோப்பையில் தங்கம், வெள்ளி, இரண்டுமுறை ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெள்ளி, ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்றவர். அவரது அண்ணன் ஒலிம்பிக்கில் தங்கம், வெள்ளி, வெண்கலம் வாங்கியவர். சுருக்கமாகச் சொன்னால், தமிழகத்தைப் பொறுத்தவரை அவர்களது குடும்பம்தான் ‛அலங்கரிக்கப்பட்ட ஒலிம்பிக் குடும்பம்‛. ஆனால்,  வழக்கம்போல உரிய நேரத்தில் அவர்களை கெளரவிக்கத் தவறிவிட்டது இந்த அரசு. 

"இத்தனை ஆண்டுகளில் என்னை அடையாளம் கண்டு கெளரவித்தது TNSJA மட்டுமே’’ என திருப்தி அடைந்தார் பிலிப்ஸ். அதோடு, ‘இப்ப உள்ள பசங்க ஜெயிச்சதும் அங்கீகாரம் கிடைக்கணும் நினைக்கிறாங்க’ என அவர் சொன்னதில் அர்த்தம் இருக்கிறது. ஏனெனில், 1975-ல் உலகக் கோப்பை வென்ற இந்திய அணியில் இடம்பெற்றிருந்த பிலிப்ஸுக்கு, மத்திய அரசு அர்ஜுனா விருது வழங்கியது 1999ம் ஆண்டில்... கிட்டத்தட்ட 25 ஆண்டு இடைவெளி. 

கிரிக்கெட்டர் தினேஷ் கார்த்திக் மற்றும் ஆசிய சாம்பியன்ஷிப்பில் 5,000 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்று, சமீபத்தில் லண்டனில் நடந்த உலக தடகள சாம்பியன்ஷிப்பில் முத்திரை பதித்த ஜி.லட்சுமணனுக்கு இந்த ஆண்டின் சிறந்த வீரர்கள் விருது வழங்கப்பட்டது. தந்தை இல்லாத லட்சுமணனை பிள்ளை போல தன் வீட்டில் ஆறு ஆண்டுகளாக வளர்த்து, உலக சாம்பியன்ஷிப் செல்வது வரை வளர்த்து விட்ட எஸ்.லோகநாதன் சிறந்த பயிற்சியாளர் விருதுக்குத் தேர்வாகி இருந்தார். புதுக்கோட்டை புழுதியில் புரண்டு திரிந்த இந்த இளைஞனும், அந்த முதியவரும்தான், இந்நிகழ்ச்சியின் ஹீரோக்கள். 

விருது

பெருமையும், பூரிப்புமாக மேடையேறிய லோகநாதன் ‛‛முதலில் எனக்கு இந்த விருது கிடைக்க காரணமாக இருந்த லட்சுமணனுக்கு நன்றி. எங்களை அடையாளம் கண்டு விருதுக்கு தேர்வு செய்த தேர்வுக்குழுவுக்கு நன்றி. ஆதரவாக இருக்கும் தமிழக தடகள சங்கத்துக்கு நன்றி’’ என்று நன்றிகளை அடுக்கியவர், தனக்காக அல்லாமல், தான் உருவாக்கும் அடுத்த தலைமுறை வீரர்களுக்காக ஒரு கோரிக்கை வைத்தார். ‛இப்ப வரைக்கும் எங்ககிட்ட முழுமையான கிரவுண்ட் இல்லை. 150 மீட்டர் டிராக்தான் இருக்கு. 400 மீட்டர் டிராக் இருந்தா நல்லா இருக்கும்’ என்று அவர் ஒரு கோரிக்கையை முன்வைக்க, அதை ஏற்று, புதுக்கோட்டையில் தடகள வீரர்களின் வசதிக்காக உள்கட்டமைப்பை மேம்படுத்த 15 லட்சம் ரூபாய் தருவதாக உறுதியளித்தார்  Arise Group நிர்வாக இயக்குநர் ஆதவ் அர்ஜுனா. 

Hall of fame மற்றும் சிறந்த வீரர் விருது வாங்கியர்களைப் பற்றிய AV ஒளிபரப்பப்பட்டது. ஒவ்வொன்றும் அடடே ரகம் எனில், ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பில் லட்சுமணன் தங்கம் வென்ற அந்த கடைசி நிமிடங்கள் அல்டிமேட். வீடியோ முடிந்ததும் சபையில் இருந்தவர்கள் அனைவரும் எழுந்து நின்று கைதட்டியதே, லட்சுமணனுக்குக் கிடைத்த ஆகச் சிறந்த கெளரவம். இதை ஆமோதிக்கும் விதத்தில் இருந்தது லட்சுமணன் பேச்சு.

‘‘இந்த விருது எனக்கு ஊக்கம் அளிக்கிறது. கடின உழைப்பின் மீது நம்பிக்கை உள்ளது. இன்னும் என்னை மேம்படுத்த வேண்டும். எப்படியாவது ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல வேண்டும் என்பதே என் லட்சியம்’’ என சுருக்கமாக முடித்துக் கொண்டார் லட்சுமணன். 

 'The Hindu' பத்திரிகையின் முன்னாள் ஸ்போர்ட்ஸ் எடிட்டரான நிர்மல் சேகர் (மறைவு) மற்றும் 'Deccan Chronicle' இதழின் Resident editor ஆர்.மோகன் ஆகியோருக்கு விளையாட்டு நிருபர்களுக்கான வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. கால்பந்து வீரர் நந்தகுமார் மற்றும் டேபிள் டென்னிஸ் வீராங்கனை செலினா தீப்தி இருவரும் இளம் சாதனையாளர்கள் விருதை வென்றனர். 


விருது வென்றவர்கள்: 


சிறந்த வீரர்கள்: தினேஷ் கார்த்திக் (கிரிக்கெட்), ஜி.லட்சுமணன் (ஓட்டப் பந்தயம்)
Award of excellence: பி.அனிதா (கூடைப்பந்து), எஸ்.ஆரோக்கிய ராஜிவ் (தடகளம்), கே.ஜெனிதா ஆன்டோ (செஸ்). 
Hall of fame: வி.ஜே.பிலிப்ஸ் (ஹாக்கி), மேன்யல் ஆரோன் (செஸ்), ஆர்.மோகன் (இதழியல்), நிர்மல் சேகர் (பத்திரிகை)
இளம் சாதனையாளர்கள்: எஸ்.நந்தகுமார் (கால்பந்து), எஸ்.செலினா தீப்தி (டேபிள் டென்னிஸ்)
சிறந்த அணி: விஜய் ஹசாரே வென்ற தமிழ்நாடு கிரிக்கெட் அணி
சிறந்த இளம் அணி: 14 வயதிற்குட்பட்ட தமிழக ரக்பி அணி
சிறந்த பயிற்சியாளர்: எஸ்.லோகநாதன் (தடகளம்)
ஸ்காலர்ஷிப் பெற்றவர்கள் (ஒவ்வொருவருக்கும் தலா ரூ.30,000): ஆர்.மோகன் குமார் (தடகளம்), சங்கர் முத்துசாமி (பேட்மின்டன்), பி.பாலதனேஷ்வர் (கூடைப்பந்து), பி.ஜீவானந்தம் (கூடைப்பந்து), இனியன் (செஸ்), கே.பிரியங்கா (செஸ்), ஆர்.அதிதி (கால்பந்து), பி.ஜோதிகா (படகுப்போட்டி), எஸ்.ஸ்ரீகிருஷ்ணா (ஸ்னூக்கர்), எஸ்.யாஷினி (டேபிள் டென்னிஸ்), பிரயேஷ் சுரேஷ் ராஜ் (டேபிள் டென்னிஸ்), தக்ஷினேஸ்வர் சுரேஷ் (டென்னிஸ்).

நீங்க எப்படி பீல் பண்றீங்க